தமிழ் சினிமா நான் திரும்பி வரேன்.. அதுவும் தளபதிக்கு ஜோடியா.. பூஜா ஹெக்டே சூப்பர் டூப்பர் ட்வீட்!
சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகவுள்ள தளபதி 65 படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே ஒப்பந்தமாகி உள்ளார்.
அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பை பார்த்த சந்தோஷத்தில் நடிகை பூஜா ஹெக்டே போட்டுள்ள ட்வீட் வைரலாகி வருகிறது.

மும்பை பொண்ணு
நடிகை பூஜா ஹெக்டே பிறந்தது வளர்ந்தது எல்லாமே மும்பையில் தான். 2009ம் ஆண்டு மிஸ் இந்தியா அழகிப் போட்டியில் கலந்து கொண்ட அவர், கடைசி நேரத்தில் பட்டத்தை தவற விட்டார். 2010ம் ஆண்டு மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் செகண்ட் ரன்னர் அப்பாக தேர்வானார். மும்பையில் பிறந்திருந்தாலும் அறிமுகம் ஆனது தமிழில் தான்.

சூப்பர் ஹீரோ படம்
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் 2012ம் ஆண்டு ஜீவா நடிப்பில் தமிழில் வெளியான முகமூடி படத்தின் மூலம் தான் பூஜா ஹெக்டே நாயகியாக அறிமுகமானார். அந்த படத்தில் இடம்பெற்ற வாயை மூடி சும்மா இருடா பாடல் இன்றளவும் ஏகப்பட்ட பூஜா ஹெக்டே ரசிகர்களின் ஃபேவரைட்டாக உள்ளது. சூப்பர் ஹீரோ படமாக உருவாகி இருந்த அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

ஹிரித்திக் ரோஷனுக்கு ஜோடி
பின்னர் தெலுங்கில் ஒக்க லைலா கோசம், முகுந்தா என இரு படங்களில் நடித்த பூஜா ஹெக்டே, பாலிவுட்டில் நடிகர் ஹிரித்திக் ரோஷன் நடிப்பில் வெளியான மொகஞ்சதாரோ படத்தில் நாயகியாக நடித்து கலக்கினார். பின்னர், இந்தி மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் பிசியான ஹீரோயினாக பல படங்களில் நடித்து தனது மார்க்கெட்டை அதிகரித்தார்.

வெறித்தனமான ஹிட்
2017ம் ஆண்டு வெளியான அல்லு அர்ஜுனின் துவ்வடு ஜகநாதம் படத்தை தொடர்ந்து மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக மகரிஷி படத்தில் நடித்திருந்தார். பாலிவுட்டில் அக்ஷய் குமார் உடன் இணைந்து ஹவுஸ்ஃபுல் 4 படத்தில் நடித்த பூஜா ஹெக்டே, கடந்த ஆண்டு மீண்டும் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான அலா வைகுந்தபுறமுலோ திரைப்படத்தில் நடித்து வெறித்தனமான வெற்றியை பதிவு செய்தார்.

4 கோடிக்கு மேல்
அலா வைகுந்தபுறமுலோ திரைப்படத்திற்கே சுமார் 4 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தளபதி 65 படத்திற்கு 4.5 கோடி முதல் 5 கோடி வரை இவருக்கு சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. பிரபாஸின் ராதே ஷ்யாம் படத்திற்கும் 4 கோடிக்கு மேல் தான் பூஜா ஹெக்டே வாங்கி உள்ளார்.
சூப்பர் டூப்பர் ட்வீட்
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடிக்கப் போகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள நிலையில், அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ட்வீட் போட்டுள்ள பூஜா ஹெக்டே, சூப்பர் டூப்பர் சந்தோஷத்தில் உள்ளேன். மீண்டும் தமிழ் சினிமாவுக்கு தளபதியின் ஜோடியாக வருகிறேன் என பதிவிட்டு லைக்குகளை குவித்து வருகிறார்.

புது தலைவி
தளபதி விஜய்க்கு யார் ஜோடியாக நடிக்கிறார்களோ அவங்க தான் தளபதி ரசிகர்களுக்கு தலைவி. மாஸ்டர் படத்தில் நடித்த மாளவிகா மோகனனை இதுவரை கொண்டாடி வந்த தளபதி ரசிகர்கள், இனி பூஜா ஹெக்டேவை தங்களது புது தலைவியாக கொண்டாட உள்ளனர். ஏகப்பட்ட விஜய் ரசிகர்கள் பூஜா ஹெக்டேவுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











