வெற்றிமாறன், பா.இரஞ்சித் வளர்ச்சி.. தமிழ் சினிமாவுக்கு தளர்ச்சி.. இயக்குநர் பிரவீன் காந்தி விமர்சனம்
சென்னை: பா.இரஞ்சித் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக இருந்தவர். பிறகு அட்டகத்தி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர் தான் எடுக்கும் ஒவ்வொரு படத்திலும் ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக ஒலிப்பவர். இதனாலேயே அவர் வெகு சில படங்களில் கவனம் பெற்ற இயக்குநராகிவிட்டார். அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் இருக்கிறது. அதேபோல் வெற்றிமாறனும் தனது படங்களில் ஆதிக்க வர்க்கத்தினருக்கு எதிராக பலமான குரலை எழுப்பக்கூடியவர். இந்தச் சூழலில் அவர்கள் இருவர் குறித்தும் இயக்குநர் பிரவீன் காந்தி விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் 80கள், 90களில் ஆதிக்க சாதிகளை மையப்படுத்தி திரைப்படங்கள் வந்துகொண்டிருந்தன. அதேபோல் திரைப்படத்தின் தலைப்பிலேயே சாதி பெயரை வைத்தும் திரைப்படங்கள் வந்திருக்கின்றன. தற்போது தமிழ் சினிமாவில் ஒடுக்கப்பட்ட மக்களின் வலியை கூறுவதுபோல் திரைப்படங்கள் வர ஆரம்பித்திருக்கின்றன. அது மாதிரியான படங்கள் இப்போது அதிகம் வருவதற்கு காரணங்களில் ஒருவர் பா.இரஞ்சித். இதனாலேயே பா.இரஞ்சித் விமர்சனங்கலையும் சந்தித்துவருகிறார்.

வெற்றிமாறன்: பா.இரஞ்சித்தை போன்றுதான் வெற்றிமாறன். தனது முதல் இரண்டு படங்களை கமர்ஷியல் ஜானரில் அவர் இயக்கியிருந்தாலும்; போகப்போக தனது ரூட்டை மாற்றி ஒடுக்கப்பட்டவர்களின் குரலாகவும், ஆதிக்க வர்க்கத்திற்கு எதிரான குரலாகவும் தனது படைப்புகளை மாற்றியிருக்கிறார். அவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான விடுதலை படம்கூட ஒடுக்கப்பட்டவர்களுக்காக ஒலித்தது. பா.இரஞ்சித், வெற்றிமாறன் போன்றோர் போல் இயக்குநர் மாரி செல்வராஜும் தனது படைப்புகளை தொடர்ந்து படைத்துவருகிறார்.
கவுண்டம்பாளையம்: மேற்கூறியவர்கள் எடுக்கப்படும் படங்களுக்கு பலமான ஆதரவு இருந்தாலும் அவர்களுக்கு எதிர் தரப்பில் இயங்கும் இயக்குநர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். மோகன் ஜி தனது படங்களிலும், தான் பேசும் மேடைகளிலும் ஆதிக்க வர்க்கத்தினருக்கு ஆதரவாகவும், பா.இரஞ்சித், வெற்றிமாறன், மாரி செல்வராஜ் உள்ளிட்டோருக்கு எதிராகவும் பேசிவருகிறார். அவரது வரிசையில் இப்போது இணைந்திருக்கிறார் நடிகர் ரஞ்சித். பாண்டவர் பூமி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் அவர் இப்போது கவுண்டம்பாளையம் என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இதன் ட்ரெய்லர் நேற்று வெளியானது. அதில் குறிப்பிட்ட சாதியினரையும், கட்சி தலைவரையும் கடுமையாக விமர்சனம் செய்து காட்சிகளை வைத்திருக்கிறார்.
பிரவீன் காந்தி பேச்சு: இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. இதில் பேரரசு, பிரவீன் காந்தி, உதயகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய பிரவீன் காந்தி, “பா.இரஞ்சித், வெற்றிமாறன் போன்ற சில இயக்குநர்கள் சினிமாவில் வளர்ச்சி கண்ட பிறகுதான் தமிழ் சினிமா தளர்ச்சி கண்டது என்று நான் சொல்வேன். சினிமாவில் சாதியைப் பற்றி பேசவே கூடாது. அதுதான் என்னுடைய கொள்கை. சினிமாவில் எவன் சாதியை பற்றி பேசுகிறானோ அவன் சமூகத்தில் ஒதுக்கப்பட வேண்டியவன்.
முதலில் குரல் கொடுத்தது: கோயம்புத்தூரில் ஹேப்பி ஸ்ட்ரீட் என்ற ஒரு நிகழ்வு நடந்தது. அப்போது, என்னுடைய சகோதரனும், சகோதரியும் அங்கே சீரழிந்துகொண்டிருக்கிறார் என்று முதலில் குரல் கொடுத்தவர் ரஞ்சித்தான். அதற்கு பிறகு அதுதொடர்பான விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்பட்டது. எதிர்காலத்தில் என்னுடைய சகோதர, சகோதரிகள் பாதிக்கப்படக்கூடாது; என்னுடைய கலாசாரத்தை தூக்கி பிடிக்க நான் குரல் கொடுப்பேன் என்று நிற்பவர் ரஞ்சித். அப்படிப்பட்டவர் நிச்சயம் நல்ல படத்தைத்தான் கொடுத்திருப்பார். அது சாதி படமாக இருந்தாலும் சமூகத்திற்கு தேவையான கருத்தை சொல்லக்கூடிய படமாகத்தான் இருக்கும்” என்றார்.


Click it and Unblock the Notifications











