Prakash Raj: "ஜெய்பீம் படத்துக்கு எப்படி தேசிய விருது தருவார்கள்..?” பிரகாஷ் ராஜ் ஆதங்கம்!
சென்னை: 69வது தேசிய திரைப்பட விருதுகள் இரு தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது.
இதில், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஜெய்பீம், சார்பட்டா பரம்பரை போன்ற தமிழ்ப் படங்களுக்கு தேசிய விருதுகள் கிடைக்கவில்லை.
சூர்யாவின் ஜெய்பீம் படத்துக்கு தேசிய விருது கிடைக்காதது குறித்து பிரபலங்கள் பலரும் ஆதங்கம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜும் இதுகுறித்து மிக காட்டமாக ட்வீட் செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

தேசிய விருது - பிரகாஷ் ராஜ் ஆதங்கம்: 69வது தேசிய திரைப்பட விருதுகள் இரு தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. கடந்தாண்டு சூர்யாவின் சூரரைப் போற்று படத்துக்கு 6 தேசிய விருதுகள் கிடைத்தன. இதனால் இந்தாண்டும் சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படத்துக்கு விருதுகள் கிடைக்கும் என எதிர்பார்ப்பு காணப்பட்டது. தசெ ஞானவேல் இயக்கிய ஜெய்பீம் திரைப்படம், 2021ம் ஆண்டு நேரடியாக அமேசான் ப்ரைமில் வெளியானது.
உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் உருவான ஜெய்பீம், சர்வதேச அளவில் கவனம் ஈர்த்தது. சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், பிரகாஷ் ராஜ், குருசோமசுந்தரம் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். ஜெய்பீம் படத்திற்கு கிடைத்த பாசிட்டிவான விமர்சனங்கள் மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ் மூவருமே மிகச் சிறப்பாக நடித்திருந்தனர்.

இதனால் ஜெய்பீம் படத்துக்கு கண்டிப்பாக தேசிய விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்தப் படத்துக்கு ஒரு விருது கூட கிடைக்கவில்லை. அதேபோல் பா ரஞ்சித் இயக்கிய சார்பட்டா பரம்பரை படத்துக்கும் தேசிய விருது வழங்கவில்லை. இது தமிழ் ரசிகர்களிடம் ரொம்பவே அதிர்ச்சியை கொடுத்தது. முக்கியமாக ஜெய்பீம் படத்துக்கு தேசிய விருது கொடுக்காதது கடும் விமர்சனத்துக்குள்ளானது. தெலுங்கு நடிகர் நானி உட்பட பலரும் இது பெரிய ஏமாற்றம் என தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜும் ஜெய்பீம் படத்துக்கு தேசிய விருது கிடைக்காதது குறித்து ஆதங்கம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்வீட் செய்துள்ள அவர், "காந்தியை கொன்றவர்கள், இந்திய அரசியலமைப்பை தந்த அம்பேத்கரின் சமத்துவ தத்துவத்தை கொல்ல முயற்சிப்பவர்கள் 'ஜெய்பீம்' படத்திற்கு எப்படி விருது தருவார்கள்?" என பதிவிட்டுள்ளார். பிரகாஷ் ராஜ்ஜின் இந்த டிவிட்டர் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அரசியல் ரீதியான கருத்துகளை துணிச்சலாக பொதுவெளியில் பேசி வரும் நடிகர்களில் பிரகாஷ் ராஜ்ஜும் ஒருவர். அதேபோல், ஜெய்பீம் படத்தில் ஐஜி பெருமாள்சாமி என்ற கேரக்டரிலும் நடித்திருந்தார். இதனால், பிரகாஷ் ராஜ்ஜின் டிவிட்டர் பதிவு ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது. ஜெய்பீம், சார்பட்டா பரம்பரை போன்ற படங்களுக்கு தேசிய விருதுகள் கொடுக்காத நிலையில், தி காஷ்மீர் ஃபைல்ஸ், ராக்கெட்ரி போன்ற படங்களுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











