ரூ.50 லட்சம் கடன்... தவித்த சீனியர் நடிகரை, தற்கொலை முடிவில் இருந்து காப்பாற்றிய பிரகாஷ் ராஜ்!
சென்னை: நடிகர் பிரகாஷ் ராஜ், தற்கொலை முடிவில் இருந்த மூத்த நடிகர் ஒருவரை காப்பாற்றியதாக குணசித்திர நடிகர் தெரிவித்துள்ளார்.
தமிழில் ஏராளமான படங்களில் வில்லன், குணசித்திர வேடங்களில் நடித்திருப்பவர் பிரகாஷ் ராஜ். தமிழ் தவிர, தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களிலும் நடித்துவருகிறார்.
தெலுங்கில் அதிக படங்களில் நடித்துவரும் அவர், தோனி, உன் சமையலறையில் ஆகிய படங்களை இயக்கியும் உள்ளார்.

சர்ச்சைகள்
அழகிய தீயே, கண்டநாள் முதல், மொழி, வெள்ளித்திரை, அபியும் நானும் உட்பட சில படங்களை தயாரித்தும் உள்ளார். அரசியலிலும் ஆர்வம் கொண்ட நடிகர் பிரகாஷ் ராஜ் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார். தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் அரசியல் தொடர்பாகக் கேள்வி கேட்டு வருகிறார். இதனால் சர்ச்சைகளில் சிக்குவதும் உண்டு.

தற்கொலை முடிவில்
இந்நிலையில், மூத்த நடிகர் ஒருவரை, தற்கொலை முடிவில் இருந்து நடிகர் பிரகாஷ் ராஜ் காப்பாற்றியதாக, நடிகர் ராஜா ரவீந்தரா தெரிவித்துள்ளார். தமிழில், பொண்டாட்டி ராஜ்ஜியம் கோகுலம். புருஷ லட்சணம், நாட்டாமை, படையப்பா, நேபாளி, தோழா உட்பட பல படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்திருக்கும், தெலுங்கு நடிகர் இவர். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், இதைத் தெரிவித்துள்ளார்.

மன வேதனை
அவர் கூறும்போது, அந்த சீனியர் நடிகருக்கு ரூ.50 லட்சம் வரை கடன் இருந்தது. திருப்பிக் கொடுக்க முடியவில்லை. இதனால் மன வேதனையில் இருந்தார். ஒரு கட்டத்தில் அவர் தற்கொலை முடிவுக்குச் சென்றுவிட்டார். இது பிரகாஷ் ராஜுக்கு தெரிய வந்ததும் என்னிடம் அந்த் நடிகரை அழைத்துவரச் சொன்னார். அழைத்துச் சென்றேன்.

திருப்பி வாங்கவில்லை
அவரது பிரச்னையை மொத்தமாகக் கேட்டார் பிரகாஷ் ராஜ். பிறகு அந்த கடனை உடனே அடைத்தார். இது சில வருடங்களுக்கு முன் நடந்தது. இன்று வரை அந்த மூத்த நடிகரிடம் இருந்து ஒரு பைசா கூட பிரகாஷ் ராஜ் திருப்பி வாங்கவில்லை. இதுதான் பிரகாஷ் ராஜின் மனிதாபிமானம் என்று தெரிவித்துள்ளார் ராஜா ரவீந்தரா. ஆனால், அந்த சீனியார் நடிகர் யார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை.


Click it and Unblock the Notifications











