காந்தி குல்லாவுடன் இளையராஜா… கவுரவ டாக்டர் பட்டம் வழங்கிய பிரதமர் மோடி
திண்டுக்கல்: இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கடந்த ஜூலை மாதம் மாநிலங்களவை நியமன எம்பி பதவி வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தற்போது இளையராஜாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம் சார்பில் அறிவிக்கப்பட்ட கவுரவ டாக்டர் பட்டத்தை பிரதமர் மோடி இளையராஜாவுக்கு வழங்கினார். .

ராஜாவுக்கு டாக்டர் பட்டம்
காந்திகிராமத்தில் உள்ள காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தின் 36-வது பட்டமளிப்பு விழாவும் காந்தி கிராம நிறுவனத்தின் பவள விழாவும் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு மாணவ, மாணவிகள் உள்ளிட்ட மொத்தம் 2,314 பேருக்கு பட்டங்களை வழங்கினார். அதனைத் தொடர்ந்து இசைஞானி இளையராஜாவுக்கும் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தார் பிரதமர் மோடி. அப்போது இளையராஜாவும் பிரதமர் மோடியும் காந்தி குல்லாவை அணிந்திருந்தனர். இதனையடுத்து திரை பிரபலங்களும் ரசிகர்களும் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் மோடி வருகை
முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் மதியம் 2 மணிக்கு மதுரை சென்றடைந்தார். பின்னர் மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரைக்கு சென்றார். அங்கு பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள் வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி கார் மூலம் காந்தி கிராமம் கிராமிய பல்கலைக்கழகத்துக்கு சென்றடைந்தார். அதனைத் தொடர்ந்தே பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

ராஜாவுக்கு இரண்டாவது அங்கீகாரம்.
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு ஜூலை மாதம் மாநிலங்களவை நியமன எம்பி பதவி வழங்கப்பட்டது. அதன் பின்னர் பிரதமர் மோடியை இசையமைப்பாளர் இளையராஜா சந்திக்கவில்லை. இந்நிலையில், திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் முதல் முறையாக பிரதமர் மோடியை சந்தித்தார் இளையராஜா. ஒரே ஆண்டில் இரண்டு சிறப்பான அங்கீகாரங்கள் இளையராஜாவுக்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவில் மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமனுக்கும் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படது.

தமிழ்த் திரையிசையின் பெருமை
தமிழ்த் திரையுலகில் இசையமைப்பாளர் இளையராஜா செய்திட்ட சாதனைகள் ஏராளம் எனலாம். 46 ஆண்டுகளில் ஆயிரம் படங்களுக்கும் மேல் இசையமைத்துள்ள இளையராஜா, ஏராளமான இசை ஆராய்ச்சிகளையும் செய்துள்ளார். இந்திய அளவிலும் சர்வதேச அரங்கிலும் பல விருதுகளும் கவுரவங்களும் கிடைத்துள்ள இளையராஜாவுக்கு,, இன்று வழங்கப்பட்ட கவுரவ டாக்டர் பட்டம் மேலும் ஒரு அங்கீகாரமாக அமைந்துள்ளது. இளையராஜாவிற்கு கிடைத்துள்ள இந்த கவுவரவ டாக்டர் பட்டம் தமிழ்த் திரையுலகுக்கும் பெருமை சேர்த்துள்ளதாக சினிமா ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











