PS 2 : பொன்னியின் செல்வன் 2 வசூல் குறைந்துவிட்டதா… 500 கோடி வசூல் என்னாச்சு?
சென்னை : பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் 5 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
பொன்னியின் செல்வன் 2, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பான் இந்தியா திரைப்படமாக உலகம் முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் 28-ம் தேதி வெளியானது.
இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், பார்த்திபன், ஐஸ்வர்யா ராய் த்ரிஷா ஆகியோர் நடித்துள்ளனர்.

5 நாள் வசூல் : பொன்னியின் செல்வன் 2 வரலாற்று புனைவு நாவலை தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தப் படத்தின் 5 நாட்கள் வசூல் குறித்த நிலவரம் வெளியாகியுள்ளது. அந்த வகையில், 5 நாட்களில் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் 215 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வசூல் விவரம் : பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம், முதல்நாளில் 64.14 கோடி ரூபாயும், இரண்டாம் நாளில் 45.46 கோடி ரூபாயும், மூன்றாம் நாளில் 65.05 கோடி ரூபாயும், நான்காம் நாளில் 39.55 கோடி ரூபாயும் வசூலித்துள்ளது. இந்திய அளவில் 100 கோடி ரூபாயை தாண்டியுள்ள பொன்னியின் செல்வன் 2 திரைப்படம், தமிழ்நாட்டில் 67.55 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. கோடை விடுமுறை என்பதாலும், பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் வெளியாகவில்லை என்பதால் இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரூ 500 கோடியை தொடுமா : பொன்னியின் செல்வன் முதல் பாகம் கடந்த செப்டம்பர் மாதம் வெளியானது. பொன்னியின் செல்வன் புத்தகத்தை படிக்காதவர்கள் வரலாற்றை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் திரையரங்கிற்கு கூட்டம் கூட்டமாக வந்து படத்தை பார்த்தனர். முதல் பாகம் வெளியான ஒரு மாதத்தில் 500 கோடியை வசூலித்தது. தற்போது இரண்டாம் பாகம் வெளியாகி ஐந்து நாட்களில் 215 கோடியை தொட்டுள்ளது. ஆனால்,முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தின் வசூல் குறைந்துள்ளதால், இந்த படம் ரூ.500 கோடியை வசூலிக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

சர்ச்சையான கிளைமாக்ஸ் : பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பை இரண்டாம் பாகம் பூர்த்தி செய்யவில்லை என்றும், ஆதித்த கரிகாலன் கொல்லப்பட்டது, கிளைமாக்ஸ் காட்சி என மணிரத்னம் கிளைமாக்ஸ் காட்சியை மாற்றியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேலும், சோழர்களின் பெருமையை குலைப்பது போன்று காட்சிகள் இருப்பதால் பலரும் வருத்தமடைந்து வருகின்றனர்.
பாராட்டிய கமல் : மேலும், பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தை பார்த்த கமல்ஹாசன், அனைத்து படங்களுக்கும் மாற்றுக் கருத்துகள் இருக்கும். அது இந்தப்படத்தில் இருந்திருந்தாலும் மக்கள் இதை பெரிதாக ஆதரிக்கிறார்கள்.தமிழ் சினிமாவின் பெருமையும் தமிழரின் பெருமையையும் போற்றும் இத்தகைய படத்தை எடுப்பதற்கு தனி துணிச்சல் வேண்டும். அதனை எடுத்திருக்கும் முக்கியமான வீரன் மணிரத்னம் என கமல் பொன்னியின் செல்வன் படத்தை பாராட்டி உள்ளார்.


Click it and Unblock the Notifications











