பிரதமர் மோடி கைகளால் டாக்டர் பட்டம்… இளையராஜாவுக்கு காத்திருக்கும் அடுத்த அங்கீகாரம்…
சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கடந்த ஜூலை மாதம் மாநிலங்களவை நியமன எம்பி பதவி வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தற்போது இளையராஜாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளது.
இளையராஜாவுக்கு திண்டுக்கல் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள கவுரவ டாக்டர் பட்டத்தை பிரதமர் மோடி வழங்குகிறார்.

ராஜா ராஜா தான்
தமிழ்த் திரையுலகின் விலை மதிப்பில்லாத சொத்து என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் இசையமைப்பாளர் இளையராஜா. 46 ஆண்டுகளில் ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்து ரசிகர்களின் நெஞ்சங்களில் ராஜ சிம்மாசனமிட்டு அமர்ந்துள்ளார். இசைத் துறையில் ஏராளமான சாதனைகளைப் படைத்துள்ள இளையராஜாவுக்கு, இந்திய அளவிலும் சர்வதேச அரங்கிலும் பல விருதுகளும் கவுரவங்களும் கிடைத்துள்ளன. இந்நிலையில், இந்தாண்டு மேலும் இரண்டு சிறப்பு அங்கீகாரங்கள் இளையராஜாவின் இசை பயணத்துக்கு பெருமை சேர்த்துள்ளன.

கெளரவ டாக்டர் பட்டம்
திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நாளை (நவ 11) நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு, 2018, 2019, 2019 -2020 ஆகிய கல்வி ஆண்டுகளில் பயின்ற மாணவர்களுக்கு பட்டம் வழங்குகிறார். இவ்விழாவில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும் கவுரவ டாக்டர் பட்டம் வழங்குகிறார் பிரதமர் மோடி. மேலும் மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமனுக்கும் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது. இதற்காக பல்கலைக்கழக வளாகத்தில் 300 நபர்கள் அமரும் வகையில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இரண்டாவது அங்கீகாரம்.
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் கிடைக்க உள்ளது, அவரது ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜூலை மாதம் இளையராஜாவுக்கு மாநிலங்களவை நியமன எம்பி பதவி வழங்கப்பட்டது. அதன் பின்னர் பிரதமர் மோடியை இசையமைப்பாளர் இளையராஜா சந்திக்கவில்லை. இந்நிலையில், திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் முதல்முறையாக பிரதமர் மோடியை சந்திக்கிறார் இளையராஜா. ஒரே ஆண்டில் இரண்டு சிறப்பான அங்கீகாரங்களை பெற்றுள்ள இளையராஜாவுக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

முதலமைச்சர் பங்கேற்பு
காந்தி கிராம பல்கலைகழகத்தின் 36வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆளுநா் ஆர்.என் ரவி ஆகியோரும் பங்கேற்கின்றனர். இந்த விழாவுக்காக பிரதமர் மோடி தனி விமானத்தில் நாளை மதுரை வருகிறார். இதனையொட்டி மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய மத்திய படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக விமான நிலைய உள்வளாகத்திற்குள் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. நேற்று முதல் 11ம் தேதி வரை 3 நாட்கள் பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 12ம் தேதியில் இருந்து பார்வையாளர்கள் வழக்கம்போல், உள்வளாகத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











