TTF Vasan: பைக் சாகசமா பண்ற.. இனி பைக்கை தொடவே முடியாது.. டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமம் ரத்து!
சென்னை: பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படுவதாகக் காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் அறிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தை சேர்ந்த வைகுந்த வாசன் இருசக்கர வாகன நீண்ட தூரம் பயணம் செய்து யூடியூபில் பிரபலமானார்.
அதிவேகமாக வீலிங் செய்யும் வீடியோக்களை பதிவிட்ட வாசன் 40 லட்சம் சப்ஸ்க்ரைபர்ஸ் வைத்து இருக்கிறார்.
யூடியூபர் டிடி எப் வாசன்: டிடி எப் வாசன் சென்னையிலிருந்து கோவை செல்லும்போது காஞ்சிபுரம் அடுத்த பாலுசெட்டி சத்திரம் அருகே தேசிய நெடுஞ்சாலை பகுதியில் வீலிங் செய்ய முயன்ற போது நிலை தடுமாறி இவரது வாகனம் சாலையோர பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்: அவர் பைக் ரைடுக்கான உடை அணிந்து இருந்ததால் கையில் காயத்துடன் உயிர் தப்பினார். இதுகுறித்து வாசன் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸ் அவரைக் கைது செய்து காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதில் அவருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டதை அடுத்து, வாசன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஜாமீன் ரத்து: மூன்று முறை அவர் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில்,அவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அவருடைய ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்துக்கழகம் கடந்த 10 நாட்களுக்கு முன்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அந்த நோட்டீசுக்கு உரிய விளக்கம் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
கண்டனம் தெரிவித்த நீதிபதி: காஞ்சிபுரம் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், உயர்நீதிமன்ற நீதிபதிகள், நீதிமன்ற காவலிலேயே நீடிக்கட்டும் எனக் கூறிய நீதிபதி, டிடிஎப் வாசனின் youtube தளத்தை மூடிவிட்டு அவரது பைக்கை எரித்துவிட வேண்டும் என கடுமையான கருத்தை தெரித்து மனுவைத் தள்ளுபடி செய்தார்.
ஓட்டுநர் உரிமம் ரத்து: இந்நிலையில், டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்து காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். டிடிஎஃப் வாசன் மீது பல்வேறு பகுதிகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாகனம் ஓட்டியதற்காக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பத்தாண்டுகளுக்கு அவரது ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதாவது, 2033ஆம் ஆண்டு வரை அவரது ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











