பிரேமம் பட இயக்குநரின் அடுத்த படைப்பு.. டைட்டில், ஹீரோ யார் என எல்லா அப்டேட்டும் வெளியானது!
திருவனந்தபுரம்: பிரேமம் பட இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் தனது அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இளமை துள்ளலுடன் இளைஞர்களை ஈர்க்கும் படங்களை இயக்குவதில் கில்லாடியாக உள்ளார் அல்போன்ஸ் புத்திரன்.
பிரேமம் படத்தைத் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு பிறகு தனது அடுத்த படத்தை இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

நேரம்
சின்ன சின்ன ஷார்ட் ஃபிலிம்களை இயக்கி பிரபலமான அல்போன்ஸ் புத்திரன், நேரம் படம் மூலமாக இயக்குநராக அறிமுகமானார். நிவின் பாலி, நஸ்ரியா மற்றும் பாபி சிம்ஹா நடிப்பில் வெளியான அந்த படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

பிரேமம்
கடந்த 2015ம் ஆண்டு இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி, சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன் மற்றும் மடோனா செபஸ்டியன் நடிப்பில் வெளியான பிரேமம் திரைப்படம், மலையாளத்தில் மட்டுமே வெளியான போதும், தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

5 ஆண்டுகளாக
2015ம் ஆண்டு வெளியான பிரேமம் திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நிலையில், தொடர்ந்து பல படங்களை இயக்குவார் அல்போன்ஸ் புத்திரன் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த 5 ஆண்டுகளாக புதுப்பட அறிவிப்பு எதையுமே அவர் வெளியிடவில்லை. சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட படங்களில் எடிட்டிங் பணிகள் மற்றும் இன்னும் பிற சினிமா பணிகளில் ஈடுபட்டு வந்ததாக தகவல்.

அடுத்த பட அறிவிப்பு
இந்நிலையில், தனது சமூக வலைதள பக்கத்தில் திடீரென தனது அடுத்த பட அறிவிப்பை இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் வெளியிட்டுள்ளார். அந்த செய்தி அறிந்தவுடன் பிரேமம் ரசிகர்கள் கொண்டாட்ட மோடுக்கு மாறி உள்ளனர். அதுவும் இந்த படத்திற்கு ‘பாட்டு' என்ற டைட்டிலையும் வைத்துள்ளார்.

ஹீரோ யார்
அல்போன்ஸ் புத்திரன் அடுத்த படத்தை இயக்குகிறார் என்ற அறிவிப்பு வெளியானவுடன் மூன்றாவது முறையாக நிவின் பாலி தான் ஹீரோவா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்து விடக் கூடாது என்பதற்காக, ஹீரோ யார் என்பதையும் அறிவித்துள்ளார். டிரான்ஸ், சி யூ சூன் என மிரட்டி வரும் நடிகர் ஃபகத் ஃபாசில் தான் ஹீரோவாம்.

இசையும் நானே
எடிட்டிங்கில் அதீத திறமை கொண்ட அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்திலும் இரண்டு பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்து அசத்தினார். மூன்றாவதாக அவர் இயக்க உள்ள ‘பாட்டு' படத்திற்கு இசையும் அவர் தான் இசைக்கப் போகிறாராம். அதற்காகத் தான் இத்தனை ஆண்டு கால தாமதமா? என்பதை அவர் தான் விளக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











