Kalki box office: வசூல் மழையில் கல்கி 2898 கிபி ... ஐந்தாம் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
சென்னை: இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான 'கல்கி 2898 கிபி' வசூலில் மாஸ் காட்டி வருகிறது. ஜூன் 27ந் தேதி வெளியான இத்திரைப்படம் நான்கு நாட்களில் ரூ.555 கோடியை வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருந்த நிலையில், ஐந்தாம் நாளான நேற்று படத்தின் வசூல் எவ்வளவு என்பதை பார்க்கலாம்.
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ள படம், 'கல்கி 2898'. இதில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, அன்னா பென் உட்பட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ள இப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ளது. பான் இந்தியா திரைப்படமாக இப்படம் ஜூன் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அறிவியல் - புராண கதை மிக்சிங்கில் உருவான இப்படம் அதன் அட்டகாசமான கிராஃபிக்ஸ் மறு்றும் மேக்கிங் காட்சிகளில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் ரூ.600 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் முதல் நாளில் உலக அளவில் ரூ.191 கோடியும், இரண்டாம் நாளில் மொத்தம் ரூ.295.5 கோடி வரை வசூலித்ததாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, இப்படம் நான்கு நாட்களில் உலகம் முழுவதும் ரூ.555 கோடியை வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக நேற்று அறிவித்தது. இதையடுத்து திங்கட்கிழமையான நேற்று இப்படம் உலகம் முழுவதும் சுமார் ரூ. 84 கோடிக்கு மேல் வசூலித்தது. இந்தியாவில் அனைத்து மொழிகளிலும் 34.6 கோடிக்கு மேலும், உலகளாவிய ரூ.45 கோடிக்கும் மேல் வசூலாகி, அதன் மொத்த வசூல் ரூ.635 கோடியாக உள்ளது. படம் வெளியான ஐந்து நாட்களிலேயே மகத்தான வசூலை அள்ளிய இத்திரைப்படம் விரைவில் ஆயிரம் கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட இந்திய திரையுலகின் முன்னணிப் பிரபலங்களான ரஜினிகாந்த், சிரஞ்சீவி, இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி, நடிகர்கள் நாகார்ஜுனா, அபிஷேக் பச்சன், யஷ், நடிகை நிதி அகர்வால் உள்ளிட்ட ஏராளமானோர் படத்தை வெகுவாக பாராட்டி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், பிரபாஸின் 'கல்கி 2898 கிபி' இந்தியாவில் மட்டுமல்லாமல் அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளிலும் வசூல் சாதனையை படைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











