Bigg Boss 9 - முதல் நாளே செம அடி.. வாட்டர் மெலன் ஸ்டாரை கோர்த்துவிட்ட பார்வதி.. பங்கம் செய்த பிரவீன் காந்தி
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன் நேற்று முதல் தொடங்கியிருக்கிறது. கடந்த சீசனை போன்றே நடிகர் விஜய் சேதுபதிதான் இந்த சீசனையும் தொகுத்து வழங்குகிறார். மேலும் அதிகம் பிரபலம் இல்லாத போட்டியாளர்களே இதில் கலந்துகொண்டிருக்கிறார்கள். அதிலும் சோஷியல் மீடியா இன்ஃபுளூயன்ஸர்கள் நிறைய பேர் வந்திருக்கிறார்கள். இந்நிலையில் முதல் நாளான நேற்றே வாட்டர் மெலன் ஸ்டார் திவாகருக்கு பிரவீன் காந்தி பல்பு கொடுத்துவிட்டார்.
ஹிந்தி, மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஃபேமஸ். தமிழில் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. முதல் சீசனிலிருந்து ஏழாவது சீசன்வரை கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். பொதுவாக சின்னத்திரை நிகழ்ச்சிகளில் தலைகாட்டாத கமல்; பிக்பாஸ் நிகழ்ச்சியை மட்டும் ஆங்கரிங் செய்தார். மற்ற மொழிகள் போலவே இங்கும் முதல் சீசனிலிருந்தே ஹிட்டடிக்க ஆரம்பித்தது.
விலகிய கமல், வந்த விஜய் சேதுபதி: ஏழு சீசன்கள் தொகுத்து வழங்கிக்கொண்டிருந்த அவர்; எட்டாவது சீசனிலிருந்து விலகினார். அவரைத் தொடர்ந்து பிரபல நடிகர் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை கடந்த சீசனிலிருந்து தொகுத்து வழங்க ஆரம்பித்துவிட்டார். வீட்டுக்குள் எத்தனை பஞ்சாயத்துக்கள் நடந்தாலும் அத்தனையையும் தனது ஸ்டைலில் தீர்த்து வைக்கிறார் அவர். அதேபோல் மனதில் உள்ளதையும் பட்டென்று பேசிவிடும் வழக்கமுடைய சேதுவை பலரும் ரசிக்கிறார்கள்.

பிக்பாஸ் 9: சூழல் இப்படி இருக்க பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன் நேற்று முதல் தொடங்கியது. இந்த முறை யார் யார் போட்டியாளர்களாக வருவார்கள் என்று பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. ஏனெனில் எட்டாவது சீசனில் அதிக பிரபல்யம் இல்லாதவர்களே வந்திருந்தார்கள். இருப்பினும் அவர்கள் தங்களால் முடிந்த அளவுக்கு தரமான கன்டென்ட்டை ஒவ்வொரு நாளும் கொடுத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சீசன் போட்டியாளர்கள்: இந்த சீசனில், வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர், அரோரா, எஃப்ஜே, விஜே பார்வதி, துஷார், கனி, சபரி, பிரவீன் காந்தி, கெமி, ஆதிரை, ரம்யா, கானா வினோத், வியானா, பிரவீன், சுபிக்ஷா, அப்சரா, நந்தினி, விக்கல்ஸ் விக்ரம், கம்ருதீன், அகோரி கலை என மொத்தம் 20 பேர் கலந்துகொண்டிருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலும் சோஷியல் இன்ஃபுளூயன்ஸர்கள் ஆவார்கள். இது ஒருபக்கம் விமர்சனத்தை சந்தித்திருக்கிறது. அதுவும் வாட்டர் மெலன் ஸ்டாரை எல்லாம் ஏன் அழைத்தீர்கள் என கழுவி கழுவி ஊற்றிவருகிறார்கள்.
பங்கம் செய்த பிரவீன் காந்தி: இந்நிலையில் வீட்டுக்குள் நுழைந்த முதல் நாளே வாட்டர் மெலன் ஸ்டாரை பார்வதியும், பிரவீன் காந்தியும் பங்கம் செய்துவிட்டார்கள். அதாவது உள்ளே வந்த பிரவீன் காந்தி, துஷார், சபரி, விஜே பார்வதி, கனி உள்ளிட்டோரை பார்த்து, 'இங்கே அழகாக ஹீரோக்கள் இருக்கிறார்கள். மூன்று ஹீரோயின்கள் இருக்கிறீர்கள்' என சொல்ல; அங்கே நின்றுகொண்டிருந்த திவாகரை காட்டி, இவரு என்று பார்வதி கேட்க; உடனே பிரவீன் காந்தி, 'சார்தான் காமெடியன். காமெடி இல்லாமல் படம் எடுக்க முடியுமா?' என பங்கம் செய்துவிட்டார். இதனை எதிர்பார்க்காத திவாகரோ, 'என்ன சார் நான் ஒரு ரொமான்ட்டிக் ஸ்டார். என்னை போய் காமெடியன்னு சொல்றீங்க' என கேட்க; அதனை கேட்டு சத்தமாக சிரித்துவிட்டு மற்றவர்கள் சென்றுவிட்டார்கள். இதனைப் பார்த்த ரசிகர்கள், வெளியில் போட்ட ஆட்டத்துக்கு உள்ளே வைத்து வாட்டர் மெலன் ஸ்டாரை செய்யப்போகிறார்கள் என கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











