Promotional tour :கோவையை தொடர்ந்து டெல்லியில் முகாமிட்ட சோழர்கள்.. பயணப் புகைப்படம் இதோ!
டெல்லி : நடிகர்கள் விக்ரம் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் பொன்னியின் செல்வன் 2. இந்தப் படத்தின் முதல் பாகம் கொடுத்த மாஸ் வெற்றியை தொடர்ந்து வரும் 28ம் தேதி இந்தப் படம் வெளியாகவுள்ளது.
படத்தின் பிரமோஷனல் டூரில் படத்தின் நடிகர், நடிகைகள் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, த்ரிஷா உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டுள்ளனர்.
சென்னையில் துவங்கிய இந்த பிரமோஷனல் டூர், தொடர்ந்து கோவையில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. தற்போது படக்குழுவினர் டெல்லியில் பிரமோஷன்களில் ஈடுபட்டுள்ளனர்.

டெல்லியில் பிரமோஷனல் டூர்: பொன்னியின் செல்வன் 2 படம் இன்னும் சில தினங்களில் திரையரங்குகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள நிலையில், படத்தின் பிரமோஷன்கள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. சமூக வலைதளங்களையும் இந்தப் படக்குழுவினர் சிறப்பாக பயன்படுத்தி வருகின்றனர். படத்தின் ஸ்பெஷலான விஷயங்களை அடுத்தடுத்து தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு கடந்த இரு மாதங்களாகவே ரசிகர்களை என்கேஜாகவே வைத்து வருகின்றனர்.
படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீடும் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. தொடர்ந்து அடுத்தடுத்த அப்டேட்களை படக்குழுவினர் வழங்கிவரும் நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்களுடன் இணைந்து படக்குழுவினர் படத்தின் ஆன்த்தமை வெளியிட்டனர். இந்த நிகழ்ச்சியில் இசைப்புயல் ஏஆர் ரஹ்மானும் இணைந்து ஆன்த்தமை வெளியிட்டார். அந்த நிகழ்ச்சியிலேயே படக்குழுவினர் படத்தின் பிரமோஷனல் டூரையும் துவக்கினர்.

இதுகுறித்து முன்னதாக தகவல் வெளியிட்ட லைகா, அவர்களின் பிரமோஷனல் டூரின் அட்டவணையையும் வெளியிட்டது. முதலில் கோவைக்கு படத்தின் நடிகர், நடிகைகள், ஜெயம் ரவி, த்ரிஷா, விக்ரம், கார்த்தி, ஷோபிதா, ஐஸ்வர்யா லெக்ஷ்மி ஆகியோர் சென்றிருந்தனர். அங்கு மாலையில் நடைபெற்ற பிரம்மாண்டமான நிகழ்ச்சியில் படம் குறித்த தங்களது அனுபவங்களையும் பகிர்ந்தனர். அவர்களுக்கு அந்த நிகழ்ச்சியில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.
இதையடுத்து இன்றைய தினம் டெல்லிக்கு படக்குழுவினர் பயணமாகியுள்ளனர். அவர்கள் விமானத்தில் இருந்து இறங்கி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த நிலையில், அந்தப் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன. இதையடுத்து இன்று காலை 10.30 மணியளவில் அவர்கள் ஸ்ரீராம் காலேஜ் ஆப் காமர்ஸ் கல்லூரியில் மாணவர்களை சந்தித்து பேசுகின்றனர். டெல்லியில் துவங்கியுள்ள அவர்களது வட இந்திய பயணம், தொடர்ந்து மும்பை உள்ளிட்ட இடங்களில் தொடரவுள்ளது.

கோவையில் அவர்கள் பெரிய நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்பு பத்திரிகையாளர்களையும் சந்தித்து அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசினர். இதில் பங்கேற்ற இயக்குநர் மணிரத்னம், படம் ஆஸ்கார் செல்லுமா, வேள்பாரி நாவலை படமாக எடுப்பாரா போன்ற கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார். இதேபோல படத்தின் மற்ற நடிகர்களும் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தது சிறப்பாக அமைந்தது.


Click it and Unblock the Notifications











