'கோச்சடையானுக்குப்' போட்டியாக ரிலீஸாகிறது 'ஆனந்தத்தொல்லை' - பவர் ஸ்டார் 'பரபரப்பு'ப் பேட்டி!
சென்னை: சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல கொஞ்சம் கூட கூச்சம் நாச்சமே இல்லாமல், பட்பட்டென்று பேசி பகீர் என திகைக்க வைக்கிறார் பவர்ஸ்டார் சீனிவாசன். கோச்சடையானுக்குப் போட்டியாக தனது ஆனந்தத் தொல்லை படத்தை ரிலீஸ் செய்யப் போவதாக அவர் சற்றும் சலனமில்லாமல் கூறியுள்ளார்.
சிலருக்கு செயலில் பந்தா இருக்கும், சிலரது சேஷ்டைகளில் பந்தா இருக்கும். ஆனால் பேச்சே பெரும் பந்தவாகத் திரிவது சீனி மட்டுமே.
இவரைப் போல உதார் பேர்வழி ஒருவர் உலகில் உண்டா என்றால் நிச்சயம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் இவரும் இன்று தமிழ் சினிமாவில் ஒரு நடிகர். சும்மா நடிகர் கூட இல்லை -பிரபல நடிகர். இவரது பேச்சுக்களை நம்புவதா, வேண்டாமா என்றே தெரியவில்லை. ஆனாலும் இவர் பேசிக் கொண்டுதான் இருக்கிறார், அதையும் நாம் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம்.
ஒன்பதுல குரு படத்தில் இவரை இப்போது ஒருநடிகராக சேர்த்துள்ளனர். சும்மா இல்லை சகாக்களே -லட்சுமி ராயுடன் ஒரு குத்துப் பாட்டுக்கு ஆட வைத்து அமர்க்களப்படுத்தியுள்ளனர்.
இதை மையமாக வைத்து ஒரு பிரஸ் மீட் போட்டார் பவர்... அப்போது அவர் உதிர்த்த வார்த்தைகள் இதோ...

இப்ப 10 கோடி அடுத்த வருஷம் 15 கோடி
நான் கோடிக்கணக்கில் சம்பளம் கேட்கிறேன் என்று பேசிக்கொள்கிறார்கள். இந்த வருடம் 10 கோடி கேட்பேன். அடுத்த வருடம் 15 கோடி கேட்பேன்.

விட்டதை எடுக்க வேண்டாமா...
இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. நான் சினிமாவில் வருவதற்காக கோடி கணக்கில் பணத்தை வாரி இரைத்திருக்கிறேன். அந்த பணத்தை திரும்ப எடுக்க கோடிக்கணக்கில் தான் சம்பளம் கேட்க வேண்டும்.

கையில் 6 - இன்னும் இரண்டுக்குப் பேச்சு
மேலும் எனக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருப்பதால் கோடிகளில் சம்பளம் கேட்கிறேன். தற்போது ஆறு படங்கள் கையில் இருக்கின்றன. மேலும் இரண்டு பெரிய பட்ஜட் படங்களில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

லட்சுமிதான் ஹீரோயின் - ஐஸ்வர்யாவையும் விடலை
பெரிய பட்ஜட் படத்தில் லட்சுமிராய் தான் எனக்கு ஹீரோயின் என்பதையும் இப்போதே சொல்லிவிடுகிறேன். ஒரு படத்தில் நடிக்க கேட்ட போது அந்த ஆள் கூட யார் நடிப்பா? என்று லட்சுமிராய் என்னை அலட்சியப்படுத்தியதால் தான் இந்த முடிவுக்கு வந்தேன். ஐஸ்வர்யா ராயுடன் நடித்தே தீரவேண்டும் என்ற என் முடிவையும் நான் மாற்றிக்கொள்ளவில்லை.

லத்திகாவுக்கே இந்தப் புகழ்...
நான் வெளியிட்ட ஒரு படத்திற்கே(லத்திகா) இவ்வளவு புகழ் கிடைத்துவிட்டதால் மற்ற படங்களை கிடப்பில் போட்டுவிட்டேன். ஆனால் ஆனந்த தொல்லை படத்தை மட்டும் ரிலீஸுக்கு தயாராக வைத்திருக்கிறேன்.

கோச்சடையானுக்குப் போட்டியாக ஆனந்தத் தொல்லை
ரஜினியின் உழைப்பு அவரிடம் எனக்கு மிகவும் பிடித்தது. அதனால் தான் அவரை மானசீக குருவாக ஏற்றுக்கொண்டேன். கோச்சடையானுக்கு போட்டியாக, ஆனந்தத் தொல்லை படம் ரிலீஸ் செய்யப்படும் என்றாரே பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











