இந்தியாவின் டைட்டானிக்காக மாறுமா ராதே ஷ்யாம்.. காதலும் காலமும் மோதும் கலக்கலான டிரைலர் ரிலீஸ்!
சென்னை: யூவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள ராதே ஷியாம் படத்தின் ரிலீஸ் அறிவிப்பை முன்னிட்டு புதிய டிரைலர் வெளியாகி உள்ளது.
எதிர்பார்ப்புகளை எக்கச்சக்கமாக எகிற வைத்துள்ள பிரமாண்டமான படமான ராதே ஷ்யாம், யூவி கிரியேஷன்ஸ் பேனரில் வம்சி மற்றும் பிரமோத் தயாரிப்பில், ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில், பிரபாஸ்-பூஜா ஹெக்டே நடிப்பில் இன்னும் சில நாட்களில் திரையரங்குகளில் வெளியாக தயாராக உள்ள நிலையில், படத்தின் ரிலீஸ் டிரைலர் எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது.
இந்தியாவின் டைட்டானிக்காக இந்த படம் மாறும் என படக்குழு மிகவும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறது.

கைரேகை நிபுணர்
கைரேகை நிபுணராக வித்தியாசமான கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடித்திருப்பது, சூத்திரதாரியாக அகில இந்திய பிரபல நடிகர் அமிதாப் பச்சன் குரல் கொடுத்திருப்பது, அதிநவீன விஷுவல் எஃபெக்ட்கள், இத்தாலி, ஜார்ஜியா மற்றும் ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டுள்ள அழகிய காட்சிகள். பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டேக்கு இடையேயான பற்ற வைக்கும் கெமிஸ்ட்ரி என பல்வேறு காரணங்களுக்காக இந்த காதல் கதை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பீரியட் படம்
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் படமாக்கப்பட்டுள்ள ராதே ஷியாம், 1970-களில் ஐரோப்பாவின் பின்னணியில் அமைந்துள்ளது. ராதே ஷ்யாமின் டிரைலரில் காணப்படுவது போல் மிகவும் புதுமையான மற்றும் வித்தியாசமான கதைக்கருவோடு படம் உருவாகியுள்ளது. படத்தின் பாடல்கள், போஸ்டர்கள் மற்றும் டீசர்கள் சாதனை அளவில் பார்வையாளர்களை பெற்றுள்ள நிலையில், முன்னோட்டமும் இணையத்தை புயல் போல் தாக்கியுள்ளது.

காலத்துக்கும் காதலுக்கும் இடையே
விதிக்கும் காதலுக்கும் இடையே நடக்கும் மர்ம போராட்டத்தை டீஸர் வெளிப்படுத்தியிருந்த நிலையில், பேச்சுப்பொருளாக மாறியுள்ள டிரைலர் படத்தின் ஆழத்தை இன்னும் வெளிப்படுத்தியுள்ளது. மும்பையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியிடப்பட்ட இந்த வீடியோ, 'ராதே ஷ்யாம்' படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே அதன் வெளியீட்டிற்காக ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்களிடையே மிகுந்த ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.
மார்ச் 11
பிரபாஸ், பூஜா ஹெக்டே, இயக்குநர் ராதா கிருஷ்ண குமார், தயாரிப்பாளர்கள் பூஷன் குமார், வம்சி மற்றும் பிரமோத் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். வரும் மார்ச் 11ம் தேதி காதல் காவியமாக உருவாகி உள்ள ராதே ஷ்யாம் திரைக்கு வருகிறது. அதன் ரிலீஸ் டிரைலர் தற்போது வெளியான நிலையில், இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

சூர்யா பிரபாஸ் மோதல்
ராஜமெளலியின் RRR படத்துடன் ராதே ஷ்யாம் மோதும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வரும் மார்ச் 11ம் தேதி வெளியாகும் ராதே ஷ்யாம் திரைப்படம் நடிகர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்துடன் மோத தயாராகி உள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் இரு நடிகர்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ள நிலையில், வசூலில் யார் வெல்லப் போகிறார் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications