அந்த வானத்தை போல.. விஜயகாந்த் மக்களின் சொத்து.. பிரேமலதா சொன்ன செம விஷயம்
சென்னை:கோலிவுட்டில் தவிர்க்கவே முடியாத ஹீரோக்களில் ஒருவர் விஜயகாந்த். அவர் உடல்நலக் குறைவால் கடந்த வருடம் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியது. முக்கியமாக திரைத்துறையை சேர்ந்தவர்கள் விஜயகாந்த்தை நினைத்து உருகினர். சூழல் இப்படி இருக்க சமீபத்தில் வெளியான லப்பர் பந்து படத்தில் விஜயகாந்த்துக்கு பல ட்ரிபியூட்டுகள் இருந்தன. இந்நிலையில் பிரேமலதா விஜயகாந்த் அதுகுறித்து பேசியிருக்கிறார்.
கேப்டன், புரட்சி கலைஞர் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் விஜயகாந்த். மதுரையில் வசதியான குடும்பத்தில் பிறந்தாலும் சினிமா ஆசையின்பால் சென்னைக்கு வந்து இங்கு பல கஷ்டங்களை சந்தித்தவர். ஒருவழியாக அவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்து மிளிர தொடங்கினார். ரஜினிகாந்த், கமல் ஹாசன் உள்ளிட்டோர் பீக்கில் இருந்தபோது தனக்கென ஒரு கோட்டையை உருவாக்கி அதில் ரசிகர் பட்டாளத்தையும் சேர்த்தார். உருவத்திலும், நடிப்பிலும் ஊர்க்காரர் போல் இருந்ததால் அவரை தங்களில் ஒருவராக ரசிகர்கள் ஏற்றுக்கொண்டனர்.

உச்சத்தில் விஜயகாந்த்: வில்லனாக அறிமுகமானாலும் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்து அதை சாதித்தும் காட்டியவர். ஒரே வருடத்தில் 5க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து படுபிஸியாகவும் திகழ்ந்துகொண்டிருந்தார். ரஜினிகாந்த், கமலுக்கு அவர்களது 100ஆவது படம் சரியாக போகவில்லை. ஆனால் விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன் படம் பட்டித்தொட்டியெங்கும் ஹிட்டடித்தது.
புதுமுகங்களுக்கு வாய்ப்பு: அதேபோல் திரைப்பட கல்லூரியிலிருந்து இயக்குநராகும் கனவோடு வெளியே வந்த பலருக்கு முதல் பட வாய்ப்பை கொடுத்தது விஜயகாந்த்தான். அதுமட்டுமின்றி பல இயக்குநர்கள் விஜயகாந்த்தை வைத்துதான் முதல் படத்தை இயக்கினார்கள். அந்த அளவுக்கு புதுமுகங்கள் மீது அபார நம்பிக்கை கொண்டிருந்தவர். மேலும் சினிமாவில் இருப்பவர்கள் எந்தவித கஷ்டமும் படக்கூடாது என்பதற்காக தனது அலுவலகத்தில் தொடர்ந்து உணவு அளித்ததும் குறிப்பிடத்தக்கது.
உயிரிழப்பு: இயக்குநர்கள் மட்டுமின்றி விஜய், சூர்யா போன்ற வளர்ந்துவந்த நடிகர்களின் படங்களிலும் கெஸ்ட் ரோலில் நடித்து அந்தப் படங்களுக்கு வெளிச்சம் பாய்ச்சியவர் விஜயகாந்த். சூழல் இப்படி இருக்க அரசியலில் நுழைந்து தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவராகவும் மாறினார். ஆனால் அரசியல் தளத்தில் அவர் சந்தித்த சில துரோகங்கள் அவரை சாய்த்தது. அதன் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது.தொடர்ந்து சிகிச்சையில் இருந்த அவர் கடந்த வருடம் உயிரிழந்தார்.
ட்ரிபியூட்டுகள்: இந்நிலையில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் தமிழரசன் பச்சைமுத்து இயக்கத்தில் சமீபத்தில் லப்பர் பந்து வெளியானது. அந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது. முக்கியமாக அட்டகத்தி தினேஷ் அதில் தீவிர விஜயகாந்த் ரசிகராக தோன்றியிருந்தார். அதுமட்டுமின்றி அவர் தோன்றும் காட்சிகளில் விஜயகாந்த் நடித்த, 'நீ பொட்டு வைத்த தங்க குடம்' பாடலும் பயன்படுத்தப்பட்டிருந்தது. இப்போது அந்தப் பாடல் ட்ரெண்டிங்கின் உச்சத்தில் இருக்கிறது.
பிரேமலதா பேட்டி: இந்நிலையில் விஜயகாந்த்துக்கு கொடுக்கப்படும் ட்ரிபியூட்டுகள் குறித்து பேசிய பிரேமலதா, "திரைப்படங்களில் கேப்டன் விஜயகாந்த்தின் போஸ்டர்களை பயன்படுத்தினால் காப்புரிமையெல்லாம் யாரிடமும் நாங்கள் கேட்கமாட்டோம். ஏனெனில் விஜயகாந்த் எங்களின் சொத்து இல்லை, மக்களின் சொத்து" என்று தெரிவித்திருக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்கள் விஜயகாந்த் மாதிரியே பிரேமலதாவுக்கும் பெரிய மனசு என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











