Ponniyin Selvan 2 - பொன்னியின் செல்வன் 2 வசூல் நிலவரம் என்ன தெரியுமா?.. அதிகாரப்பூர்வமாக அறிவித்தது லைகா
சென்னை: Ponniyin Selvan 2 Collection (பொன்னியின் செல்வன் 2 வசூல்)பொன்னியின் செல்வன் 2 படம் வெளியாகி நான்கு நாள்கள் முடிவடைந்திருக்கும் சூழலில் படம் செய்திருக்கும் வசூல் நிலவரம் குறித்து தெரியவந்திருக்கிறது.
எழுத்தாளர் அமரர் கல்கி எழுதிய நாவல் பொன்னியின் செல்வன். சோழர்கள் காலத்தில் நடந்த உண்மை சம்பவத்தையும், அவரது கற்பனையையும் சேர்த்து தொடராக எழுதினார். அது மிகப்பெரிய வரவேற்பைப் பெற அந்தத் தொடர் புத்தகமாக வடிவம் பெற்றது. ஐந்து பாகங்கள் கொண்ட பொன்னியின் செல்வன் எழுதப்பட்டு 60 ஆண்டுகளுக்கு மேலானாலும் இன்றுவரை பலரும் அதனை விரும்பி படித்துவருகின்றனர்.

மணிரத்னத்தின் தொடக்கம்: பொன்னியின் செல்வன் நாவலை எப்படியாவது திரைப்படமாக பார்த்துவிட வேண்டும் என நாவலை படித்தவர்கள் ஆவலோடு காத்திருந்தனர். அதற்கான முயற்சியில் எம்ஜிஆர், கமல் ஹாசன் உள்ளிட்டோர் இறங்கினர். ஆனால் அது நிறைவேறவில்லை. இந்தச் சூழலில் மணிரத்னம் பொன்னியின் செல்வனை திரைப்படமாக இயக்குகிறார் என அறிவிப்பு வெளியானது.
களமிறங்கிய நட்சத்திர பட்டாளம்: லைகா நிறுவனம் தயாரித்த பொன்னியின் செல்வனில் கார்த்தி, விக்ரம், த்ரிஷா, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், பிரபு, விக்ரம் பிரபு, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், லால், ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. மொத்தம் இரண்டு பாகங்களாக உருவாகியிருக்கிறது. கடந்த வருடம் முதல் பாகம் வெளியாகி பலத்த வரவேற்பைப் பெற்றது. படம் 500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது.
பொன்னியின் செல்வன் 2: பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியானது. முதல் பாகம் போலவே இரண்டாம் பாகமும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் உலகம் முழுவதும் பலத்த வரவேற்பைப் பெறும் என ரசிகர்களும், படக்குழுவினரும் நம்பிக்கையில் இருந்தனர். அவர்களின் நம்பிக்கை பொய்த்துபோகாதபடி பொன்னியின் செல்வன் 2 படத்துக்கு ரசிகர்கள் பாசிட்டிவ் விமர்சனத்தையே கொடுத்துவருகின்றனர்.

பொன்னியின் செல்வன் 2 வசூல்: இந்நிலையில் படம் வெளியாகி மூன்று நாள்கள் முடிவடைந்திருக்கிறது. இந்தச் சூழலில் படத்தின் வசூல் நிலவரத்தை லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. அதன்படி இந்தப் படமானது உலகம் முழுவதும் இதுவரை 200 கோடி ரூபாயை வசூலித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வெளியாகி மூன்று நாள்களுக்குள்ளாகவே 200 கோடி ரூபாயை தாண்டியிருப்பதால் இப்படம் இந்த வார இறுதிக்குள் 500 கோடி ரூபாயை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாசிட்டிவ் மட்டுமல்ல நெகட்டிவ்வும்: படத்துக்கு பெரும்பாலானோர் பாசிட்டிவ் விமர்சனத்தை கொடுத்தாலும் ரசிகர்களில் ஒரு தரப்பினர் நெகட்டிவ் விமர்சனத்தையும் கொடுக்கின்றனர். முதல் பாகத்தில் இருந்த சின்ன சின்ன குறைகள் இரண்டாம் பாகத்தில் நிவர்த்தி செய்யப்படும் என எதிர்பார்த்தோம். ஆனால் இரண்டாம் பாகத்தில் பெரிய பெரிய குறைகளை வைத்துவிட்டார் மணிரத்னம். குறிப்பாக படத்தின் க்ளைமேக்ஸில் ஒட்டுமொத்த வரலாற்றையும் மாற்றியிருக்கிறார் என அவர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











