Por Thozhil: கேரளாவில் அதிரடி காட்டும் போர் தொழில்.. 2 மடங்காக அதிகரிக்கப்பட்ட திரையரங்குகள்!
சென்னை: நடிகர்கள் சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா விமல், சரத்பாபு உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது போர் தொழில்.
க்ரைம் த்ரில்லராக வெளியாகியுள்ள இந்தப் படம் கடந்த தினங்களில் சிறப்பான வசூலை இந்தப் படம் எட்டியுள்ளது.
இதனிடையே தமிழகத்தில் மட்டுமில்லாமல் மற்ற மாநிலங்களிலும் குறிப்பாக கேரளாவில் இந்தப் படம் அதிரடி காட்டி வருகிறது.

கேரளாவிலும் வரவேற்பை பெற்ற போர் தொழில் படம்: நடிகர் சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா விமல், சரத்பாபு உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் ரிலீசாகியுள்ள படம் போர் தொழில். இந்தப் படம் க்ரைம் த்ரில்லராக வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து அரங்கு கொள்ளாத காட்சிகளாக ஓடி வருகிறது. இந்நிலையில் இந்தப் படம் கடந்த 6 நாட்களில் 8 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
போர் தொழில் படத்தை இயக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா. இந்தப் படததின் வெற்றி தனக்கு உத்வேகம் அளிப்பதாக அவர் தனது சமீபத்திய பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். இந்தப் படம் சிறப்பாக இருக்கும் என்று தான் கருதியதாகவும் ஆனால் இந்த அளவிற்கு வரவேற்பு இருக்கும் என்று நினைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இந்தப் படத்தின் வெற்றி தனக்கு கூடுதல் பொறுப்பை அளித்துள்ளதாகவும் தனது அடுத்தப்படமும் த்ரில்லர் படமாகவே அமையும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
முதல் நாளில் படத்தின் வசூல் சற்று குறைவாகவே காணப்பட்டது. ஆனால் அடுதத நாளிலேயே படம் சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் பெற்று வருகிறது. குறிப்பாக கூறவேண்டுமென்றால், முதல் நாளின் இரவுக்காட்சியிலேயே படத்தை புக் செய்ய ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டினர். திரையரங்குகளிலும் ரசிகர்களின் கூட்டத்தை அதிகமாக பார்க்க முடிந்தது. குறிப்பாக இந்தப் படம் விமர்சனங்களை தொடர்ந்தே வெற்றிகரமாக ஓடி வருகிறது.

படம் தமிழகத்தில் மெகா ஹிட்டடித்துள்ள நிலையில் கேரளாவிலும் மிகச்சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. கேரளாவில் பெரும்பாலும் தமிழின் முன்னணி நடிகர்களின் படங்கள் மட்டுமே சிறப்பான வரவேற்பை பெறும். ஆனால் தற்போது கதைக்கும் ஸ்கிரிப்டிற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வெளியாகியுள்ள அறிமுக இயக்குநரின் படத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. கேரளாவில் கடந்த வெள்ளிக்கிழமை 51 திரையரங்குகளில் போர் தொழில் ரிலீஸ் செய்யப்பட்டது.
5 நாட்களில் படம் 1.05 கோடி ரூபாய்களையும் வசூலித்தது. இந்நிலையில் படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பையடுத்து திரையரங்குகளின் எண்ணிக்கை 104ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இரண்டாவது வாரத்தில் இவ்வாறு இந்த அளவிற்கு திரையரங்குகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது சிறப்பாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கேரளாவில் படத்தின் ப்ரமோஷன்களை சிறப்பாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் திரையரங்க விசிட்களை செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











