Ponniyin selvan 2 - தமிழ்நாட்டில் பலத்த அடி - பொன்னியின் செல்வன் 2 வசூல் இவ்வளவுதானா?
சென்னை: Ponniyin selvan 2 (பொன்னியின் செல்வன் 2) பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் தமிழ்நாட்டில் வசூல் ரீதியாக பலத்த அடி வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் இரண்டு பாகங்களாக மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கிறது. முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. பாஸிட்டிவ் விமர்சனத்தை பெற்ற அந்தப் படம் 500 கோடி ரூபாய்க்கும் மேல் உலகம் முழுவதும் வசூலித்ததாக படத்தை தயாரித்த லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

பொன்னியின் செல்வன் 2: முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி படம் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. முதல் பாகத்தில் இருந்த சின்ன சின்ன குறைகளை இரண்டாம் பாகத்தில் மணிரத்னம் நிவர்த்தி செய்திருப்பார் என்ற நம்பிக்கையுடன் ரசிகர்கள் திரையரங்குகளுக்கு சென்றனர்.
ரசிகர்களின் விமர்சனம்: படத்தை பார்த்த ரசிகர்களில் பெரும்பாலானோர் படம் சூப்பராக இருப்பதாகவும், முதல் பாகத்தைவிட இரண்டாம் பாகம் நிச்சயம் பெரும் ஹிட்டடிக்கும் என்றும் கருத்து தெரிவித்தனர். அதேசமயம் இரண்டாம் பாகத்துக்கு முதல் பாகமே பரவாயில்லை. ஒரு சரித்திர படத்தை எப்படி எடுக்க வேண்டும் என ராஜமௌலியிடம் மணிரத்னம் கற்றுக்கொள்ள வேண்டும் என சிலர் வெளிப்படையாக விமர்சனத்தை முன்வைத்தனர்.

வரலாற்றை மாற்றினாரா மணி: அதேபோல் பொன்னியின் செல்வன் நாவலில் ஆதித்த கரிகாலன் கொல்லப்பட்டார் என்றே கல்கி எழுதியிருப்பார். ஆனால் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்த கரிகாலன் தற்கொலை செய்துகொள்வது போன்ற காட்சியை மணிரத்னம் வைத்திருக்கிறார். இதன் மூலம் சோழர்களின் வரலாறை மாற்றி அமைத்திருக்கிறாரா மணிரத்னம் என்ற கேள்வியும் ஒரு தரப்பினரிடம் எழுந்திருக்கிறது.
வசூலில் அடி: பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் 500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது. ஆனால் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகமோ அந்த அளவுக்கு வசூலை எட்டவில்லை என கூறப்படுகிறது. அதாவது பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் தமிழ்நாட்டில் 800க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியானது. ஆனால் தமிழ்நாட்டில் மொத்தமாக இதுவரை 115 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. அதேசமயம் முதல் பாகமானது தமிழ்நாட்டில் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது.

மொத்த வசூல் எவ்வளவு: பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் 300 கோடி ரூபாய்க்கும் மேல் அதிகமாக வசூலித்திருக்கிறது என படக்குழு தெரிவித்தாலும் இதுவரை 350 கோடி ரூபாயைக்கூட நெருங்கவில்லையாம். இந்தியாவில்தான் வசூல் டல் என்று நினைத்தால் வெளிநாடுகளிலும் நினைத்த அளவு இல்லையாம். அமெரிக்காவில் மட்டும்தான் படம் அதிகபட்சமாக 43 கோடி ரூபாயை வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. இதனை வைத்து பார்க்கும்போது பொன்னியின் செல்வன் 2 தடம் தெரியாமல் அழிந்துவிட்டது என்கின்றனர் ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications