பிரகாஷ் ராஜ் செல்லம் எங்கே பிறந்தநாளை கொண்டாடிருக்காரு பாருங்க.. குவியும் வாழ்த்துகள்
சென்னை: பிரகாஷ் ராஜ் இந்திய அளவில் பிரபலமான நடிகர். தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டாக இருந்து பாலசந்தரின் கண்களில் பட்டு சினிமாவுக்குள் நுழைந்தவர். தனது ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய நடிப்பில் வேரியேஷன் காண்பிக்கும் மிகச்சில சிறந்த நடிகர்களில் பிரகாஷ் ராஜும் ஒருவர். அவர் கடைசியாக அவர் குண்டூர் காரம் படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் உள்ளிட்ட பல படங்களில் கமிட்டாகியிருக்கிறார். இந்தச் சூழலில் அவர் இன்று தனது 59ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் நடித்துவருபவர் பிரகாஷ் ராஜ். வில்லன் கதாபாத்திரம், குணசித்திர கதாபாத்திரம் என எதுவாக இருந்தாலும் அதில் தனது முத்திரையை அவர் பதித்துவிடுவார். பெங்களூருவை பூர்வீகமாக கொண்ட பிரகாஷ் ராஜ் நடிப்பின் மீது இருக்கும் ஆர்வத்தால் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டாக தனது பயணத்தை தொடங்கினார். கே.பாலசந்தர் ஒரு விழாவிற்கு சென்றிருந்தபோது பிரகாஷ் ராஜின் நடிப்பைப் பார்த்து ஈர்க்கப்பட்டார். அதனையடுத்து தமிழ் சினிமாவில் தான் இயக்கிய டூயட் படத்தின் பிரகாஷ் ராஜை அறிமுகப்படுத்தினார் கே.பாலசந்தர்.

அடுத்தடுத்த வாய்ப்புகள்: முதல் படத்திலேயே தனது நடிப்பின் மூலம் திறமையை நிரூபித்த பிரகாஷ் ராஜுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. குறிப்பாக வசந்த் இயக்கிய ஆசை படத்தில் அவரது நடிப்பு பலரையும் ஆச்சரியப்படுத்தியது. அதேபோல் அப்பு படத்தில் திருநங்கையாக நடித்து நடிப்பில் அசுர பாய்ச்சல் செய்திருப்பார். அதனையடுத்து பல படங்களில் வில்லனாக நடித்த பிரகாஷ் ராஜ் பல மொழிகளில் தடம் பதித்தார்.
செல்லத்தை பிராண்டாக்கிய பிரகாஷ் ராஜ்: கில்லி படம் விஜய்யின் கேரியரில் முக்கியமான படம். அப்படத்தில் விஜய் செய்த ஆக்ஷன்களைவிட ஒரு படி அதிகம் பேசப்பட்டது பிரகாஷ் ராஜின் டயலாக் டெலிவிரியும், அவரது நடிப்பும்தான். குறிப்பாக த்ரிஷாவை அவர் செல்லம் என்று அழைத்தது இன்றுவரை ரசிக்கப்படுகிறது. ஒவ்வொரு காட்சியிலும் பிரகாஷ் ராஜ் மிக இயல்பாக ஸ்கோர் செய்திருப்பார். செல்லம் என்ற வார்த்தை பிரகாஷ் ராஜால் பிராண்டானது. இதனால் பெரும்பாலான மேடைகளில் செல்லங்களா என்றுதான் பிரகாஷ் தனது பேச்சை ஆரம்பிப்பார்.
அரசியலில் பிரகாஷ் ராஜ்: ஆரம்பத்தில் நடிப்பில் மட்டும் கவனம் செலுத்திவந்த அவர், தனது தோழியும், பத்திரிகையாளருமான கௌரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து அரசியல் சார்ந்த கருத்தையும், பிரதமர் மோடி மற்றும் இந்துத்துவாவுக்கு எதிரான கருத்தையும் காத்திரமாக வைத்துவருகிறார். அதுமட்டுமின்றி சுயேச்சையாக தேர்தலில் போட்டியிடவும் செய்தார்.
சமீபத்தில் நடித்த படங்கள்: பிரகாஷ் ராஜ் கடைசியாக குண்டூர் காரம் படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம், They Call him og உள்ளிட்ட தெலுங்கு படங்களிலும்; தமிழில் தனுஷ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ராயன் படத்திலும் நடித்திருக்கிறார். நடிப்பு மட்டுமின்றி இயக்கத்திலும் கலக்கும் அவர் தட்கா என்ற ஹிந்தி படத்தை இயக்கியிருந்தார். இந்தச் சூழலில் அவர் இன்று தனது 59ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார்.
குவியும் வாழ்த்து: இந்நிலையில் அவர் தனது பிறந்தநாளை லடாக்கில் கொண்டாடியிருக்கிறார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "லடாக்கின் லே பகுதியில் இருக்கிறேன். நமக்காக சண்டையிடும் வாங்சக் உள்ளிட்டோருடன் இருக்கிறேன். நம் நாட்டுக்காகாவும், எதிர்காலத்துக்காகவும், சுற்றுச்சூழலுக்காகவும் அவர்கள் போராடுகிறார்கள். அவர்களுக்கு உறுதுணையாக நாம் நிற்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருக்கிறார். சோனம் வாங்சக் எனும் சமூக ஆர்வலர் லடாக்க்கில் மாறிவரும் காலநிலை மாற்றத்துக்கு எதிராகவும், சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி மக்களை ஒன்றுதிரட்டி போராடிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களுடன் பிரகாஷ் ராஜ் தனது பிறந்தநாளை கழித்ததற்கு பலரும் வாழ்த்து தெரிவித்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











