Por Thozhil: போர் தொழில் நைட் ஷோ பார்க்க குவிந்த ரசிகர்கள்... குடும்பத்தோட கிளம்பி வந்துட்டாங்களே
சென்னை: அசோக் செல்வன், சரத்குமார் நடித்துள்ள போர் தொழில் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.
விக்னேஷ் ராஜா இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்துள்ளன.
முதல் நாளிலேயே நல்ல விமர்சனங்கள் கிடைத்துள்ளதால் படத்தை பார்க்க ரசிகர்களிடம் அதிக ஆர்வம் காணப்படுகிறது.
இந்நிலையில், போர் தொழில் படத்தைப் பார்க்க நேற்று இரவு திரையரங்குகளில் நீண்ட வரிசையில் ரசிகர்கள் காத்திருந்தது வைரலாகி வருகிறது.

போர் தொழில் படம் பார்க்க குவிந்த ரசிகர்கள்:அசோக் செல்வன், சரத்குமார், சரத்பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள போர் தொழில் படம் நேற்று வெளியானது. க்ரைம் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு முதல் நாளிலேயே நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது. ப்ளு சட்டை மாறன் உட்பட பல சினிமா விமர்சகர்களும் போர் தொழில் படத்தை ரொம்பவே பாராட்டியுள்ளனர். இதனால், இந்தப் படம் சினிமா ரசிகர்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்துள்ளது.
திருச்சி பகுதியில் இளம்பெண்கள் சிலர் அடுத்தடுத்து ஒரேமாதிரியாக கொலை செய்யப்படுகின்றனர். அவர்களை கொலை செய்தது யார் என கண்டுபிடிக்க அனுபவம் வாய்ந்த சீனியர் போலீஸ் ஆபிஸரான சரத்குமாரும் புதிதாக வேலைக்கு சேர்ந்த அசோக் செல்வனும் இணைகிறார்கள். பல முரண்கள் நிறைந்த இவர்கள் இருவரும் அந்த கொலையாளியை எப்படி கண்டுபிடித்தார்கள் என்பது தான் போர் தொழில் படத்தின் கதை.
படத்தின் முதல் பாதியிலேயே கொலையாளி யார் என கண்டுபிடித்துவிடுகிறார்கள். இதற்குமேல் என்ன சுவாரஸ்யம் இருக்கப்போகிறது என நினைத்தால், இரண்டாம் பாதியில் வேற லெவலில் மிரட்டியுள்ளார் இயக்குநர். திரைக்கதை, பின்னணி இசை, எடிட்டிங், மேக்கிங் ஸ்டைல் என எல்லாவற்றிலும் 100 சதவீத உழைப்பை கொடுத்துள்ளது போர் தொழில் டீம். இதுவே இப்படத்தின் வெற்றி என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
அசோக் செல்வனும் சரத்குமாரும் தங்களது கேரக்டர் என்னவென்பதை உணர்ந்து கச்சிதமாக நடித்துள்ளனர். இந்தப் படத்தில் மறைந்த சரத்பாபு ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது நடிப்பும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழில் வெளியான ஒரு கிரைம் திரில்லர் படத்துக்கு பாசிட்டிவான ஓப்பனிங் கிடைத்துள்ளது. இதனால், இரவோடு இரவாக திரையரங்குகளில் குவிந்துவிட்டனர் ரசிகர்கள்.

சென்னையில் நேற்று மாலை ஷோ 80 சதவீதம் வரை டிக்கெட் புக்கிங் செய்யப்பட்டுள்ளன. அதேபோல் நைட் ஷோ பார்க்க ரசிகர்கள் குடும்பத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்தது திரையுலகையே ஆச்சரியப்படுத்தியுள்ளது. பொன்னியின் செல்வன் போன்ற பிரம்மாண்டமான படங்களுக்கும், முன்னணி ஹீரோக்கள் நடித்த படங்களுக்கும் கிடைக்கும் வரவேற்பை விட போர் தொழில் கொண்டாடப்படுகிறது. மினிமம் பட்ஜெட் படமாக இருந்தாலும் கதை, திரைக்கதை தரமாக இருந்தால் யார் நடித்தாலும் அது வெற்றிபெறும் என்பதற்கு போர் தொழில் உதாரணம் எனலாம்.
தெகிடி, ராட்சசன் படங்கள் வரிசையில் அட்டகாசமான சைக்கோ திரில்லர் படம் என போர் தொழிலை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், அதிகம் எதிர்பார்ப்பில்லாமல் ரிலீஸான போர் தொழில் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், ஸ்க்ரீன்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தியேட்டர் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. பாக்ஸ் ஆபிஸிலும் இந்தப் படம் சம்பவம் செய்து வருவதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications











