ரஷ்ய ரசிகர்களையும் ஈர்த்த 'பாகுபலி..' ஹீரோ பிரபாஸ் பெயரை பச்சைக்குத்திக் கொண்ட பாசக்கார ரசிகை!
சென்னை: பாகுபலி படம் ரஷ்யாவில் ஒளிபரப்பானதை அடுத்து ஹீரோ பிரபாஸூக்கு அங்கும் ரசிகைகள் பெருகியுள்ளனர்.
பிரபாஸ், ராணா, அனுஷ்கா, சத்யராஜ், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், நாசர் உட்பட பலர் நடித்த படம், பாகுபலி.
ராஜமவுலி இயக்கிய இந்தப் படம், தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட பல்வேறு மொழிகளில் வெளியாகி வெற்றி பெற்றது.

வசூல் சாதனை
இதன் முதல் பாகம், 2015 ஆம் ஆண்டும் இரண்டாவது பாகம் 2017 ஆம் ஆண்டும் வெளியானது. அதிக வரவேற்பை பெற்ற பாகுபலி 2, இந்திய சினிமாவில் பல சாதனைகளைப் படைத்தது. முதன்முதலில் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை தாண்டிய தென்னிந்திய படம் என்ற பெருமையை இது பெற்றது. பொதுவாக இந்திப் படங்கள்தான் உலக அளவில் அதிக வசூலைக் குவிப்பது வழக்கம். அதை முறியடித்து சாதனை படைத்திருந்தது பாகுபலி.

ரஷ்ய தூதரகம்
இந்தியா மட்டுமல்லாமல், பல்வேறு நாடுகளில் வரவேற்பை பெற்ற பாகுபலி, ரஷ்ய மொழியிலும் டப் ஆகி வெளியானது. அங்குள்ள தொலைக்காட்சி ஒன்றில் இந்தப் படம் ஒளிபரப்பப்பட்டுள்ளது. இதை இந்தியாவில் உள்ள ரஷ்ய தூதரகம் தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் தெரிவித்திருந்தது. இதை ரசிகர்கள் டிரெண்ட் செய்தனர்.

ரஷ்ய ரசிகை
பாகுபலி படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான நடிகர் பிரபாஸ், மற்ற நாடுகளிலும் பிரபலமடைந்துள்ளார். மோஸ்ட் வான்டட் பேச்சிலரான அவருக்கு ஏராளமான ரசிகைகள் உள்ளனர். பாகுபலி ரஷ்யாவில் வெளியான பிறகு அங்கும் அவருக்கு ரசிகைகள் பெருகி உள்ளனர். இந்நிலையில் ரஷ்ய ரசிகை ஒருவர், பிரபாஸின் பெயரை தனது முதுகில் பச்சைக் குத்தி உள்ளார்.

எப்படி இருக்கு?
அந்தப் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த டாட்டூவில், சிவப்பு நிற இதயத்துக்குள் பிரபாஸ் என்றும் வெளியே லவ் என்றும் எழுதப்பட்டுள்ளது. 'வலி நிறைந்த நாள், ஆனாலும் இந்த ரிசல்ட் வந்ததில் மகிழ்ச்சி. எப்படி இருக்கு நண்பர்களே?' என்று கேட்டுள்ளார் அந்த ரசிகை. இதற்கு பிரபாஸ் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

பூஜா ஹெக்டே
நடிகர் பிரபாஸ், இப்போது கே.கே. ராதாகிருஷ்ணா இயக்கும் பீரியட் படத்தில் நடிக்கிறார். இதில் பிரபாஸ் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இதன் ஷூட்டிங், ஜார்ஜியாவில் நடந்து வந்தது. கொரோனா வைரஸ் தீவிரமடைந்ததால் அங்கிருந்து படக்குழு அவசரமாகத் திரும்பியது. இப்போது லாக்டவுன் காரணமாக இதன் ஷூட்டிங் தடைபட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











