Salaar: பிரபாஸின் சலார் திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சென்னை: பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள சலார் திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சலார். இந்த படத்தில் பாகுபலி திரைப்படத்தில் நடித்திருந்த பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார்.

பிருத்விராஜ், ஸ்ருதி ஹாசன், மற்றும் ஜெகபதி பாபு எனப் பெரும் நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர்.
பிரபாஸ்: பாகுபலி படத்திற்குப் பிறகு பிரபாஸ் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படங்களும் இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தின. அப்படி பெரும் எதிர்பார்ப்போடு வெளிவந்த பிரபாஸின் சாஹோ, ராதே ஷ்யாம் படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதையடுத்து, ராமாயண கதைக்களத்தைக் கொண்டு பிரபாஸ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ஆதிபுருஷ் திரைப்படமும் ஏமாற்றத்தை கொடுத்ததால், சலார் படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார். இப்படம் ரிலீஸுக்கு முன்பே பல கோடி ரூபாய் வியாபாரம் நடந்துள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது.
பான் இந்திய படம்: கே.ஜி.எப். படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் சுமார் ரூ.400 கோடி இப்படத்தை உருவாக்கி உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகி உள்ளது. இந்த படத்தில் வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பிரித்விராஜ் நடித்துள்ளார்.

தள்ளிவைப்பு: இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெருமளவில் கவர்ந்து யூடியூபில் 129 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்தது. இதையடுத்து சலார் திரைப்படம் செப்டம்பர் 28ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. ஆனால், சில காரணங்களால் இந்த ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது.
புதிய ரிலீஸ் தேதி: இந்நிலையில், இப்படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, சலார் திரைப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 22ந் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பிரபாஸ் மற்றும் பிரசாந்த் நீல் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.
ப்ராஜெக்ட் கே: பிரபாஸ் நடிப்பில் அடுத்து தயாராகி வரும் பிரம்மாண்ட திரைப்படம் தான் ப்ராஜெக்ட் கே. வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பில் பக்கா சயின்ஸ் ஃபிக்சன் ஆக்சன் திரில்லர் படமாக உருவாகும் இந்த ப்ராஜெக்ட் திரைப்படத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்க, முன்னணி கதாபாத்திரங்களில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், உலக நாயகன் கமல்ஹாசன், தீபிகா படுகோனே மற்றும் திஷா பதானி ஆகியோர் நடித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











