For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ’பூ’ ராமு எனும் அற்புத கலைஞன்..வீதி நாடகத்திலிருந்து திரைத்துறை வரை

  |

  சென்னை: திரைப்பட குணச்சித்ர நடிகர் பூ ராமு மாரடைப்பால் நேற்று காலமானார். வீதி நாடக கலைஞராக இடதுசாரி கருத்துகளை மக்களிடம் கொண்டுச் சென்றவர்.
  நடிகர், நாடக கலைஞர், முற்போக்கு எழுத்தாளர் சங்க நிர்வாகி, இடதுசாரி சிந்தனையாளர் என பன்முக திறமைக்கொண்டவர் ராமு.
  இடதுசாரி இயக்கத்திலிருந்து மக்கள் பிரச்சினைகளை பேச வீதி நாடக கலைஞராக அவதாரமெடுத்தவர் திரைப்படத்துறையிலும் கால்பதித்தார்.அவரது மறைவுக்கு முதல்வர் தொடங்கி பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

  Recommended Video

  Poo Ramu Passed Away | திரையுலகினர் இரங்கல் *Kollywood | Filmibeat Tamil

  நானும் ஆர்யாவும் சேர்ந்து கொழந்த பெத்துக்க முடியாது… எதனால் விஷால் இப்படி சொன்னார் தெரியுமா?நானும் ஆர்யாவும் சேர்ந்து கொழந்த பெத்துக்க முடியாது… எதனால் விஷால் இப்படி சொன்னார் தெரியுமா?

  பிரச்சினைகளில் இருந்துதான் பிறக்கிறான் கலைஞன்

  பிரச்சினைகளில் இருந்துதான் பிறக்கிறான் கலைஞன்

  மக்கள் பிரச்சினையில் சமூக அக்கறை கொண்டவர்கள் கடைசியில் தங்களை வெளிப்படுத்தாமல் ஒதுங்கி நிற்க முடியாது. காலம் அவர்களை முன்னோக்கி தள்ளிக்கொண்டு வந்து நிறுத்திவிடும். இப்படித்தான் கலைஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் பிறக்கிறார்கள். பின்னர் மக்களுக்காக களத்தில் குதிக்கிறார்கள். தாய் நாவலில் நாயகன் பாவெலின் தாய் அடுப்படியில் முடங்கி கிடப்பார். மகன் நண்பர்களுடன் நாட்டின் நிலைப்பற்றி பேசுவதை அவ்வப்போது கேட்பார். ஒரு கட்டத்தில் அவர் மகன் கைது செய்யப்பட தான் காதால் கேட்ட விஷயங்களால் மக்கள் பிரச்சினை அறிந்த தாய் வீதியில் இறங்குவார். இதுதான் யதார்த்தம்.

  இடதுசாரி கருத்துகளில் வலுவாக நின்றவர்

  இடதுசாரி கருத்துகளில் வலுவாக நின்றவர்

  சமூக அக்கறை ஓவொருவருக்கும் வேறுபடும், ஆனால் வெளிப்படும். இதில் சிலர் முன்னணி வீரர்களாக இருப்பார்கள், சிலர் ஆதரவாளர்களாக இருப்பார்கள். நிலைப்பாடுதான் வேறு ஆனால் பின்னால் இருப்பது மனிதாபிமானம். அப்படிப்பட்ட மனிதாபிமானிகளில் ஒருவர் ராமு. மாணவப்பருவத்தில் மாணவர் சங்கத்தில் சேர்ந்த அவர் மக்கள் பிரச்சினைகளை பேசிய இடதுசாரி கருத்துக்களால் இயல்பாக ஈர்க்கப்பட்டார்.

  ஏர்போர்ஸ் வீரராக வேண்டியவர் பாதை மாறியது

  ஏர்போர்ஸ் வீரராக வேண்டியவர் பாதை மாறியது

  மாணவப்பருவத்தில் ஏர்ஃபோர்ஸில் வேலை கிடைக்க 16 வயது என்பதால் தந்தையின் கையொப்பம் கேட்க அவரது தந்தை மறுத்துவிட்டதால் வாய்ப்பு பறிபோனது. மாணவர் சங்கம் வாலிபர் சங்கம் என அவர் பயணப்பட்டார். அவரிடமிருந்த கலைஞன் வெளிப்பட்டது, தமுஎச எனப்படும் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இணைந்ததும், சென்னைக் கலைக்குழு வீதி நாடகத்தில் இணைந்த பின்னரும்தான். தன் பிழைப்புக்காக ஆட்டோ ஓட்டிய அவர் மீதி நேரத்தில் வீதி நாடகத்தில் கவனம் செலுத்தினார். ஆனால் பிழைப்பு பின்னால் போனது மக்கள் பிரச்சினை முன்னால் வந்தது. முழு நேர கலைஞரானார்.

  சப்தர் ஹஷ்மியின் பாதையை பின்பற்றி

  சப்தர் ஹஷ்மியின் பாதையை பின்பற்றி

  1990 களில் சென்னையில் வீதி நாடகம் மிகப்பிரபலம். சென்னைக் கலைக்குழு தமுஎச உறுப்பினர்கள், பல்வேறு பணியிலிருந்தவர்கள் இணைந்து உருவாக்கினர். கற்றலின் கேட்டலே நன்று, கேட்டலின் பார்த்தலே நன்றாக மாறியதை அப்போதே உணர்ந்திருந்த அவர்கள் வீதி நாடக கலைஞர் சப்தர் அஷ்மியின் பாதையை பின்பற்றி சென்னைக்கலைக்குழுவை உருவாக்கியிருந்தனர்.

  தெருவோர கலைஞனாக மக்களை கவர்ந்த ராமு

  தெருவோர கலைஞனாக மக்களை கவர்ந்த ராமு

  பல புத்தகங்கள் படித்து தெரிந்துக்கொள்ள முடியாத விஷயங்கள் எளிதாக நகைச்சுவை கலந்து சில நடிகர்கள் கையில் கிடைத்த பொருட்களை வைத்து வீதிகளில், தெருமுனைகளில் சிறிய நாடகமாக அரங்கேற்றுவார்கள். சிறிய தாளம், ஒரு பாடல் பின்னர் அப்போதைய அரசியல் கருத்துகளை மக்கள் பிரச்சினைகளை நையாண்டி கலந்து சொல்வது மக்களை எளிதாக சென்றடைந்தது. இதில் ராமு முக்கிய கதாநாயகன்.

  முரட்டு உருவம் பாத்திரத்துடன் பொருந்தும் முகபாவம்

  முரட்டு உருவம் பாத்திரத்துடன் பொருந்தும் முகபாவம்

  அவரது அகன்ற முரட்டு உருவம், சட்டென பாத்திரமாக மாறக்கூடிய முகபாவம் மற்றவர்கள் என்ன நடித்தாலும் சிறிய உடல் சேஷ்டையால் கூடியிருக்கும் கூட்டத்தை தனது பக்கம் திருப்பி விடக்கூடிய வல்லமை கொண்டவர் ராமு. பெரும்பாலும் அவரது உருவத்தை வைத்து போலீஸ் அதிகாரி, காவலர், அரசியல்வாதியாக வேடமிட்டு வருவார். போலீஸாக வரும்போதே என்ட்ரி கொடுக்கும்போதே கூட்டத்தை கலைப்பதுபோல் இருவர் பாக்கெட்டில் உள்ள பணத்தை பறித்து பாக்கெட்டில் போட்டு நடிப்பார். கூட்டம் களைக்கட்டிவிடும்.

  சென்னைக் கலைக்குழுவின் முக்கிய கலைஞர்

  சென்னைக் கலைக்குழுவின் முக்கிய கலைஞர்

  சென்னை கலைக்குழு வீதி நாடகம் வீதியைத்தாண்டி, அரங்குகள், தேர்தல் பிரச்சாரம், கலைவிழா என பயணித்தது. அதில் ராமுவின் பங்கு பிரதானம். வெறுமனே நாடகக்கலை அல்ல, அப்போதைய பல அரசியல் விஷயங்களை மக்களை பாதிக்கும் விஷயங்களை தோலுரித்து காட்டியது அது. சென்னைக்கலைக்குழு பற்றி அறிந்திருந்த நடிகர் கமல்ஹாசன் அதை மையமாக வைத்து 2012 ஆம் ஆண்டு அன்பேசிவம் என்கிற படம் எடுத்தார். அதில் வரும் வீதி நாடகக்கலைஞர்கள் குழுவில் உள்ளவர்களில் சிலர் தவிர அனைவரும் சென்னை கலைக்குழுவினரே. அதில் ராமுவும் நடித்திருப்பார்.

  கருப்பு ராமு பூ ராமுவான கதை

  கருப்பு ராமு பூ ராமுவான கதை

  அதன்பின்னர் சென்னை கலை இரவு எனும் முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் நடத்திய புத்தாண்டு கலை இரவை நடத்துவதில் பெரும்பங்காற்றினார். திரைத்துறை நோக்கிய ராமுவின் பயணம் தொடர்ந்தது. பூ என்கிற படம் மூலம் ராமு பேசப்பட்டார். பின்னர் அதுவே அவரது பட்டப்பெயராக பூ ராமு என்று அழைக்கப்பட்டார். ஆட்டோ ராமு என கட்சித்தோழர்களால் அழைக்கப்பட்டு, பின்னர் கருப்பு ராமு என அழைக்கப்பட்டவர், திரைத்துறையினரால் பூ ராமு என அழைக்கப்பட்டார்.

  திரைத்துறையில் கால் பதித்து குறுகிய காலத்தில் சாதித்த ராமு

  திரைத்துறையில் கால் பதித்து குறுகிய காலத்தில் சாதித்த ராமு

  நாடக கலைஞர் அதிலும் வீதி நாடகக்கலைஞர் என்பதால் ராமுவுக்கு இயல்பாகவே நடிப்பு வரும். முகபாவங்கள், அவரது வசன உச்சரிப்பு, மாடுலேஷன் சாதாரணமாக பாத்திரத்துடன் பொருந்திவிடும். கிராமங்களில் உள்ள கந்து வட்டிக்காரராக தவமாய் தவமிருந்து படத்தில் வருவார், மாட்டு வண்டி ஓட்டி பிழைத்தாலும் தனது மகன் படிக்கவேண்டும் என்கிற பாசக்கார தந்தையாக பூ திரைப்படத்தில் வாழ்ந்திருப்பார், கர்ணன் படத்தில் தனுஷின் தந்தையாக, சூரரைபோற்று படத்தில் சூர்யாவின் தந்தையாக, பரியேறும் பெருமாள் படத்தில் கல்லூரி முதல்வராக வருவார்.

  பரியேறும் பெருமாள் சொன்ன கதை

  பரியேறும் பெருமாள் சொன்ன கதை

  பரியேறும் பெருமாள் படத்தில் ஆதிக்க ஜாதி மாணவர்கள் தொல்லை பொறுக்க முடியாமல் சண்டைப்போட்டு கல்லூரியை விட்டே நீக்க கல்லூரி ஆசிரியர்கள் ஹீரோ கதிருக்கு எதிராக நிற்கும்போது கல்லூரி முதல்வராக இருக்கும் ராமு பேசும் வசனம் கல்வியின் மகத்துவத்தை இதைவிட யாரும் சொல்லிவிட முடியாது என்பதாக இருக்கும். கல்வி மறுக்கப்படும் தாழ்ந்த ஜாதியில் பிறந்தவன் அதே கல்வியை வெறிகொண்டு படித்தால் சமுதாயத்தில் மதிப்புமிக்க இடத்துக்கு வர முடியும் கல்வி ஒன்றே உன்னை உயர்த்தும் இதுபோன்ற தடைகளை கடந்து விடு என்ற கருத்தில் இருக்கும்.

  கல்வியின் பெருமை பேசிய கல்லூரி முதல்வர் பாத்திரம்

  கல்வியின் பெருமை பேசிய கல்லூரி முதல்வர் பாத்திரம்

  உனக்கு ஒன்னு தெரியுமா என் அப்பா செருப்பு தக்கிறவரு, அவருடைய மகன் நான், உன்னுடைய கல்லூரி முதல்வர். உன்னை மாதிரித்தான் நானும், என்னை பன்னி மாதிரி விரட்டி விரட்டி அடிச்சாங்க நான் ஓய்ஞ்சு போய்ட்டேனா இல்ல, அப்புறம் எது அவசியம்னு தெரிஞ்சுகிட்டு, பேய் மாதிரி படிச்சேன். அன்னைக்கு என்னை அடக்கணும்னு நினைச்சவன் எல்லாம் அய்யா சாமின்னு கும்புடுறான் இதை நீ மனசில் வச்சிக்க" என்பார்.

  போய் வாருங்கள் தோழர்

  போய் வாருங்கள் தோழர்

  பொடேர் என மண்டையில் அடிக்கும் வசனம். இதை ராமு கேரக்டராக செய்திருந்தாலும் இயல்பிலும் ஜாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான கலைஞர் தான் அவர். கலைத்துறையில் இன்னும் பல பாத்திரங்களை செய்யவேண்டிய நிலையில் இயற்கை அவரை அழைத்துக்கொண்டுவிட்டது. கலைஞன் தனி நபர் அல்ல மக்கள் பிரச்சினைகளுடன் பின்னி பிணைந்ததுதான் அவனது வாழ்க்கை, அதில் அவனது பங்கு மக்களுக்காக எத்தகையது என்பதை ஒவ்வொரு கலைஞரும் எண்ணிப்பார்க்கவேண்டும். ராமு அதில் தனது கடமையை நிறைவாக செய்துவிட்டே சென்றுள்ளார். போய்வாருங்கள் தோழர்,

  English summary
  Poo Ramu, a character actor in the Tamil film industry, has died of a heart attack. He raised awareness among the people as a street performer and later made his mark in tamil film industry.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X