Kuberaa: நம்பி போங்க.. ஒரு ரூபாய் கூட வீணாகாது.. தனுஷின் குபேராவுக்கு பிரபலம் கொடுத்த சர்டிஃபிகேட்!
சென்னை: தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இன்று அதாவது ஜூன் 20ஆம் தேதி வெளியாகியுள்ள படம் குபேரா. இந்த படத்தை இயக்குநர் சேகர் கம்முலா இயக்கியுள்ளார். படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படம் குறித்து விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமி தெரிவித்துள்ள கருத்து ரசிகர்கள் மத்தியில் நல்ல கவனத்தைப் பெற்றுள்ளது.
குபேரா தனுஷின் 51வது படம். இந்த படத்தை பான் இந்தியா படமாக எடுக்கப்பட்டுள்ளது. படத்தில் தனுஷ் மற்றும் ராஷ்மிகா மந்தனா பான் இந்தியா ஸ்டார்களாக உள்ளார்கள். மேலும் படத்தை உருவாக்கும் போது தமிழ் மற்றும் தெலுங்கில் நேரடியாக உருவாக்கப்பட்டது. இது மட்டுமல்லாமல் படத்தை மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தியில் டப் செய்தும் ரிலீஸ் செய்துள்ளனர். படம் பான் இந்தியா படமாக வெளியாகியுள்ளதால் வசூலில் அதன் தாக்கம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படத்திற்கு தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்கள் பெரும்பாலும் பாசிடிவான விமர்சனத்தையே கொடுத்து வருகிறார்கள். இது மாத்திரம் இல்லாமல், படத்தில் தனுஷ் நடிப்பு சிறப்பாக இருப்பதாகவும், தனுஷ்க்கு தேசிய விருது கிடைக்கும் எனவும் பலரும் கூறிவருகிறார்கள். அதேபோல் நாகர்ஜுனா இந்த படத்தில் தனது கதாபாத்திரத்தை மிகவும் நேர்த்தியாக நடித்துள்ளார் என்று தெரிவித்து வருகிறார்கள். அதேபோல் ராஷ்மிகா மந்தனா தனது கதாபாத்திரத்திற்கு சரியாக பொருந்தி போயுள்ளார் எனவும் கூறி வருகிறார்கள்.
3 மணி நேரம்: படத்திற்கு ஏகபோக விமர்சனம் கிடைத்துள்ளதால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். படத்தின் நீளம் மட்டும் குறையாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே 3 மணி நேரம் 30 நிமிடங்கள் இருந்த படத்தை இயக்குநர் 3 மணி நேரமாக குறைத்துள்ளார் என்பதும் கவனிக்க வேண்டியுள்ளது. படம் ஸ்லோவாக நகர்ந்தாலும் சிறப்பாக இருக்கிறது என பலரும் மொத்த படக்குழுவையும் பாராட்டி வருகிறார்கள். இந்நிலையில் படம் பார்த்து முடித்தவுடன் பிரபல விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமி தெரிவித்துள்ள கருத்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

தனுஷ் போல: அதாவது அவர் தெரிவித்துள்ள கருத்தில், " தனுஷ் போல நடிக்க இனிமேல் இன்னொருவர் பிறந்துதான் வரவேண்டும். நான் ஓவராக சொல்வதைப் போல இருக்கும். ஆனால் நீங்கள் படத்தைப் போய் பார்த்தால்தான் உள்ளே என்ன இருக்கிறது என்பது தெரியும். இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்தில்தான் ருத்ரதாண்டவம் ஆடியுள்ளார். சேகர் கம்முலா என்ன மாதிரியான இயக்குநர்! மனது மிகவும் சுத்தமான மனிதர் போல. அவரது உள்நோக்கம் மிகவும் சுத்தமாக உள்ளது.
ஒரு ரூபாய் கூட: மனநிறைவுடன் பார்த்த வெகு சில படங்களில் குபேராவும் ஒரு படம். கொஞ்சம் கூட தயங்காமல் உங்களுக்கு மட்டுமல்ல, மொத்த குடும்பத்திற்கும் டிக்கெட் புக் செய்யுங்கள். உங்களது டிக்கெட் பணம் ஒரு ரூபாய் கூட வீணாக போகாது. படம் பார்த்துவிட்டு தியேட்டரில் இருந்து வெளியே வரும்போது மனநிறைவுடன் வெளியே வருவீர்கள்" என்று தெரிவித்துள்ளார். இவரது இந்த கருத்து தனுஷ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











