Pradeep Ranganathan - ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பிரபல இயக்குநர் நடிக்கிறாரா?.. வெளியான ஆச்சரிய தகவல்
சென்னை: Pradeep Ranganathan (பிரதீப் ரங்கநாதன்) 2K கிட்ஸ் மத்தியில் பிரபலமான இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் நடிக்கவிருக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகிபாபு உள்ளிட்டோர் அந்தப் படத்தில் நடித்திருந்தனர். 90ஸ் கிட் ஒருவர் கோமாவுக்கு சென்று தற்காலத்துக்கு திரும்பினால் என்ன நடக்கும் என்பதையும் அடிப்படையாக வைத்தும்; தொழில்நுட்பம் மனிதர்களை எவ்வாறு பிரிக்கிறது; மனிதம் தொலைந்துபோய்விட்டது என்பன உள்ளிட்டவைகளை அடக்கி படம் உருவானது. அந்தப் படத்துக்கு ரசிகர்கள் டீசண்ட்டான வரவேற்பை கொடுத்தார்கள்.

லவ் டுடே பிரதீப் ரங்கநாதன்
இதனையடுத்து சில வருடங்கள் அமைதியாக இருந்த பிரதீப் ரங்கநாதன் தான் இயக்கிய குறும்படத்தை டெவலப் செய்து லவ் டுடே படத்தை இயக்கினார். ஏஜிஎஸ் நிறுவனம் படத்தை தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க இவானா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இயக்குநர் பிரதீப் ரங்கநாதனே இதில் கதாநாயகனாகவும் நடித்தார்.

மெகா ஹிட்டான லவ் டுடே படம்
லவ் டுடே திரைப்படம் இளைஞர்களை குறிப்பாக 2K கிட்ஸை வெகுவாக கவர்ந்துவிட்டதாலும், காதலர்களுக்குள் நடக்கும் ஊடலையும், கூடலையும் தற்கால ட்ரெண்டுக்கு ஏற்ப காட்சிப்படுத்தியிருந்ததாலும் மெகா ஹிட்டானது. ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்குகளுக்கு சென்று திரைப்படத்தை ரசித்தனர். மேலும் படம் திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.

ஹிந்தியில் ரீமேக்காகும் லவ் டுடே
இதற்கிடையே லவ் டுடே படத்தை பார்த்த ரஜினி பிரதீப் ரங்கநாதனை நேரில் அழைத்து பாராட்டி சால்வை அணிவித்தார். மேலும், லவ் டுடே திரைப்படம் ஹிந்தியிலும் ரீமேக்காக இருக்கிறது. இதற்கான ஹிந்தி ரீமேக் உரிமையை பாந்தோம் ஃபிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை அர்ச்சனா கல்பாத்தி அறிவித்திருந்தார். ஹிந்தியிலும் இந்தப் படம் மெகா ஹிட்டடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகராகவும் அசத்தும் பிரதீப் ரங்கநாதன்
சூழல் இப்படி இருக்க பிரதீப் ரங்கநாதனின் நடிப்பும் படத்தில் பாராட்டப்பட்டது. இதனையடுத்து அவரை ஹீரோவாக வைத்து படம் எடுக்க பலர் விரும்புவதாகவும் கூறப்பட்டது. அதுமட்டுமின்றி, ஏகே 62விலிருந்து கழற்றிவிடப்பட்ட இயக்குநர் விக்னேஷ் சிவன் அடுத்ததாக பிரதீப் ரங்கநாதனை வைத்துதான் படம் இயக்கப்போகிறார் எனவும்; அதில் நயன்தாரா ஹீரோயினாக நடிப்பார் எனவும் பேச்சு எழுந்திருக்கிறது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பிரதீப் ரங்கநாதன்
இந்நிலையில் பிரதீப் ரங்கநாதன் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ஒருவர் புதிதாக படம் எடுக்கப்போவதாகவும்; அந்தப் படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார் எனவும் கூறப்படுகிறது. முக்கியமாக, அப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவிருக்கிறார் என்றும்;ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார் என்றும் கோடம்பாகத்தில் டாக் ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications











