வாக்கு வாதத்தில் ரசிகர்கள்! சொதப்பிய கல்கி 2898 ஏ.டி டீம்! சென்னை, புனே ஐமேக்ஸ் முதல் காட்சி ரத்து!
சென்னை: உலகம் முழுவதும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான கல்கி 2898 ஏ.டி படம் இன்று அதாவது ஜூன் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்ததால் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னரே ப்ரீ புக்கிங்கில் மட்டும் கிட்டத்தட்ட ரூபாய் 37 கோடி வசூல் செய்தது. பிரபாஸ் கதாநாயகனாக நடித்து வெளியாகியுள்ள இந்த படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இது மட்டும் இல்லாமல் இவர்களுடன் படக்குழு தெரிவிக்காத பல பிரபலங்கள் கேமியோ ரோல் செய்துள்ளனர் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளது.
குறிப்பாக துல்கர் சல்மான், ராஷ்மிகா மந்தனா, இயக்குநர் ராஜமௌலி, விஜய் தேவரகொண்டா ஆகியோர் படத்தில் கேமியோ செய்திருப்பதாக கூறப்படுகின்றது. படத்தினை தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் படக்குழு ரிலீஸ் செய்துள்ளது. வைஜெயந்தி மூவீஸ் தயாரித்துள்ள இந்த படத்தினை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார். மேலும் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படத்தில் பின்னணி இசையை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

படத்திற்கான எதிர்பார்ப்பு ஏற்கனவே அதிக அளவில் இருந்ததால், பிரபாஸ் ரசிகர்கள் ஹைதராபாத்தில் உள்ள மிகப்பெரிய திரையரங்குகளில் படத்தைப் பார்க்க நேற்று இரவில் இருந்தே காத்திருக்கத் தொடங்கினர். அதிகாலை சிறப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் ரசிகர்கள் பிரபாஸ் படத்தின் சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்களை ஒலிக்கச்செய்து நடனமாடியபடி படத்தின் ரிலீஸை கொண்டாடினர்.
ஏற்கனவே படக்குழு தரப்பில் இருந்து அறிக்கை வெளியிடப்பட்டு இருந்தது. அதில், கடந்த 4 ஆண்டுகளாக இந்த படம் மிகுந்த பொருட்செலவில், பெரும் சிரமத்திற்கு மத்தியில் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே படத்தைப் பார்க்கும் ரசிகர்கள் படம் குறித்த தகவல்களை வெளியே சொல்ல வேண்டாம் என கோரிக்கை வைத்திருந்தனர்.

டிக்கெட் விலை ரூ.2300: படக்குழு தரப்பில் இருந்து படம் தொடர்பான புரோமோஷன்கள் பெரும்பாலும் தெலுங்கானா, ஆந்திரா, மகாராஸ்ட்ரா மாநிலங்களில்தான் அதிகம் நடைபெற்றது. இதனால் மும்பையில் படத்தின் டிக்கெட் விலை ரூபாய் 1560இல் இருந்து ரூபாய் 2300 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆந்திராவில் டிக்கெட் விலையை அரசாங்கமே உயர்த்தி அறிவித்தது. தமிழ்நாட்டில் படம் தொடர்பாக ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு கூட நடத்தப்படவில்லை. இப்படியான நிலையில் சென்னை போன்ற பெரு நகரங்களில் படத்தின் மீது ஓரளவுக்கு எதிர்பார்ப்பு இருந்தது.

குறிப்பாக ஐமேக்ஸ் திரையில் பார்ப்பதற்காக ரசிகர்கள் முன்பதிவும் செய்திருந்தனர். இந்நிலையில் படத்தின் முதல் காட்சிகள் ஐமேஸ் திரையரங்குகளில் ஒளிபரப்பபடவில்லை. மாறாக ரசிகர்கள் நீண்ட நேரம் காக்கவைக்கப்பட்டுள்ளனர். இதற்கான காரணமாக கூறப்படுவது, படத்தயாரிப்பு நிறுவனம் வழங்கவேண்டிய கே.டி.எம் எனப்படும் கீ டெலிவெரி மெசேஜ் என்ற பாஸ்வேர்டை தரவில்லை என கூறப்படுகின்றது.
இதனால் படத்தின் முதல் காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் இணையத்தில் உலா வருகின்றது. அதேபோல் புனேவிலும் ஐமேக்ஸ் திரையில் படத்தின் முதல் காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் படத்தைப் பார்க்க வந்த ரசிகர்கள் திரையரங்க உரிமையாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. படத்தை பார்க்க ஆர்வமாக வந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











