தமிழ் சினிமாவின் பெருமைமிகு பிரம்மாண்ட படைப்பு.. பொன்னியின் செல்வன் எப்போ ரிலீஸ் ஆகுது தெரியுமா?
சென்னை: லைகா நிறுவன தலைவர் சுபாஷ்கரனின் பிறந்தநாளை முன்னிட்டு ஏகப்பட்ட அறிவிப்புகளை காலையிலிருந்து லைகா நிறுவனம் வெளியிட்டு வருகிறது.
வரும் மே 13ம் தேதி சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் வெளியாகும் அறிவிப்பை லைகா வெளியிட்ட நிலையில், பொன்னியின் செல்வன் ரிலீஸ் தேதியை சொல்லுங்க என ரசிகர்கள் நச்சரித்து விட்டனர்.
இந்நிலையில், சற்றும் எதிர்பாராத வகையில் பொன்னியின் செல்வன் ரிலீஸ் தேதியை லைகா அறிவித்துள்ளது.


பிரம்மாண்ட படைப்பு
பாகுபலி படத்தை பார்த்து உலக சினிமாவே வியப்பதற்கு பல காலங்கள் முன்னமே சந்திரலேகா, கர்ணன் உள்ளிட்ட ஏகப்பட்ட வரலாற்று சிறப்பு வாய்ந்த படங்களை தமிழ் சினிமா கொடுத்து இருக்கிறது. செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் படம் கூட பாகுபலிக்கு முன்னோடி தான். இந்நிலையில், நேரடி போட்டியாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் எப்போது வெளியாகும் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைகா வெளியிட்டுள்ளது.

சுபாஷ்கரன் பிறந்தநாள்
லைகா நிறுவனத்தின் சேர்மேன் சுபாஷ்கரனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை லைகா நிறுவனம் இன்று கோலாகலமாக கொண்டாடி வருகிறது. காலை முதலே ஏகப்பட்ட அப்டேட்களை லைகா தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி வருகிறது.

டான் ரிலீஸ் தேதி
சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், எஸ்ஜே சூர்யா, பிரியங்கா மோகன், சிவாங்கி, பால சரவணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கல்லூரி கலாட்டா படமாக உருவாகி உள்ள டான் படத்தின் ரிலீஸ் தேதியை இன்று காலை லைகா நிறுவனம் அறிவித்தது. RRR படத்தின் தமிழ் பதிப்பை லைகா விடுவதால் மார்ச் 25ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த டான் திரைப்படம் மே 13ம் தேதி வெளியாகும் என அறிவித்தது.

PS1 ரிலீஸ் தேதி
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட ஏகப்பட்ட நடிகர்கள் நடிப்பில் அமரர் கல்கியின் காவியமான பொன்னியின் செல்வன் படம் உருவாகி வருகிறது. ஏப்ரல் 14ம் தேதி வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்ட இந்த திரைப்படம் தற்போது இந்த ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி திரைக்கு வரும் என லைகா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நடிகர்களின் ஃபர்ஸ்ட் லுக்
PS1 என்று முதல் பாகத்தை அறிவித்து வரும் லைகா நிறுவனம் கேடயத்தை மட்டும் காண்பித்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும், தனித்தனியாக நடிகை த்ரிஷா, விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்டோரின் அட்டகாசமான புகைப்படங்களையும் ஷேர் செய்து ரசிகர்களை திக்குமுக்காட வைத்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











