த்ரிஷா குந்தவையாக மாறிய தருணத்தை வெளியிட்ட பொன்னியின் செல்வன் குழு.. விரைவில் பர்ஸ்ட் சிங்கிள்!
சென்னை : மணிரத்னம் இயக்கத்தில் கடந்த ஆண்டில் வெளியான பொன்னியின் செல்வன் வரலாற்றுப் படைப்பு மிகச்சிறந்த வரவேற்பை ரசிகர்களிடையே பெற்று வசூலிலும் மிரட்டியது.
இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் குறித்த அறிவிப்பு முன்னதாகவே வெளியான நிலையில், வரும் ஏப்ரல் 28ம் தேதி படம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
படம் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ப்ரமோஷனை படக்குழுவினர் துவக்கியுள்ளனர்.

பொன்னியின் செல்வன் படம்
இயக்குநர் மணிரத்னத்தின் கனவு ப்ராஜக்டாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வெளியானது பொன்னியின் செல்வன் படம். இந்தப் படத்தை இயக்குநர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை மையமாக கொண்டு உருவாக்கியிருந்தார் மணிரத்னம். இந்தப் படத்தின் இரண்டு பாகங்களையும் 150 நாட்களில் மணிரத்னம் எடுத்து முடித்துவிட்டதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து இயக்குநர் ராஜமௌலியும் வியப்பு தெரிவித்திருந்தார்.

பொன்னியின் செல்வன் 2 படம்
இந்தப் படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், ஜெயராம், பார்த்திபன், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்திருந்த நிலையில், படத்திற்கு சிறப்பான வகையில் ப்ரமோஷன் கொடுக்கப்பட்டது. படம் 400 கோடி ரூபாய்களுக்கு மேலாக வசூல் மழை பொழிந்தது. விமர்சனரீதியாகவும் படம் அனைவரது வரவேற்பையும் பெற்றது. இதையடுத்து படத்தின் இரண்டாவது பாகம் ரிலீஸ் குறித்தும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 28ம் தேதி படம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

குந்தவையாக மாறிய த்ரிஷா
இந்தப் படத்தில் குந்தவையாக த்ரிஷாவும், நந்தினியாக ஐஸ்வர்யா ராயும் மிரட்டியிருந்தனர். இதேபோல படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஜெயராம் உள்ளிட்டவர்களின் கேரக்டர்களும் தனித்துவமான நடிப்பால் மிளிர்ந்தன. படத்தின் பிரம்மாண்டமான காட்சிகளும் ரசிகர்களை மிரட்டியது. அடுத்த பாகத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக காணப்பட்ட நிலையில், இன்னும் சில வாரங்களில் படம் ரிலீசாகவுள்ளது அவர்களை குஷிப்படுத்தியுள்ளது.

சிறப்பான குந்தவை காஸ்ட்யூம்
இந்தப் படத்தின் முதல் பாகத்தில் த்ரிஷாவின் காஸ்ட்யூம் மிகச்சிறப்பாக அமைந்திருந்தது. ஒரு நாட்டின் இளவரசிக்கான இந்த காஸ்ட்யூம் மட்டுமில்லாமல், அவரது மிடுக்கும் குந்தவை கேரக்டருக்கு பலம் சேர்த்தது. அவரது ஒவ்வொரு உடையும், நகைகளும் பிரத்யேகமான கவனம் செலுத்தப்பட்டு உருவாக்கப்பட்டிருந்தது. அவரது சிகையலங்காரமும் மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது. கல்கியின் குந்தவை கேரக்டரை த்ரிஷா கண்முன்னால் கொண்டு வந்திருந்தார்.

குந்தவை குறித்த வீடியோ
இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்திலும் த்ரிஷா கேரக்டருக்கு மிகவும் முக்கியத்துவம் தரப்பட்டுள்ள நிலையில், தற்போது படத்தின் ப்ரமோஷன்களை லைகா துவங்கியுள்ளது. இன்றைய தினம் த்ரிஷா குந்தவையாக மாறிய தருணத்தையும் அதற்கு காரணமானவர்கள் குறித்தும் லைகா வீடியோ வெளியிட்டுள்ளது. த்ரிஷாவின் காஸ்ட்யூம் டிசைனர் எகா லகானி, தலையலங்காரம் மற்றும் மேக்கப் விக்ரம் கெய்க்வாட், த்ரிஷாவின் நகைகள் வடிவமைப்பு கிருஷ்ணதாஸ் அண்ட் கோ என்று அந்த வீடியோவில் விவரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

பர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு
மேலும் த்ரிஷாவின் அடுத்தடுத்த கெட்டப்புகளும் அந்த வீடியோவில் வெளியாகியுள்ளது. மேலும் படத்தின் முதல் சிங்கிள் விரைவில் வெளியாகவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொன்னியின் செல்வன் ப்ரமோஷன் டூரை படக்குழுவினர் மிகச்சிறப்பாக செய்திருந்தனர். படத்தின் வெற்றிக்கு இதுவும் முக்கிய காரணமாக அமைந்தது. அதேபோல, இரண்டாவது பாகத்திற்கும் சிறப்பான பிரமோஷனை செய்வார்கள் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











