பிழைத்ததே பெரிய விஷயம்..நாங்கள் சேர்ந்தால் எல்லோரும் காலிதான்..பிரபுதேவா முதல் மனைவி ரமலத் ஓபன் டாக்
சென்னை: நடன புயல் பிரபுதேவா முதலில் ரமலத் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களது திருமண வாழ்க்கை நன்றாக போய்க்கொண்டிருந்த நிலைமையில்; பிரபுதேவாவின் கவனம் நயன்தாரா மீது விழுந்தது. இதன் காரணமாக பிரபுதேவா - ரமலத் திருமண வாழ்க்கையில் புயல் அடித்து; விவாகரத்து பெற்றுவிட்டார்கள். நயனையும் பிரிந்த பிரபுதேவா இப்போது ஹிமானி என்பவரை திருமணம் செய்து வாழ்ந்துகொண்டிருக்கிறார். இரண்டாவது திருமணம் செய்துகொண்டாலும் முதல் மனைவியையும், முதல் மனைவிக்கும் தனக்கும் பிறந்த மகன்களையும் பத்திரமாக பார்த்துவருகிறார். இந்தச் சூழலில் இத்தனை வருடங்கள் ஊடகங்களிடம் பேசாத ரமலத் சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பல விஷயங்களில் பகிர்ந்துகொண்டிருக்கிறார். அவை ரசிகர்களிடம் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
இந்திய சினிமாவின் டான்ஸ் மாஸ்டர்களில் பிரபுதேவா ஒரு லெஜெண்ட். தனது தந்தை நடனம் அமைக்கும்போது அவரது க்ரூப்பில் டான்ஸராக தன்னுடைய நடன பயணத்தை ஆரம்பித்த அவர் அடுத்ததாக டான்ஸ் மாஸ்டர் ஆனார். கோரியோகிராஃபராக சிறந்தவர் என்று பல முறை பல பாடல்களில் நிரூபித்திருக்கிறார் அவர். அவரது நடன அமைப்பில் எந்த ஹீரோவும், ஹீரோயினும் ஆடினாலும் அவர்களிடமிருந்து பெஸ்ட்டை வாங்காமல் விடமாட்டார் பிரபு. இதன் காரணமாகவே பிரபுதேவா ரொம்பவே டஃப்பான நடன அமைப்பாளர் என அவருடன் பணியாற்றியவர்கள் தொடர்ந்து சொல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹீரோவாக கலக்கிய பிரபுதேவா: டான்ஸ் கோரியோகிராஃபராக கலக்கிவந்த அவர் இந்து திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். பவித்ரன் இயக்கியிருந்த அந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக பவித்ரனிடம் உதவி இயக்குநராக இருந்த ஷங்கரின் இயக்கத்தில் காதலன் திரைப்படத்தில் நடித்தார் பிரபுதேவா. ஏ.ஆர்.ரஹ்மான் இசை, நக்மா ஜோடி, வடிவேலுவின் காமெடி, நல்ல எமோஷனல் என படத்தை ஷங்கர் அருமையாக இயக்கியிருந்தார். இதன் காரணமாக படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. மேலும் பிரபுதேவாவுக்கும் மிகப்பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது. அப்போதிருந்து அவர் 90களிலும் 2000களின் ஆரம்பத்திலும் குறிப்பிடத்தக்க ஹீரோக்களில் ஒருவராக கலக்க ஆரம்பித்தார்.

எதார்த்த நடிகர்: பிரபுதேவாவின் நடிப்பில் மிகப்பெரிய ப்ளஸ்ஸாக இருப்பது அவரது எதார்த்தம்தான். நடனத்தில் எப்படி எதார்த்தமான முக் பாவனைகளை கொண்டுவருவாரோ அதைவிடவும் பன்மடங்கு எதார்த்தத்தை தன்னுடைய நடிப்பிலும் கொண்டு வந்தார். அதுமட்டுமின்றி பக்கத்து வீட்டு பையன் போன்ற உணர்வும் அவரை பார்க்கும்போது வந்ததால் அவருக்கென்று ரசிகர்கள் தனியாகவே இருந்தார்கள். அவருக்கு வரிசையாக ஹிட் படங்களை கொடுத்த நடிகர்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடைசியாக ஜாலியோ ஜிம்கானா திரைப்படத்தில் நடித்திருந்தார்.படம் தோல்வியை சந்தித்தது.
இயக்குநரான மாஸ்டர்: இதற்கிடையே டான்ஸ், நடிப்பு மட்டுமின்றி இயக்கத்திலும் பெரிய ரவுண்டு வந்தார். தெலுங்கில் அவர் இயக்குநராக அறிமுகமானாலும் தமிழில் அவர் விஜய்யை வைத்து இயக்கிய போக்கிரி திரைப்படம்தான் பிரபுதேவாவுக்கு இயக்குநராக பெரிய வெளிச்சத்தை கொடுத்தது. அதற்கு பிறகு வில்லு, வெடி, எங்கேயும் காதல் படங்களை இயக்கிய அவர் பாலிவுட்டுக்கும் சென்று டைரக்ட் செய்தார். சல்மான் கான், அக்ஷய் குமார் போன்ற ஹிந்தி சூப்பர் ஸ்டார்களை வைத்து இயக்கி பான் இந்தியா இயக்குநராக மாறிவிட்டார் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என அழைக்கப்படும் பிரபுதேவா.
திருமண சர்ச்சைகள்: இப்படி ஏகப்பட்ட புகழை சம்பாதித்த அவர் சர்ச்சைகளை சம்பாதிக்கவும் தவறவில்லை. முதலில் ரமலத் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு பிறந்த மூன்று மகன்களில் ஒரு மகன் உயிரிழந்துவிட்டார். மற்ற இரண்டு மகன்களில் ஒரு மகனை சமீபத்தில்தான் தன்னுடைய கான்செர்ட்டில் அறிமுகப்படுத்தினார். இதற்கிடையே ரமலத்தை பிரிந்த அவர் நடிகை நயன்தாராவை காதலித்து பாதியிலேயே அந்த உறவிலிருந்து வெளியே வந்தார். நயனையும் பிரிந்த அவர் அடுத்ததாக ஹிமானி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு கடந்த வருடத்தில்தான் ஒரு மகள் பிறந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

ரமலத் பேட்டி: இந்நிலையில் பிரபுதேவாவின் முதல் மனைவியான ரமலத் ஊடகங்களிடம் பேசி பல வருடங்கள் ஆகிவிட்டன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அவர் பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் பிரபுதேவா குறித்தும் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த விஷயங்கள் குறித்தும் நிறைய பேசியிருக்கிறார். அப்பேட்டியில் பேசிய அவர், "நான் ஆரம்பத்தில் மனிதர்களைப் பற்றி புரிந்துகொள்ளவில்லை. திருமணத்துக்கு பிறகு குழந்தைகளை வளர்ப்பதில்தான் எனது கவனம் முழுவதும் இருந்தது. ஆனால் யார் யார் எப்படி எப்படி என்பதை கடந்த பத்து வருடங்களில்தான் நான் முழுவதுமாக தெரிந்துகொண்டேன்.
எனக்கும் கொரோனா வந்தது: கொரோனா முதல் அலையில் எனக்கும் கொரோனா வந்தது. ரொம்பவே சிவியராக இருந்தது. நான் யாரையுமே அந்த சமயத்தில் மீட் செய்யவில்லை. என்னுடைய மகன்கள் அவர்களின் அப்பா வீட்டுக்கு சென்றுவிட்டார்கள். நானும் இன்னொரு பெண்ணும்தான் இந்த வீட்டில் இருந்தோம். அந்தக் கொரோனாவில் நான் பிழைத்ததே பெரிய விஷயம். அவருக்கும் கொரோனா வந்திருந்தது. ஆனால் என் அளவுக்கு அவருக்கு வரவில்லை.எனக்கு கொரோனா வந்த சமயத்தில் பிரபுதேவா எனக்கு அவ்வளவு ஆறுதலாக இருந்தார்.
எங்களுக்குள் பிளவு இல்லை: எனக்கும் பிரபுதேவாவுக்கும் பிளவு என்றெல்லாம் இல்லை. எங்களுக்குள் நல்ல ஸ்மூத்தாக போய்க்கொண்டிருக்கிறது. இப்போதும் நான் ஒரு முடிவு எடுத்தால் அதனை அவரிடம் சொல்லிவிடுவேன். அவரும் அப்படித்தான். அந்த புரிதல் எங்களுக்குள் இருக்கிறது. இந்த புரிதல் எல்லோருக்கும் இருக்க வேண்டும். எங்கள் மகன்களின் எதிர்காலம் தொடர்பாக நானும் பிரபுதேவாவும் அடிக்கடி ஆலோசித்துக்கொள்வோம். பிள்ளைகள் விஷயத்தை தவிர்த்து நாங்கள் இரண்டு பேரும் வேறு எதுவும் பேசிக்கொள்ளமாட்டோம்.சமீபத்தில் நடந்த அவரது கான்செர்ட் குறித்துகூட நான் அவரிடம் பெரிதாக எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை.எனது இரண்டு மகன்களுமே படிப்புக்காக வெளிநாடு செல்லவிருக்கிறார்கள்.
நிச்சயமாக அதனை செய்வேன்: எனக்கு சமையல் என்றால் ரொம்ப பிடிக்கும். அதை வைத்து ஏதாவது ஒரு நிகழ்ச்சி ஆரம்பிக்க வேண்டியதுதானே என்று என்னிடம் நிறைய சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். கண்டிப்பாக விரைவில் அதனை நான் செய்வேன். அந்த யூடியூப் சேனலுக்கு ரம்மு கிச்சன் என்று பெயர் வைப்பேன். எனது மகன்களும் நன்றாக சமைப்பார்கள். எனது இரண்டாவது மகன் பள்ளிக்கு சென்று வந்துவிட்டால் என்னுடன்தான் அரட்டை அடிப்பார். நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்தால் நீங்கள் எல்லாம் அவ்வளவுதான்.எனது இரண்டாவது மகன் இருந்தால் என்னை அவன் கிச்சனுக்குள்ளேயே விடமாட்டான்" என்றார். ரமலத்தின் இந்தப் பேட்டி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக ஆரம்பித்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











