அடுத்த அதிர்ச்சி.. பிரபல தயாரிப்பாளர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.. சோகத்தில் மூழ்கிய திரையுலகம்
ஹைதராபாத்: பிரபல தெலுங்கு தயாரிப்பாளரும் மக்கள் தொடர்பாளருமான மகேஷ் எஸ். கொனேரு மாரடைப்பு காரணமாக இன்று காலமானார்.
நேற்று பிரபல நடிகர் நெடுமுடி வேணு காலமான நிலையில், திரையுலகினரை மீண்டும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது எஸ்.எம். கொனேருவின் திடீர் மரணம்.
ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்ட பல பிரபலங்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

எஸ்.எம். கொனேரு மரணம்
மகேஷ் எஸ் கொனேருவை சுருக்கமாக எஸ்.எம். கொனேரு என்றே டோலிவுட் சினிமா உலகில் அனைவரும் அன்போடு அழைத்து வந்த நிலையில், அவரது திடீர் மரணம் ஒட்டுமொத்த சினிமா உலகையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. மாரடைப்பு காரணமாக இன்று காலை அவர் காலமானார்.

தெலுங்கு தயாரிப்பாளர்
நந்தமுரி கல்யாண்ராமின் '118', திம்மரசு, சபாக்கு நமஸ்காரம் மற்றும் போலீஸ் வாரி எச்சரிக்கா உள்ளிட்ட சில படங்களை அவர் தயாரித்துள்ளார். மேலும், ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்ட சினிமா பிரபலங்களுக்கு மக்கள் தொடர்பு கலைஞராகவும் சினிமா விநியோகஸ்தரராகவும் பணியாற்றி பிரபலமானவர்.

ஜூனியர் என்.டிஆர் பி.ஆர்
டோலிவுட்டின் முன்னணி நடிகரான ஜூனியர் என்.டி.ஆருக்கு பர்சனல் பி.ஆராக பணியாற்றி வந்தவர் மகேஷ் கொனேரு. அவர் உயிரிழந்த செய்தியை அறிந்த ஜூனியர் என்.டி.ஆர் மீளமுடியாத சோகத்தில் ஆழ்ந்திருப்பதாகவும் அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்றும் ட்வீட் போட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.

விஜய்யுடன் இணைந்து
தளபதி விஜய்யின் பிகில் மற்றும் மாஸ்டர் உள்ளிட்ட படங்களை டோலிவுட்டில் விநியோகம் செய்தவர் மகேஷ் எஸ். கொனேரு. மாஸ்டர் படப்பிடிப்பின் போது விஜய்யுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அதிகளவில் ஷேர் செய்து விஜய் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ராஷி கன்னா அதிர்ச்சி
வாழ்க்கை மிகவும் கணிக்க முடியாததாகவே இருக்கிறது என நடிகை ராஷி கன்னா தனது ட்விட்டர் பக்கத்தில் மகேஷ் கொனேருவிற்கு இரங்கல் தெரிவித்து அவர் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்துள்ளார். ஏகப்பட்ட டோலிவுட் பிரபலங்களும் ரசிகர்களும் மகேஷின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சோகத்தில் திரையுலகம்
பழம்பெரும் மலையாள நடிகர் நெடுமுடி வேணு நேற்று உயிரிழந்த நிலையில், இன்று தெலுங்கு சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் மகேஷ் கொனேரு உயிரிழந்துள்ளார். 2020ம் ஆண்டு ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் உயிரிழந்த நிலையில், 2021ம் ஆண்டும் சினிமா பிரபலங்களின் தொடர் மரணம் ஒட்டுமொத்த திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











