எஸ்.ஏ.சி, கேயாருடன் 'பவர் ஸ்டார்' மோதும் தயாரிப்பாளர் சங்க தேர்தல்- விறுவிறு வாக்குப்பதிவு!

கடந்த திமுக ஆட்சியின்போது தயாரிப்பாலர் சங்க தலைவராக இருந்த ராம.நாராயணன் மற்றும் அவரது குழுவினர் அதிமுகஆட்சிக்கு வந்ததும விலகிக் கொண்டனர். இதையடுத்து தற்போது புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்ய தேர்தல் நடைபெறுகிறது.
இதில் எஸ்.ஏ.சந்திரசேகர் தலைமையில் ஒரு அணியும், கே.ஆர் தலைமையில் இன்னொரு அணியும் மோதுகின்றன.
தலைவர், 2 துணைத் தலைவர்கள், 2 செயலாளர்கள், பொருளாளர், 21 செயற்குழு உறுப்பினர்களைத் தேர்வு செய்ய வேண்டும்.
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அரங்கில் நடைபெறும் இந்தத் தேர்தலில் 770 பேருக்கு வாக்குரிமை உண்டு. காலை 9 மணிக்குத் தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 4 மணி வரை மகா விறுவிறுப்பாக நடந்தது.
பல்வேறு பிரபல தயாரிப்பாளர்கள், சங்க உறுப்பினர்களாக உள்ள இயக்குநர்கள், பிரபல நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்டோர் வாக்களித்தனர். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் போன்ற உறுப்பினர்கள் வரவில்லை. ராதிகா உள்ளிட்ட பல பிரபலங்களைக் காண முடிந்தது.
களத்தில் குதித்த 'பவர் ஸ்டார்'!!
இந்த தேர்தலின் விசேஷமே டாக்டர் சீனிவாசன்தான். நிறைய பேருக்கு இவரைத் தெரிந்திருக்காது. ஆனால் தமிழ்த் திரையுலகில் இவரும் ஒரு 'முக்கிய'ப் புள்ளிதான். தலைவர் பதவிக்கு டாக்டர் எஸ்.சீனிவாசன் போட்டியிடுகிறார்.
தமிழ்த் திரையுலகில் பெரும் சாதனை படைத்த படங்களுக்கே சவால் விடும் வகையில் இவர் நடித்த லத்திகா என்ற படம் '200' நாட்களைக் கடந்து அதிரிபுதிரியாக 'ஓடிக்' கொண்டிருக்கிறது (எங்கே என்றுதான் தெரியவில்லை!!!)
தனக்குத் தானே 'பவர் ஸ்டார்' என்ற பட்டத்தைக் கொடுத்துக் கொண்டு கண்களைக் 'கூச' வைக்கும் கூலிங் கிளாஸுடன், 'தக்காளி+கேரட்' கலருடன் படு வித்தியாசமாக, வில்லனா, ஹீரோவா, கேரக்டரா, காமெடியா என எந்த அடையாளமும் காணப்பட முடியாத ஒரு வகை 'கேரக்டருடன்' காணப்படும் இவரை, தமிழ்த் திரையுலகைக் காக்க வந்த 'தெய்வத்திருமகனாக' இவரது 'ரசிகர்கள்' கொண்டாடிக் கூத்தாடுகின்றனர்!!!
இப்படிப்பட்ட 'பவர்புல் பேக்கிரவுண்டு'டன் கூடிய சீனிவாசன் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதால் தயாரிப்பாளர் சங்க தேர்தலுக்கு 'தனிப்பெருமையே' கிடைத்துள்ளது.
'பவர் ஸ்டார்' அசத்துவாரா, மற்ற 'சூப்பர் பவர்'களை காலி செய்வாரா என்ற பெரும் எதிர்பார்ப்புடன் காத்துள்ளனர் தமிழ்த் திரையுலக தயாரிப்பாளர்கள்!!!!


Click it and Unblock the Notifications











