இருட்டு அறையில் முரட்டு குத்துனு நினைச்சீங்களா ஞானவேல்.. பருத்திவீரன் பஞ்சாயத்தில் பொன்வண்ணன் பளார்
சென்னை: Paruthiveeran (பருத்திவீரன்) பருத்திவீரன் தொடர்பான பஞ்சாயத்தில் இயக்குநர் அமீருக்கு நடிகரும், இயக்குநருமான பொன்வண்ணன் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார்.
இயக்குநர் அமீர் இயக்கிய பருத்திவீரன் திரைப்படம் கார்த்திக்கு மட்டுமின்றி தமிழ் சினிமாவுக்கே அடையாளமாக இருக்கிறது. ஆனால் அந்தப் படத்தை சுற்றி கடந்த 16 வருடங்களாகவே பிரச்னையும் ஓடிக்கொண்டிருக்கிறது. அதுதொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.

சூழல் இப்படி இருக்க சமீபத்தில் நடந்த கார்த்தி 25 விழாவுக்கு தன்னை அழைக்கவில்லை என அமீர் கூறினார். அதற்கு பதில் தரும் விதமாக ஞானவேல் ராஜா ஒரு பேட்டி அளித்தார்.
மீண்டும் ஆரம்பம்: அந்தப் பேட்டியில் பருத்திவீரன் தொடர்பான விஷயங்களையும் பேசினார் அவர். அதாவது அமீரிடம் யாரும் போய் பருத்திவீரன் படம் செய்துகொடுங்கள் என்று கேட்கவில்லை. 58 லட்சம் ரூபாய் கடனுக்காகத்தான் அவர் அந்தப் படத்தை எங்களுக்கு செய்துகொடுத்தார் என ஞானவேல் ராஜா கூற; அதற்கு அமீர் பதிலடி தந்தார். மேலும் நீண்ட அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு படம் ஆரம்பித்து பாதியிலேயே ஓடி போனவர் ஞானவேல் ராஜா என்று குறிப்பிட்டிருந்தார்.
வலுக்கும் ஆதரவு: அமீரின் அறிக்கையை அடுத்து இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரகனி, கரு பழனியப்பன் உள்ளிட்டோரும் அமீருக்கு ஆதரவாக குரல் எழுப்பியிருக்கின்றனர். அதிலும் சசிகுமாரும், சமுத்திரகனியும் பருத்திவீரனை சுற்றி நடந்த பண பஞ்சாயத்து என்ன என்பதையும் தங்களது பேச்சில் ஆணித்தரமாக கூறியிருக்கின்றனர். இவர்கள் மட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் அமீருக்கு ஆதரவு பெருகிவருகிறது.
பொன்வண்ணன் ஆதரவு: இந்நிலையில் பருத்திவீரனில் ப்ரியாமணிக்கு தந்தையாக நடித்த பொன்வண்ணன் இந்த விவகாரத்தில் அமீருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் அவர், “பருத்தி வீரன்’திரைப்படம் பற்றிய தயாரிப்பாளர் ஞான வேல் அவர்களின் சமீபத்திய ஊடக பேட்டியைப்பார்த்தேன்!
காரணம் தெரியவில்லை: அத்திரைப்படத்தில் நடிகனாக மட்டுமல்லாமல் , நான் பல்வேறு நிலைகளில் பங்காற்றியவன் என்ற வகையில் சில விளக்கங்கள் தர கடமைப்பட்டுள்ளேன். அத்திரைப்படம் ஆரம்பித்து முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு, அடுத்தகட்ட படப்பிடிப்பு தள்ளிப் போய் கொண்டிருந்தது. அதற்கான முழுமையான காரணம் எங்களுக்கு அப்போது தெரியவில்லை.
அமீர்தான் கடன் வாங்கினார்: அதன்பின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்புகள் தொடங்கிய போது, அமீர் அவர்கள் பொறுப்பேற்று, பல நண்பர்கள், உறவினர்கள் மூலமாக கடன் வாங்கி படப்பிடிப்புக்கான செலவுகளை செய்தார் என்பதை நானறிவேன்! பல்வேறு கட்டங்களாக படப்பிடிப்பு . தொடர்ந்தது. ஒவ்வொரு காட்சியமைப்பும் அவருக்கு திருப்தி வரும் வரை பல நாட்கள் எடுத்து கொண்டே இருந்தார்.
சமாதானம் செய்வார்: நானும்,உடனிருந்த சமுத்திரகனியும், செலவுகளைச் சுட்டிக்காட்டி பேசிய போதெல்லாம் எங்களை சமாதானபடுத்திவிட்டு, டப்பிங்.. எடிட்டிங் ... ரீரெக்கார்டிங் என எல்லா நிலைகளிலும் சமரசம் செய்து கொள்ளாமல் இதே மன நிலையுடன்தான் வேலை பார்த்தார். பல வருடங்கள் திரைத்துறையில் பயணித்து வந்த எனக்கு அந்த உழைப்பும், அர்பணிப்பும் மதிக்கத்தக்கதாக இருந்தது.
அந்த இடம் உயரியது: இதனால்தான், பணத்துக்காக தனது '’படைப்பிற்கு’’ என்றும் துரோகம் செய்பவரல்ல அமீர் என்பதை நான் அவருடன் தொடர்ந்து பயணித்தவன் என்ற முறையில் உறுதியாக சொல்லமுடியும். படம் வெளியாகி உலக அளவிலும், இந்திய சினிமாவிலும், படைப்பு ரீதியாகவும், தொழில்நுட்பமாகவும், விமர்சனங்களாலும்,வசூல் ரீதியாகவும், அதில் பங்குபெற்ற கலைஞர்களுக்கும் கிடைத்த 'தேசிய விருது’’ அங்கீகாரங்காளாலும் அது பெற்ற இடமோ உயரியது.
வரைமுறை வேண்டும்: படம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே, பொருளாதாரம் சார்ந்து இருவருக்குமிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, வெளியீட்டுக்கு பின்பும் ,திரைத்துறை சார்ந்த பல்வேறு சங்கங்கள் தலையிட்டும் , பிரச்சனை தீர்க்கப்படாமல் இருக்கிற இந்த நிலையில் , தயாரிப்பாளர் ஞானவேல் தனது பக்க நியாயத்தை சொல்வதற்கு முழு உரிமையும் உள்ளது. ஆனால் அதில் ஒரு வரைமுறை இருக்க வேண்டும் .
கொச்சைப்படுத்தாதீர்கள்: உலகமே அங்கீகரித்த படைப்பையும்,அதன் படைப்பாளியையும் உங்களின் தனிப்பட்டகாரணங்களுக்காக .. திருடன்,வேலைதெரியாதவர்..என கொச்சைப்படுத்துவது ஏற்புடையதல்ல..! அந்த ஊடக பேட்டிமுழுக்க உங்களின் உடல்மொழியும், பேச்சுத்திமிரும்,வக்கிரமாக இருந்தது..!
தரம் தாழ்ந்த மனநிலை: தங்கள் தயாரிப்பில் வந்த 'இருட்டறையில் முரட்டுக்குத்து’ திரைப்படத்தை போன்று அளவுகோலாக வைத்து பருத்திவீரனையும், அதனது படைப்பாளியையும் எடைபோட்டுவிட்டீர்களோ! வேண்டாம் இந்த தரம் தாழ்ந்த மனநிலை..! இனியும் உங்களுக்கிடையேயான பிரச்சனைகளை அதற்கான பாதையில் நேர்மையாக அணுகி தீர்வு காணுங்கள்.! பருத்திவீரன் ஆரம்பிக்கப்பட்ட காலங்களில் அனைவருக்குமிடையே இருந்த நட்பும்,உறவும் மீண்டும் மலரவேண்டும்


Click it and Unblock the Notifications











