தியாகராஜனுக்கு எதிரான ஃபேஸ்புக் பதிவை நீக்கிய பிரித்திகா மேனன்
சென்னை: புகைப்படக் கலைஞர் பிரித்திகா மேனன் நடிகர் தியாகராஜனுக்கு எதிராக பதிவிட்ட வலைதளப் பதிவை நீக்கியுள்ளார்.
நாடெங்கிலும் பூதாகரமாகியுள்ள மீடூ பிரச்சனையில் வரிசையாக பல பிரபலங்களின் பெயர்கள் அடிபட்டு வருகின்றன.

புகைப்படக்கலைஞரான பிரித்திகா மேனன் தயாரிப்பாளரும் நடிகருமான தியாகராஜன் மீது பாலியல் குற்றசாட்டு சுமத்தியிருந்தார்.
பிரசாந்த் நடித்த பொன்னர் சங்கர் திரைப்படத்தில் பணியாற்றியப் போது, தியாகராஜன் தவறான முறையில் அணுக முயன்றதாகவும், ஆபாச புகைப்படங்களை அவருக்கு அனுப்பியதாகவும், பிரித்திகா தங்கியிருந்த அறையின் கதவை நள்ளிரவில் தட்டியதால் அவர் பயத்தில் தூக்கம் தொலைத்ததாகவும் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றுக்கு தொலைபேசி வாயிலாக அளித்த பேட்டியில், தன்னுடைய பெயருக்கு களங்கம் விளைவிப்பதற்காக பிரித்திகா இவ்வாறு சொல்வதாகவும் அது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது எனவும் பதிலளித்தார் தியாகராஜன். மேலும், பிரித்திகாவுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்போவதாகவும் அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில் தியாகராஜன் தொடர்பாக பதிவிட்டிருந்ததை பிரித்திகாவின் ஃபேஸ்புக் பக்கத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது. அதற்கான காரணம் தெரியவில்லை.
இதுகுறித்து பிரத்தியேகமாக ஃபிலிமிபீட் நிரூபருக்கு பதிலளித்த நடிகர் தியாகராஜன், "ஒரு நடிகரின் நன்மதிப்பை சீர்குலைத்த பிறகு பிரித்திகா மேனன் முகநூல் பதிவை நீக்கியுள்ளார். ஒருவரைப் பற்றி தவறாக பதிவிட்டு ஃபேஸ்புக்கில் நீக்க முடியும். ஆனால் தியாகராஜன் என்ற நடிகர் மீது பட்ட கரையை நீக்க முடியுமா? மீடூ என்ற நல்ல மூவ்மென்ட்டை பெண்கள் தவறாக பயன்படுத்துவதற்கு இது சரியான உதாரணம்" என்றார். மேலும், அவர் மீது ஏற்படுத்திய களங்கத்திற்காக பிரித்திகா மேனன் மீது சட்டரீதியான நடவடிக்கை நிச்சயம் எடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











