அட பாவமே.. தீவிர சிகிச்சைப்பிரிவில் பாப் பாடகி மடோனா..கவலையில் ரசிகர்கள்!
நியூயார்க்: பிரபல அமெரிக்க பாடகி மடோனா உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
லைக் எ பிளேயர், ட்ரூ ப்ளூ, மடோனா, மேடம் எக்ஸ் என பல ஹிட் ஆல்பங்களை கொடுத்துள்ள மடோனாவை, குயின் ஆஃப் பாப் என 80களில் இருந்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
1958ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி பிறந்த மடோனா, பாடலாசிரியர், பாடகி மற்றும் நடிகை என உலகம் முழுவதும் தனது திறமைகளை நிரூபித்து, ஏகப்பட்ட ரசிகர்களை சொந்தமாக்கி உள்ளார்.
பாடகி மடோனா: 1982ம் ஆண்டு வெளியான எபோனிமஸ் எனும் இசை ஆல்பத்தின் மூலம் பாடகியாக அறிமுகமான மடோனா, பல ஹிட் ஆல்பங்களை கொடுத்து, இசை அரசி என்ற பட்டத்தை பெற்றார். லைக் எ வெர்ஜின், ட்ரூ ப்ளூ, கிராமி விருது வென்ற ரே ஆஃப் லைட், லைக் எ பிரேயர், டேக் எ பவ், மியூசிக், ஹங் அப், ஃப்ரோஸன், 4 மினிட்ஸ் என பல ஆல்பங்கள் மடோனாவின் புகழை உலக முழுவதும் கொண்டு சென்றது.

அனைவருக்கும் பிடித்த பாடகி: உலகளவில் 300 மில்லியன் இசைத் தட்டுகளை விற்ற ஒரே பிரபல பாடகி என்ற பெயரையும் பெற்று, கின்னஸ் சாதனை படைத்தவர் மடோனா. பில்போர்ட், ரோலிங் ஸ்டோன் என இசை துறையில் பிரபலமான பத்திரிகைகள் மற்றும் நிறுவனங்களுக்கு எப்போதும் பிடித்த பாடகியாகவே இருந்தார்.
கவர்ச்சி போஸ்: 64 வயதாகும் மடோனாவின் அழகும், அவரது இனிமையான குரலும் இன்னும் மாறாமல் அப்படியே இருப்பது, உலக ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறது. இணையத்தில் படு ஆக்டிவாக இருக்கும் மடோனா அரை நிர்வாணமாக டாப்லெஸ் மிரர் செல்ஃபி புகைப்படத்தை எடுத்து வெளியிட்டு ரசிகர்களை திகைப்பில் ஆழ்த்தினார். இதனால், இவரது இன்ஸ்டாகிராம் பக்கம் முடக்கப்பட்டு,பின் திரும்ப பெற்றார்.
மருத்துவமனையில் மடோனா: இந்நிலையில், பாப் பாடகி மடோனா பாக்டீரியா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக அவரது மேலாளர் தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை மடோனாவுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருகிறது, இருப்பினும் அவர் இன்னும் சில நாட்கள் மருத்துவர்களின் கவனிப்பில் இருப்பார்.
ரசிகர்கள் கவலை: இதனால், கனடாவின் வான்கூவரில் ஜூலை 15 ஆம் நடக்கவிருந்த நிகழ்ச்சி ரத்துசெய்யப்படுகிறது.நிகழ்ச்சி நடக்கும் புதிய தேதியை விரைவில் அறிவிப்போம் என்று மடோனாவின் மேலாளர் ஓஸரி கூறினார். மடோனா மருத்துவமனையில் இருக்கும் செய்தி அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











