சேரனை வைத்து திருமணத்தை முடித்த கையோடு ஹாரர் கம் த்ரில்லரில் குதித்த பிரினிஸ்!
சென்னை: இயக்குநர் சேரனை வைத்து திருமணம் படத்தை தயாரித்த பிரினிஸ் நிறுவனம் தற்போது ஹாரர் த்ரில்லர் படத்தை தயாரிக்கும் பணியில் இறங்கியுள்ளது.
தமிழ் சினிமாவில் புதிதாக என்ட்ரி கொடுத்த நிறுவனம் பிரினிஸ் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட். இந்நிறுவனம் தனது முதல் தயாரிப்பாக, தமிழ் சினிமாவின் தரமான இயக்குநர்களில் ஒருவரான சேரனை வைத்து திருமணம் படத்தை தயாரித்தது.
சேரன், சுகன்யா, எம்எஸ் பாஸ்கர், தம்பி ராமையா, உமாபதி ராமையா, ஜெயப்பிரகாஷ் உட்பட ஒரு பெரிய நடிகர் பட்டாளமே இந்த படத்தில் நடித்திருந்தது. இயக்குநர் சேரன் கைவண்ணத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்த படம் திருமணம்.

பக்கா ஃபேமிலி ஸ்டோரி
இதனால், நிச்சயம் ஃபேமிலி சப்ஜெக்ட்டாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் இருந்தது. மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் பக்கா ஃபேமிலி ஸ்டோரியாக இருந்தது திருமணம். இதனால் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது இப்படம்.

புரடெக்ஷன் நம்பர்-2
இந்நிலையில் தற்போது இந்நிறுவனம் தனது இரண்டாவது படைப்பில் இறங்கியுள்ளது. இயக்குநர் மனோஜ்குமார் இந்தப்படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக "Production No.2" என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

ஹாரர் கம் த்ரில்லர்
இதில் நடிகர் விதார்த் கதாநாயகனாக நடிக்கிறார். நெடுநெல்வாடை படத்தின் நாயகி அஞ்சலி நாயர் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். பிக்பாஸ் புகழ் சென்ட்ராயன், இமான் அண்ணாச்சி, சங்கிலி முருகன், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். இப்படம் முழுக்க முழுக்க ஹாரர் கம் த்ரில்லராக உருவாகி வருவதாக இயக்குநர் குழு தெரிவித்துள்ளது

தயாரிப்பாளர் பிரேம்நாத் சிதம்பரம்
பிரினிஸ் நிறுவனத்துக்காக இப்படத்தை தயாரிப்பாளர் பிரேம்நாத் சிதம்பரம் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு, கடந்த மாதம் 28 ஆம் தேதி முதல் சென்னையின் பல பகுதிகளில் நடைபெற்று வருகிறது. பரத் ராகவன் என்பவர் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

கேமராமேன்
'மெட்ரோ' மற்றும் 'குரங்கு பொம்மை' படத்திற்கு ஒளிப்பதிவு செய்த என்.எஸ்.உதயகுமார் இப்படத்திற்கும் ஒளிப்பதிவு செய்கிறார். "பியார் பிரேமா காதல்" படத்திற்கு எடிட்டிங் செய்த மணி குமரன்தான் இப்படத்திற்கும் எடிட்டிங் செய்யப் போகிறார்.

தயாரிப்பு நிர்வாகம்
பருத்திவீரன், நாடோடிகள், சுப்ரமணியபுரம் மற்றும் 'ரேணிகுண்டா' படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் ராஜசேகர் இப்படத்திற்கும் ஸ்டண்ட் செய்ய உள்ளார். படத்தின் பெயர் விரைவில் அறிவிக்கப்படும் என தயாரிப்புக்குழு தெரிவித்துள்ளது. படத்தின் தயாரிப்பு நிர்வாகத்தை அந்நிறுவனத்தின் CEO வெள்ளை சேது மேற்கொண்டு வருகிறார்.


Click it and Unblock the Notifications











