ரியல் கர்ணனாக மாறிய பிரபாஸ்.. வயநாடு நிலச்சரிவு பாதிப்பு.. 2 கோடி நிதியுதவி வழங்கிய டார்லிங்!
திருவனந்தபுரம்: வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்க நடிகர் பிரபாஸ் கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 2 கோடி வழங்கியுள்ளார். கேரளாவின் வயநாடு பகுதி கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக 350க்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை பலி கொண்டது.
கேரள மக்கள் வயநாடு நிலச்சரிவால் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர். சினிமா பிரபலங்கள் பலர் களத்தில் இறங்கி வேலை பார்த்து வருகின்றனர். பொதுமக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை மலையாள திரையுலகினர் மட்டுமின்றி தென்னிந்திய நடிகர்களும் வழங்கி வருகின்றனர்.

இந்த ஆண்டு பிரபாஸ் நடித்த கல்கி 2898 ஏடி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் பெற்ற நிலையில், பிரபாஸ் மிகப்பெரிய தொகையை நிவாரண நிதியாக வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கோலிவுட் பிரபலங்கள் நிதியுதவி: சியான் விக்ரம் 20 லட்சம் ரூபாயை நிவாரண நிதியாக வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழங்கினார். கமல்ஹாசன் 25 லட்சம் ரூபாயும், நயன்தாரா 20 லட்சம் ரூபாயும் சூர்யா, கார்த்தி மற்றும் ஜோதிகா மூவரும் இணைந்து 50 லட்சம் ரூபாயும் நிதியுதவி வழங்கினர். 350க்கும் மேற்பட்ட மக்கள் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளனர். 1000க்கும் மேற்பட்ட மக்கள் வீடு, வாசல், சொந்தங்கள் இன்றி தவித்து வருகின்றனர். அவர்களின் வாழ்வாதாரத்தை இயல்பு நிலைக்கு திருப்பிக் கொண்டு வர நிவாரண நிதி பயன்படும் என்பதால் தென்னிந்திய பிரபலங்கள் பலர் தாராளமாக நிதியுதவி வழங்கி வருகின்றனர்.
பிரபாஸ் 2 கோடி நிதியுதவி: டோலிவுட்டில் அதிகப்படியாக சிரஞ்சீவி மற்றும் ராம்சரண் 1 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கிய நிலையில், நடிகர் பிரபாஸ் தற்போது 2 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. புஷ்பா 2 பட ஹீரோ அல்லு அர்ஜுன் 25 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

ரியல் கர்ணன்: சலார் படத்தில் மலையாள நடிகர் பிருத்விராஜ் பிரபாஸ் உடன் இணைந்து நடித்திருப்பார். அந்த படத்தில் பிருத்விராஜ் துரியோதனன் போலவும் பிரபாஸ் கர்ணன் போலவும் தான் இருப்பார்கள். அந்த படத்தைத் தொடர்ந்து நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி நடித்த கல்கி 2898 ஏடி படத்தில் கர்ணனாக நடித்த பிரபாஸ் தற்போது கேரள மக்களுக்காக ரியல் கர்ணனாகவே மாறியுள்ளார் என அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
மோகன்லால் தான் அதிகம்: நடிகர் மோகன்லால் அதிகபட்சமாக 3 கோடி ரூபாய் அளவுக்கு நிதியுதவி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், ராணுவ உடை அணிந்து வந்து நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களை அவர் பார்வையிட்ட வீடியோக்களும் சமீபத்தில் வெளியாகின. தொடர்ந்து சினிமா பிரபலங்கள் இக்கட்டான நேரத்தில் மக்களுக்கு உதவி செய்வது பாராட்டுக்குரிய விஷயம் தான்.


Click it and Unblock the Notifications











