பிரேம்ஜி வீட்டில் விசேஷம்.. சிம்பு கணித்ததை சொல்லி கொண்டாடும் மனைவி இந்து
சென்னை: நடிகர், இசையமைப்பாளர், பாடகர் என பல முகங்களை கொண்டிருக்கும் பிரேம்ஜி அமரன் சில வருடங்களுக்கு முன்பு இந்து என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அந்தத் திருமணத்தை வெங்கட் பிரபு முன் நின்று நடத்தி வைத்தார். அந்தத் தம்பதிக்கு ஒரு மகளும் பிறந்திருக்கிறாள். இந்நிலையில் அவர்கள் இன்று தங்களது திருமண நாளை கொண்டாடுகிறார்கள்.
இயக்குநர் வெங்கட் பிரபுவின் சகோதரர் பிரேம்ஜி அமரன். வெளிநாட்டில் இசை தொடர்பான படிப்பை படித்துவிட்டு யுவன் ஷங்கர் ரஜாவிடம் பணியாற்றிய அவர் பல பாடல்களை பாடியிருக்கிறார். சில படங்களுக்கு இசையமைக்கவும் செய்திருக்கிறார். அவருக்குள் இருக்கும் நடிப்பு திறமையை கண்டுகொண்டு சினிமாவுக்கு அழைத்து வந்தார் சிம்பு. இந்த ப்ளாட் ஃபார்ம் அவருக்கான அடையாளத்தை அதிகம் கொடுத்தது. வெங்கட் பிரபுவும் இயக்குநர் என்பதால் பிரேம்ஜி வண்டி ஓடுவதில் பெரிய பிரச்னை எதுவும் இருந்ததில்லை.

சிங்கிள் டூ காதல்: கோலிவுட்டில் சிங்கிள்களுக்கான அகராதியில் முதல் பக்கத்தில் பிரேம்ஜிதான் இடம்பெற்றிருந்தார். தான் அணிந்த டீ ஷர்ட்டுகளில் எல்லாம் சிங்கிள் தொடர்பான ரகளை வாசகங்கள் இடம்பெற்றிருக்கும். வாரம் முழுவதும் சினிமா டியூட்டி, வார இறுதியில் சூப்பர் பார்ட்டி என்று வாழ்க்கையை கழித்துக்கொண்டிருந்த அவருக்கு; காதல் மலர்ந்தது. சேலத்தை சேர்ந்த இந்து என்ற பெண்ணுடன் சோஷியல் மீடியாவில் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.
தந்தை ஸ்தானத்தில் அண்ணன்: பிரேம்ஜி திருமணம் செய்துகொள்ளமாட்டாரா என குடும்பத்தினர் ஏங்கிய நிலையில்தான்; அவருக்குள் காதல் மலர்ந்தது. அதை பார்த்து நிம்மதியடைந்த வீட்டார் உடனடியாக திருமண ஏற்பாடுகளை செய்தார்கள். திருத்தணியில் வைத்து நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் முன் நின்று திருமணத்தை நடத்தி வைத்தார் வெங்கட் பிரபு. சிம்ப்பிளாக நடந்த திருமணத்தில் திரைத்துறையிலிருந்து ஜெய், வைபவ், டிடி, சங்கீதா உள்ளிட்ட சிலர் மட்டுமே கலந்துகொண்டார்கள்.
பிரேம்ஜிக்கு வந்த பொறுப்பு: திருமணமாகி முழு குடும்பஸ்தனாக மாறிய அவர்; பார்ட்டிகளை எல்லாம் தவிர்த்துவிட்டு வேலை விட்டால் வீடு; வீடு விட்டால் வேலை என்று இருக்கிறார். அவருக்குள் வந்த மாற்றத்தை பார்த்து அனைவருமே ஸ்தம்பித்து போனார்கள். கடந்த வருடத்தில்தான் அவர்களுக்கு மகள் பிறந்தாள். மகள் பிறந்ததிலிருந்து மேற்கொண்டு கூடுதல் பொறுப்போடு செயல்படுகிறாராம்.
வீட்டில் விசேஷம்: இந்நிலையில் பிரேம்ஜி அமரன் - இந்து தம்பதிக்கு இன்று இரண்டாவது ஆண்டு திருமண நாள் ஆகும். அதனையொட்டி அந்தத் தம்பதி இந்த ஸ்பெஷல் நாளை சூப்பராக கொண்டாடிவருகிறார்கள். மாநாடு படத்தின் ஷூட்டிங்கில், பிரேம்ஜியிடம் சிம்பு, 'உனக்கு கல்யாணம் ஆகிவிடும் பாரு. 100 சதவீதம் ஆகும். என் கணிப்புப்படி இந்நேரம் பொண்ணு வந்திருக்கணும். வரும் பாரு' என சொன்ன வீடியோவை இரண்டு பேரும் ஷேர் செய்திருக்கிறார்கள். அது சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.


Click it and Unblock the Notifications
