Poor To Kubera: நம்பிக்கை மட்டும் வடிவேலுக்கு இல்லையினா.. நமக்குத்தான் வைகைப்புயல் இல்லாம போயிருப்பாரு
சென்னை: நகைச்சுவை நடிகர் என ஒரு கட்டத்திற்குள் மட்டும் வடிவேலுவை அடக்க நினைத்தாலும் வடிவேலு அதைக் கடந்து, பாடகர், குணச்சித்திர நடிகர், கதாநாயகன் என ஜொலித்து வருகிறார். வடிவேலு தமிழ் சினிமாவில் தனக்கென யாருமே இல்லாமல், ராஜ்கிரணிடம் கிடைத்த அறிமுகத்தை மட்டுமே வைத்து நடிக்க வந்தார். இன்றைக்கு தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒன்றாக மாறி நிற்கும் வடிவேலுவின் ஆரம்பகால வாழ்க்கை குறித்தும் அவர் எப்படி எல்லாம் சிரமங்களை எதிர் கொண்டு தன்னை வைகைப்புயலாக மாற்றியுள்ளார் என்பது குறித்து பார்க்கலாம்.
வடிவேலு மிகவும் எளிமையான குடும்பத்தில் பிறந்தவர். அவரது தந்தை மறைவுக்குப் பின்னர், வீட்டை முழுவதும் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு வடிவேலுவின் தலையில் விழுந்தது. இப்படி இருக்கும்போது, போட்டோக்களுக்கு கண்ணாடி ஃப்ரேம் வெட்டும் தொழிலாளியாக பணியாற்றிக் கொண்டிருந்தார். வடிவேலுக்கு சிறுவயதில் இருந்தே நாடகங்களில் நடிக்கும் ஆர்வம் இருந்தது. இதனால் சில கதாபாத்திரங்களில் நகைச்சுவைக் கதாநாயகனாக நடித்து வந்தார்.
மதுரைக்கு வந்த ராஜ்கிரணனைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட வடிவேலு, அவரோடே சென்னைக்கு வந்தார். வந்தவருக்கு ஒரே முகவரி ராஜ்கிரண் அலுவலகம் மட்டும் தான். அலுவலகத்தில் உள்ள வேலைகள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு இருந்த வடிவேலு 1991ஆம் ஆண்டு வெளியான என் ராசாவின் மனசிலே படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது உடல் மொழியால் ரசிகர்கள் மனதை வென்றார்.

அடுத்தடுத்து படங்கள்: இதுமட்டுமல்லாமல் படத்தில் இடம் பெற்ற அட்டகாசமான பாடலான போடா போடா புண்ணாக்கு பாடலையும் இளையராஜா இசையில் பாடினார். இது ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலகினர் மத்தியிலும் கவனத்தைப் பெற்றது. இரண்டாவது படமே கமல்ஹாசனின் தேவர் மகன் படத்தில் நடித்தார். அதன் பின்னர் சிங்காரவேலன் என வடிவேலுவின் உயரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றது.
உடல் மொழி: வடிவேலுவின் உடல் மொழியை வைத்து நடிப்பில் ஆர்வம் உள்ளவர்களுக்கு பல வகுப்புகள் எடுக்கலாம் எனக் கூறும் அளவுக்கு இவரது உடல் மொழி இருக்கும். கிழக்குச் சீமையிலே படத்தில் வரும் மானூத்து மந்தையிலே பாடலின் தொடக்கத்திலும் இறுதியிலும் வடிவேலுவின் உடல்மொழியும் நடன அசைவுகளும் மெச்சத் தகுந்தது. அதேபோல் எல்லாமே என் ராசாதான் படத்தில் சாப்பாட்டிற்குள் மீன் கறியை புதைத்து வைத்துவிட்டு, " கடவுளே.. எத்தனை ஆண்டுகள்" என்று அவர் கூறும் டயலாக் கைதேர்ந்த நடிகரின் நடிப்புக்கு இணையாக இருந்தது.
வடிவேலு உயரம்: அதேபோல் முத்து படத்தில் ஒப்பனை அறை எங்கே இருக்கின்றது என்று ரஜினியிடம் அவர் கேட்கும் போது, போதையில் இருப்பவரைப் போன்ற உடல் மொழியும் அட்டகாசம். வடிவேலு இருந்தாலே படம் ஹிட் அடித்துவிடும் அல்லது வசூலை அள்ளி விடும் என்ற நிலைக்கு தனக்கான மார்க்கெட்டினை உயர்த்திக் கொண்டார். இன்றைக்கு வடிவேலு எட்டியிருக்கும் உயரம் அவரது ஆரம்ப காலத்தில் பட்ட கஷ்டங்களுக்கும் உழைப்புக்கும் வடிவேலு அடையவேண்டிய உயரம் இன்னும் இருக்கிறது.



Click it and Unblock the Notifications











