செக் பவுன்ஸ் கேஸ்... அக்கவுண்ட்ல பணம் இல்லாம இருக்கலாமா? - பிரகாஷ் ராஜூக்கு கோர்ட் கண்டிப்பு
சென்னை: வாங்கிய கடனை திருப்பி செலுத்துவதற்காக கொடுத்த காசோலை போதிய பணம் இல்லாத காரணத்தால் திரும்பிவிட்டது. இதனை நீதிமன்ற அவமதிப்பாக கருதிய நீதிமன்றம் நடிகர் பிரகாஷ்ராஜுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகராக இருப்பவர் நடிகர் பிரகாஷ்ராஜ். இவர் படத்தயாரிப்பாளராகவும் உள்ளார். தமிழில் அழகிய தீயே, மொழி, தோனி, வெள்ளித்திரை, உன் சமையலறையில் ஆகிய படங்களையும், தெலுங்கிலும் சில படங்களை தயாரித்துள்ளார்.

கடந்த 2014ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான சால்ட் பெப்பர் படத்தை தமிழில் உன் சமையலறையில் என்ற பெயரில் தயாரித்து வெளியிட்டார். அதோடு தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழியிலும் தயாரிக்க திட்டமிட்டு அதற்காக எஸ்எல்.விஷன் நிறுவனத்திடம் கடன் வாங்கியிருந்தார்.
தமிழில் பிரகாஷ்ராஜ் இயக்கி நடித்த உன் சமையல் அறையில் என்ற படத்தை ஹிந்தியில் தட்கா என்ற தலைப்பில் ரீமேக் செய்துள்ளார் பிரகாஷ்ராஜ். இதில் டாப்சி, ஸ்ரேயா, நானா படேகர், அலிபாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இதனிடையே கடந்த 2016ஆம் ஆண்டு எஸ்சல் விஷன் நிறுவனத்திடம் பிரகாஷ்ராஜ் வாங்கிய 5.88 கோடி ரூபாய் பணத்தை திருப்பி செலுத்தாததால் அந்த நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இதனை தொடர்ந்து ஜூலை 15ஆம் தேதிக்குள் தொகையை திருப்பி அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் முதல் தவணையாக பிரகாஷ்ராஜ் வழங்கிய ரூ.2 கோடிக்கான காசோலை, இவருடைய வங்கிக் கணக்கில் போதிய பணம் இல்லாத காரணத்தால் திரும்பியுள்ளது. இது நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படுவதால், நீதிமன்றம் பிரகாஷ்ராஜுக்கு எச்சரிக்கை விடுத்தது.
இதனை தொடர்ந்து பணம் செலுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டிப்பு செய்யுமாறு எஸ்சல் விஷன் நிறுவனத்திடம் பிரகாஷ்ராஜ் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











