ஹெல்மட் அணியாமல் புல்லட் ஓட்டும் பிரசாந்த்.. அதுவும் பேட்டி வேற.. குவியும் கண்டனங்கள்!
சென்னை: நடிகர் பிரசாந்த் நடித்துள்ள அந்தகன் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தை அவருடைய அப்பாவும் இயக்குநரும் நடிகருமான தியாகராஜன் இயக்கியுள்ளார். பாலிவுட்டில் ஆயுஷ்மான் குரானா, தபு நடிப்பில் வெளியான அந்தாதூன் எனும் வெற்றி படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த படம்.
அந்தகன் திரைப்படத்தில் பிரசாந்துக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்துள்ளார். பாலிவுட்டில் தபு நடித்த கதாபாத்திரத்தில் சிம்ரன் நடித்துள்ளார். மேலும், கார்த்திக், கே.எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார், ஊர்வசி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட இந்த படம் அதிரடியாக தற்போது ஒரு வாரம் முன்னதாகவே வெளியாக போகிறது.
புரமோஷனில் பிஸி: தமிழ் சினிமாவில் டாப் ஸ்டாராக திகழ்ந்து வந்த நடிகர் பிரசாந்த் குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சினிமாவில் இருந்தே சில ஆண்டுகள் ஒதுங்கியிருந்தார். ஒரு பெரிய இடைவேளைக்குப் பிறகு தற்போது மீண்டும் தனது அடுத்த இன்னிங்ஸை ஆரம்பித்துள்ளார். விஜய்யின் கோட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள பிரசாந்த் தனது நடிப்பில் வெளியான அந்தகன் படத்தையும் தற்போது வெளியிட உள்ள நிலையில், அதற்கான புரமோஷனில் படு பிஸியாகி உள்ளார்.
கார் பேட்டி: யூடியூப் சேனல் ஒன்றில் நடிகர் பிரசாந்த் கார் ஓட்டிக் கொண்டே பேட்டி அளித்த காட்சிகள் சமீபத்தில் வெளியானது. மேலும், நகைக்கடை திறப்பு விழா, மாரத்தான் போட்டியை துவக்கி வைத்தது என ஃபுல் ஃபார்மிற்கு வந்து அடிக்கடி ரசிகர்களுக்கு காட்சி தந்து வருகிறார் பிரசாந்த்.
பைக் இண்டர்வியூ: காரில் பேட்டி அளித்த நடிகர் பிரசாந்த் அடுத்ததாக புல்லட் ஓட்டிக் கொண்டே பேட்டிக் கொடுத்த புதிய வீடியோ ஒன்று யூடியூப் சேனலில் வெளியாகி இருக்கிறது. பைக் ஓட்ட ஆசைப்பட்டேன் என்பதற்காக தனது அப்பா சிறு வயதில் ஆர்எக்ஸ் 100 பைக் வாங்கிக் கொடுத்தார் என்றும் 4 நாட்களில் பைக் ஓட்டக் கற்றுக் கொண்டேன் என்றதும் அதை உடனே விற்று விட்டார் என்றும் தான் முதன்முதலில் பைக் ஓட்டிய அனுபவங்களை அந்த பேட்டியில் ஷேர் செய்துள்ளார்.
ஹெல்மட் அணியாமல்: சார்மிங் நடிகராக இன்னமும் ரசிகைகளை கவரும் பிரசாந்த் ஹெல்மட் அணியாமல் சாலையில் புல்லட் ஓட்டிக் கொண்டே பேட்டிக் கொடுத்து அனைவருக்கும் ஹாய் எல்லாம் சொல்லிக் கொண்டே செல்வதை பார்த்து ரசிகர்கள் ஹேப்பியாகி உள்ள நிலையில், நெட்டிசன்கள் ஹெல்மட் அணியாமல் இப்படி பைக் ஓட்டலாமா பிரசாந்த்? என்கிற கேள்வியையும் எழுப்பி வருகின்றனர். மேலும், அந்த யூடியூப் சேனல் தொகுப்பாளினியும் பின்னால் ஹெல்மட் அணியாமல் அமர்ந்துக் கொண்டே பேட்டி எடுத்துக் கொண்டு செல்வதை பார்த்து அவரையும் ட்ரோல் செய்து வருகின்றனர். சமூக ஆர்வலர்கள் சிலர் சோஷியல் மீடியாவில் பிரசாந்தின் இந்த பைக் வீடியோ பேட்டிக்கு கண்டனங்களையும் தெரிவித்துள்ளனர். படங்களிலேயே ஹீரோக்கள் ஹெல்மட் அணிந்து நடிக்க ஆரம்பித்துள்ள நிலையில், பிரசாந்த் இப்படி பேட்டியில் ஹெல்மட் அணியாமல் செல்வது சரியில்லை எனக் கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











