சத்தமே இல்லாமல் தரமான சம்பவம்.. பிரசாந்தின் அந்தகன் 4 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
சென்னை: பிரசாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தான் அந்தகன். நீண்ட நாட்களுக்கு பின் பிரசாந்த் நடித்துள்ள திரைப்படம் என்பதால் இந்த படத்தின் மீது மக்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். அதை பூர்த்தி செய்யும் வகையில் அந்தகன் படம் நல்ல வசூலை பெற்று வருகிறது.
இப்படத்தின் முதல் 4 நாள் வசூல் நிலவரங்கள் வெளியாகியுள்ளது. இந்தியில் தேசிய விருதை வாங்கிய அந்தாதூன் படத்தின் ரீமேக் தான் அந்தகன். இந்த படத்தில் சிம்ரன், பிரியா ஆனந்த், கார்த்திக், ஊர்வசி, சமுத்திரகனி, கே.எஸ் ரவிக்குமார், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை நீண்ட நாட்களுக்கு பிறகு, பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இயக்கி உள்ளார். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.

படத்தின் கதை: பியானோ இசைக் கலைஞரான பிரசாந்த் இந்த படத்தில் கிருஷ்ணா என்கிற ரோலில் பார்வை இல்லாதவராக நடித்துள்ளார். இவருக்கு ஒரு பரிசோதனையில் கண் பார்வை போய்விடுகிறது. ஆனால், ஒரு குறிப்பிட்ட சில இடத்தில் அவருக்கு கண் தெரியும். பிரசாந்த், நிஜமாகவே பார்வை இல்லாதவர் என நினைத்துக் கொள்ளும் பிரியா ஆனந்த் தனது கஃபேவில் பியானோ வாசிக்கும் வேலை கொடுக்கிறார். அந்த கஃபேவிற்கு வரும் கார்த்திக், தனது திருமண நாளை கொண்டாட, தன் மனைவிக்காக பிரசாந்தை பியானோ வாசிக்க சொல்கிறார்.
விறுவிறுப்பான கதை: இந்த நேரத்தில், கார்த்திக் வீட்டில், சிம்ரன் தனது காதலனான சமுத்திரகனியுடன் இருப்பதை பார்த்து விடுவதால், சிம்ரன் கார்த்திக்கை போட்டுத் தள்ளுகிறார். இதை பார்த்த பிரசாந்த் கண் தெரியாதவர் போலவே அவர்களிடம் இருந்து தப்பிக்கிறார். ஆனால் பின் பிரசாந்திற்கு கண் தெரியும் என்கிற உண்மை தெரிய வர அவரையும் கொலை செய்ய திட்டமிடுகிறார்கள் சிம்ரனும் அவர் காதலரான சமுத்திரகனியும். இவர்களிடம் இருந்து பிரசாந்த் எப்படி தப்பிக்கிறார் என்பதே அந்தகன் படத்தின் கதை. அடுத்தடுத்த திருப்பங்களுடன் சீட்டின் நுனியில் அமரவைத்த இந்த படத்தை பார்த்த பலர் பிரசாந்தின் நடிப்பை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
வசூல் விவரம்: அந்தகன் படம் முதல் நாளில் 65 லட்சம் ரூபாய் வசூல் செய்த நிலையில், படத்திற்கு மக்களிடம் இருந்து வந்த வரவேற்பை தொடர்ந்து இரண்டாவது நாளில், படத்தின் வசூல் இரு மடங்கு அதிகரித்து சனிக்கிழமை 1.19 கோடியாக இருந்தது. இதைத்தொடர்ந்து விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை 1.15 கோடியாக இருந்தது. இதையடுத்து நான்காம் நாளான நேற்று வேலை தினம் என்பதால் படத்தின் வசூல், 38 லட்சமாக இருந்தது. அந்தகன் படத்தின் முதல் நான்கு நாள் வசூல், 3.43 கோடியாக உள்ளது. தொடர்ந்து படத்திற்கு மக்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











