பொன்னியின் செல்வன் 2 எப்போ ரிலீஸ் தெரியுமா.. கொண்டாட்டத்திற்கு காத்திருக்கும் ரசிகர்கள்!
சென்னை : நடிகர்கள் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் உள்ளிட்டவர்களின் சிறப்பான பங்களிப்பில் வெளியாகியுள்ளது பொன்னியின் செல்வன்.
இந்தப் படத்திற்கு சர்வதேச அளவில் கிடைத்துள்ள வரவேற்பு மற்றும் அதையொட்டிய வசூல் சிறப்பாக அமைந்துள்ளது.
இந்தப் படத்தின் முதல் பாகம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள நிலையில், இரண்டாவது பாகத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகிறது.

பொன்னியின் செல்வன் படம்
பொன்னியின் செல்வன் என்ற வரலாற்றுக் காவியத்திற்கு திரையில் உயிர் கொடுத்துள்ளார் மணிரத்னம். தன்னுடைய சிறப்பான திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகள்மூலம் கல்வியின் படைப்பிற்கு அவர் சிறப்பான வகையில் வடிவத்தை கொடுத்துள்ளார். கதையை வாசித்தவர்கள், வாசிக்காதவர்கள் என அனைவரையும் இந்தப் படம் கவர்ந்துள்ளது.

சர்வதேச அளவில் அங்கீகாரம்
மணிரத்னத்தின் கனவு முயற்சியான பொன்னியின் செல்வன் படத்திற்கு சர்வதேச அளவில் ரசிகர்கள் அங்கீகாரம் கொடுத்துள்ளனர். வரலாற்று சம்பவங்களை படங்களாக கொடுப்பது சமீபத்தில் அதிகரித்துள்ள நிலையில், நீண்ட நாட்களாக இந்த நாவலை படமாக எடுக்கும் மணிரத்னத்தின் முயற்சிக்கு சிறந்த பலன் கிடைத்துள்ளது.

ரூ.500 கோடியை நெருங்கும் வசூல்
படத்தின் வசூல் 500 கோடி ரூபாயை நோக்கி சென்றுக் கொண்டிருக்கும் நிலையில், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிவரும் பொன்னியின் செல்வன், மற்ற படங்களின் சாதனைகளை முறியடித்து முன்னேறி வருகிறது. தொடர்ந்து சர்வதேச அளவில் படத்தின் வசூல் தாறுமாறாக அமைந்துள்ளது.

ரசிகர்களின் கேள்வி
இதனிடையே முதல் பாகத்தில் எழுந்துள்ள பல்வேறு கேள்விகளுக்கு விடைக் கொடுக்கும் இரண்டாவது பாகம் குறித்து தற்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. 5 பாகங்களாக வெளியான பொன்னியின் செல்வன் நாவலின் இரண்டு பாகங்கள் மட்டுமே படத்தின் முதல் பாகத்தில் கவர் செய்யப்பட்டுள்ள நிலையில், ரசிகர்களிடையே எழுந்துள்ள கேள்விகளுக்கு விடையாக இரண்டாவது பாகம் அமையவுள்ளது.

ரிலீஸ் குறித்த திட்டம்
இந்த இரண்டு பாகங்களின் சூட்டிங்கையும் மணிரத்னம் முடித்துள்ளார். வெறும் 150 நாட்களில் இந்தப்படத்தின் சூட்டிங்கை அவர் முடித்துள்ள நிலையில், விரைவில் சிஜி வேலைகள் துவங்கவுள்ளன. இதையடுத்து படத்தின் இரண்டாவது பாகத்தை முதல் பாகத்தின் வெற்றியின் சூட்டுடன் ரிலீஸ் செய்ய மணிரத்னம் திட்டமிட்டுள்ளாராம்.

தமிழ் புத்தாண்டு ரிலீஸ்?
படம் அடுத்த ஆண்டு, ஏப்ரல் 13ம் தேதி தமிழ் புத்தாண்டு மற்றும் கோடை கொண்டாட்டமாக வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரசிகர்களை எளிமையான திரைக்கதையுடன் முதல் பாகத்தில் அணுகியிருந்த மணிரத்னம், அதையே இரண்டாவது பாகத்திலும் மேற்கொண்டுள்ளதாக கூறப்படும் நிலையில், முதல் பாகத்தை காட்டிலும் அதிகமான விளக்கங்களுடன் இரண்டாவது பாகம் ரசிகர்களை அதிகமாக கவரும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











