Veera Raja Veera - வீரா ராஜ வீர.. வெளியானது பொன்னியின் செல்வன் 2 லிரிக்கல் வீடியோ
சென்னை: Ponniyin Selvan 2 Veera Raja Veera (பொன்னியின் செல்வன் 2 வீரா ராஜ வீர) பொன்னியின் செல்வன் 2வில் இடம்பெற்றிருக்கும் வீரா ராஜ வீர பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
எழுத்தாளர் அமரர் கல்கி எழுதிய நாவல் பொன்னியின் செல்வன். சோழர்கள் காலத்தில் நடந்த உண்மை சம்பவத்தையும், அவரது புனைவையும் சேர்த்து வார பத்திரிகை ஒன்றில் தொடராக எழுதினார். அது மிகப்பெரிய வரவேற்பைப் பெற அந்தத் தொடர் புத்தகமாக வடிவம் பெற்றது. நாவல் எழுதப்பட்டு 60 ஆண்டுகளுக்கு மேலானாலும் இன்றுவரை பலரும் அதனை விரும்பி படித்துவருகின்றனர்.

பொன்னியின் செல்வனை ஆரம்பித்த மணிரத்னம்: பொன்னியின் செல்வன் நாவலை எப்படியாவது திரைப்படமாக பார்த்துவிட வேண்டும் என நாவலை படித்தவர்கள் ஆவலோடு காத்திருந்தனர். அதற்கான முயற்சியில் எம்ஜிஆர், கமல் ஹாசன் உள்ளிட்டோர் இறங்கினர். ஆனால் அது நிறைவேறவில்லை. இந்தச் சூழலில் மணிரத்னம் பொன்னியின் செல்வனை திரைப்படமாக இயக்குகிறார் என அறிவிப்பு வெளியானது.
லைகா நிறுவனம் தயாரித்த பொன்னியின் செல்வனில் கார்த்தி, விக்ரம், த்ரிஷா, ஜெயம் ரவி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்தது. கடந்த வருடம் முதல் பாகம் வெளியாகி பலத்த வரவேற்பைப் பெற்றது. படம் 500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது.
ஏப்ரலில் ரிலீஸாகும் பொன்னியின் செல்வன் 2: பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. முதல் பாகம் போலவே இரண்டாம் பாகமும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பலத்த வரவேற்பைப் பெறும் என நம்பப்படுகிறது.

இதன் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. கமல் ஹாசன் கலந்துகொண்டு ட்ரெய்லரை வெளியிட்டார். கமல் ஹாசன் மட்டுமின்றி சிம்பு, பாரதிராஜா உள்ளிட்டோரும் பொன்னியின் செல்வன் 2 ட்ரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டனர்.
கவனம் ஈர்த்த அக நக பாடல்: இதற்கிடையே பொன்னியின் செல்வன் 2வில் இடம்பெற்றிருக்கும் அக நக பாடல் ஆடியோ வெளியானபோதே ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து சமீபத்தில் அந்தப் பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஹிட்டடித்தது. பாடலை இளங்கோ கிருஷ்ணன் பாடல் சக்திஸ்ரீ கோபாலன் பாடியிருந்தார். முழுக்க முழுக்க ப்யூட் மெலோடியாக உருவாகியிருந்தது அந்தப் பாடல்.
பொன்னியின் செல்வன் 2வின் புதிய லிரிக்கல் வீடியோ: இந்நிலையில் படத்தில் இருக்கும் வீரா ராஜ வீர பாடலின் லிரிக்கல் வீடியோ இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி லிரிக்கல் வீடியோவை படக்குழு இன்று வெளியிட்டிருக்கிறது. ஜெயம் ரவி ஏற்றிருக்கும் அருண்மொழி சோழன் கதாபாத்திரத்தை (ராஜராஜ சோழன்) புகழும்படி பாடல் வரிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பாடலையும் இளங்கோ கிருஷ்ணனே எழுந்தியிருக்கிறார். சங்கர் மகாதேவன்,சித்ரா, ஹரிணி ஆகியோர் பாடியிருக்கின்றனர். இந்தப் பாடலை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிர்ந்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











