‘’தெய்வீக குரல் நீண்ட அமைதிக்கு சென்றுவிட்டது’’... குடியரசுத்தலைவர், பிரதமர் இரங்கல்!
மும்பை : கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் பாடகர் லதா மங்கேஷ்கர் காலமானார். அவருக்கு வயது 92.
Recommended Video
தொடர்ந்து 20 நாள்கள் சிகிச்சைக்குப் பிறகு அவரின் உடல்நலம் தேறியது. இதனால் கடந்த வாரம் வெண்டிலேட்டர் சிகிச்சை நிறுத்தப்பட்டது. நேற்று அவரின் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமாகி சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்துள்ளார்.
அவரது மறைவுக்கு குடியரத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

லதா மங்கேஷ்கர்
கொரோனா தொற்று தொடர்பான லேசான அறிகுறிகளுடன், தெற்கு மும்பையின் ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் ஜன.8-ல் லதா மங்கேஷ்கர் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரது உடல்நிலை சற்று கவலைக்கிடமாக இருந்ததால் உடனடியாக ஐசியூ வார்டில் வைத்து பராமரிக்கப்பட்டார்.

ப்ரீச் கேண்டி மருத்துவமனை
தொடர்ந்து அவருக்கு வெண்டிலேட்டர் வசதி பொருத்தப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால், உலகம் முழுவதுமுள்ள லதா மங்கேஷ்கரின் ரசிகர்கள், அவர் உடல்நலம் பெற பிரார்த்தனைகளை மேற்கொண்டு வந்தனர். கடந்த வாரம் ப்ரீச் கேண்டி மருத்துவமனை நிர்வாகம் வேண்டிலேட்டர் உதவி இன்றி சுவாசிப்பதாக அறிக்கை வெளியிட்டு இருந்தது. இதையடுத்து, அவரது ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர்.

காலை உயிரிழந்தார்
இந்நிலையில், நேற்று அவரின் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமானதாக தகவல் வெளியானது. இதையடுத்து இன்று காலை சிகிச்சை பலனின்றி லதா மங்கேஷ்கர் காலமானார். அவரது மறைவை லதாவின் சகோதரி உஷா மங்கேஷ்கர் உறுதி செய்தார். பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நிரப்ப முடியாத வெற்றிடம்
பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், லதா மங்கேஷ்கர் மறைவு செய்தி கேட்டு வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவு கடும் வேதனை அடைந்தேன். நிரப்ப முடியாத வெற்றிடத்தை லதா மங்கேஷ்கர் விட்டு சென்றுள்ளார். இந்திய கலாச்சாரத்தின் தலைசிறந்த வீராங்கனையாக எதிர்காலத்தில் நினைவு கூரப்படுவார். அவரது இனிமையான குரல் மக்களை மயக்கும் இணையற்ற திறனைக் கொண்டிருந்தது எனத்தெரிவித்துள்ளார்.

தெய்வீக குரல் அமைதிக்கு சென்றுவிட்டது
லதா மங்கேஷ்கரின் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்துள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பாரத ரத்னா, லதா மங்கேஷ்கரின் சாதனைகள் ஒப்பிட முடியாததாக இருக்கும் என்று புகழாரம் சூட்டியுள்ளார். நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை பிறக்கும் கலைஞர் லதா மங்கேஷ்கர் என்றும், தெய்வீக குரல் நீண்ட அமைதிக்கு சென்றுவிட்ட போதிலும் அவரது பாடல்கள் அழிவில்லாமல் எப்போது இருக்கும். எங்கும் எதிரொலிக்கும் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











