எதிர்பார்த்து ஏமாந்த பொன்னியின் செல்வன் படக்குழு?.. காரணம் என்ன தெரியுமா?
ஹாங்காங்: 16ஆவது ஆசிய திரைப்பட விருதில் ஆறு பிரிவுகளில் போட்டியிட்ட பொன்னியின் செல்வன் திரைப்படத்துக்கு ஒரு விருதுகூட கிடைக்கவில்லை.
தமிழ் இலக்கியத்தின் மணிமகுடமாக கருதப்படுவது பொன்னியின் செல்வன். எழுத்தாளர் கல்கி எழுதிய இந்த நாவல் மொத்தம் ஐந்து பாகங்களைக் கொண்டது. ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட இந்த நாவலுக்கு இன்றுவரை பலரும் ரசிகர்களாக இருக்கின்றனர்.

பொன்னியின் செல்வனை திரைப்படமாக்க முயற்சி
எம்ஜிஆர் முதல்முதலில் பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக்கும் முயற்சியில் இறங்கினார். ஆனால் அந்த முயற்சி கைகூடவில்லை. இதனையடுத்து கமல் ஹாசன் அந்த முயற்சியில் இறங்க அவராலும் பொன்னியின் செல்வனை திரைப்படமாக்க முடியவில்லை. இருப்பினும் எப்படியாவது பொன்னியின் செல்வனை திரைப்படமாக்க வேண்டும் என ரசிகரக்ள் காத்திருந்தனர்.

முயற்சியை சாத்தியமாக்கிய மணிரத்னம்
எம்ஜிஆர், கமல் ஹாசனால் முடிக்க முடியாத முயற்சியை மணிரத்னம் கையில் எடுத்தார். அவருக்கு துணை நிற்க லைகா நிறுவனமும் களமிறங்கியது. இதனையடுத்து பொன்னியின் செல்வன் திரைப்படத்தை லைகா தயாரிக்க மணிரத்னம் படத்தை இயக்கினார். இதில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், ஜெயராம் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்தது.

500 கோடி ரூபாயை வசூலித்த பொன்னியின் செல்வன்
கடந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்ற அந்தத் திரைப்படமானது உலகம் முழுவதும் 500 கோடி ரூபாயை வசூலித்தது. இதன் இரண்டாம் பாகம் உருவாகியிருக்கும் சூழலில் அது ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது பாகத்தின் ஆடியோ வெளியீட்டு விழா விரைவில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் போலவே இரண்டாவது பாகமும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசிய திரைப்பட விருதில் பொன்னியின் செல்வன்
சமீபத்தில் கனடா திரைப்பட விழாவில் விருதுகளை அள்ளிய பொன்னியின் செல்வன் இன்று ஹாங்காங்கில் நடைபெற்ற 16ஆவது ஆசிய திரைப்பட விழாவிலும் போட்டியிட்டது. அதன்படி, சிறந்த படம், சிறந்த இசை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த எடிட்டிங், சிறந்த கலை வடிவமைப்பு, சிறந்த ஆடை வடிவமைப்பு என மொத்தம் 6 பிரிவுகளில் நாமினேஷன் ஆனது பொன்னியின் செல்வன்.

ஏமாற்றத்தில் படக்குழு
ஆறு பிரிவுகளில் நாமினேஷன் ஆகியிருப்பதால் நிச்சயம் குறைந்தபட்சம் இரண்டு பிரிவுகளிலாவது பொன்னியின் செல்வன் விருது வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் ஒரு பிரிவில்கூட பொன்னியின் செல்வன் திரைப்படம் விருதை வெல்லாதது ரசிகர்களிடையேயும், படக்குழுவினரிடையேயும் பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











