Vijayakanth - விஜயகாந்த்துக்கு அஞ்சலி செலுத்தாத வடிவேலு, அஜித்.. பிரேமலதா சொன்னத விஷயத்தை பாருங்க
சென்னை: விஜயகாந்த் உடல்நலக்குறைவால் கடந்த மாதம் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மாநிலம் முழுவதுமிலிருந்து லட்சக்கணக்கானோர் நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அதேபோல சினிமா பிரபலங்களும் தங்களது அஞ்சலியை செலுத்தினர். ஆனால் வடிவேலு, அஜித் உள்ளிட்டோர் நேரில் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விஜயகாந்த் நடிகராகவும், தேமுதிக நிறுவனராகவும் இருந்தவர். அரசியலில் நுழைந்து தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவராக இருந்தவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் அரசியலில் இருந்து ஒதுங்கி முழு ஓய்வில் இருந்தார். இப்படிப்பட்ட சூழலில் அவருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

விஜயகாந்த் நினைவிடம்: அவர் உயிரிழந்ததை அடுத்து அவரது முழு அரசு மரியாதையுடன் தேமுதிக அலுவலகத்தின் வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. தொடர்ந்து அவரது நினைவிடத்துக்கு சென்று பலரும் தங்களது அஞ்சலியை செலுத்திவருகின்றனர். இதற்கிடையே அவரது உடலுக்கும் சாமானியர்கள் முதல் சினிமா பிரபலங்கள்வரை நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். ஆனால் வடிவேலு, அஜித் உள்ளிட்டோர் நேரிலும் வரவில்லை; இரங்கல் தெரிவித்து அறிக்கையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்திய நினைவேந்தல் நிகழ்வுக்கும் இருவரும் வரவில்லை.
பிரேமலதா வீடியோ: இந்நிலையில் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா வெளியிட்டிருக்கும் வீடியோவில், "என் கணவர் விஜயகாந்த்தின் நினைவேந்தலுக்கு வந்திருந்தவர்களுக்கு நன்றி. தன்னுடைய வாழ்க்கையின் எல்லா காலகட்டத்திலும் எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற்று அனைவரையும் சமமாக நடத்தும் பண்பாலும், உதவும் குணத்தாலும் மக்களிடம் நீங்காத இடத்தை பிடித்தவர் விஜயகாந்த்.
நல்ல கருத்துக்கள்: தன்னுடைய திரைப்படங்களின் மூலமும் நல்ல கருத்துக்களை மக்கள் மனதில் விதைத்தவர் விஜயகாந்த். இன்று அவர் நம்முடன் இல்லை என்று வருத்தப்பட வேண்டாம். அவருடைய ஆன்மா நம்முடன் இருக்கிறது. கேப்டனின் இறுதி பயணத்துக்கு வந்து அவருக்கு அஞ்சலி செலுத்தியவர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அன்று வர முடியாதவர்கள் அடுத்தடுத்த நாட்களில் நினைவிடத்துக்கு வந்து அஞ்சலி செலுத்திவிட்டு வீட்டுக்கும் வந்தீர்கள்.
அனைவருக்கும் நன்றி: உங்களுக்குக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஏதோ ஒரு சூழல் காரணமாக விஜயகாந்த்தின் இறுதி பயணத்தில் பங்கேற்க முடியாதவர்களின் எண்ணமும் விஜயகாந்த்திடம்தான் இருந்திருக்கும் என்பதில் எங்களுக்கு எந்தவிதமான மாற்றுக்கருத்தும் இல்லை. விஜயகாந்த் இருக்கும்போது சில உதவிகள் உங்களுக்கு கிடைத்திருக்கும். இனிமேலும் அது கிடைக்குமா என்கிற கேள்வி உங்களுக்கு எழ வாய்ப்பிருக்கிறது. நீங்கள் எப்போது வேண்டுமானாலும் விஜயகாந்த்திடம் உதவி கேட்பது போல் எங்கள் இல்லம் வந்து உதவி கேட்கலாம். எங்களால் முடிந்தவற்றை கண்டிப்பாக நாங்க செய்வோம்" என்றார்.


Click it and Unblock the Notifications











