நடிகரும் இயக்குநருமான பிரதாப் போத்தன் மறைவு.. பிருத்விராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் இரங்கல்
சென்னை: நடிகரும் இயக்குநருமான பிரதாப் போத்தன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை 8 மணியளவில் காலமானார்.
Recommended Video
தென்னிந்திய திரையுலகில் மூத்த நடிகராகவும், சிறந்த இயக்குநராகவும் விளங்கிய பிரதாப் போத்தன் காலமான செய்தி ஒட்டுமொத்த சினிமா பிரபலங்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
அங்கிள் எங்களை விட்டு போயிட்டீங்களே என நடிகர் பிருத்விராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், பல பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் பிரதாப் போத்தனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பிருத்விராஜ் இரங்கல்
மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான பிருத்விராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், Rest in peace uncle! I will miss you. என உடைந்த இதய எமோஜியை போட்டு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். நடிகர் பிரதாப் போத்தன் மலையாளத்தில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள நிலையில், மலையாள திரையுலகமே அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறது.

சென்னை வீட்டிலேயே
அடுத்த மாதம் வந்தால் 70 வயது நிறைவடைந்திருக்கும் நிலையில், சென்னையில் உள்ள தனது ஃபிளாட்டில் உடல் நலக்குறைவு காரணமாக பிரதாப் போத்தன் உயிரிழந்தது ஒட்டுமொத்த சினிமா உலகிற்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் என பலரும் பிரதாப் போத்தன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

வெற்றி விழா இயக்குநர்
நடிகர் கமல்ஹாசனின் நெருங்கிய நண்பரான பிரதாப் போத்தன், அவருடனும் நடிகர் ரஜினியுடனும் பல படங்களில் நடித்துள்ளார். கமல்ஹாசனின் வெற்றி விழா படத்தையே இயக்கியவர் இவர் தான். வாழ்வே மாயம், வறுமையின் நிறம் சிவப்பு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பிரதாப் போத்தனின் மறைவுக்கு கமல் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கண்ணீர் அஞ்சலி
வெற்றி விழா, மைடியர் மார்த்தண்டம், லக்கி மேன், சீவலப்பேரி பாண்டி உள்ளிட்ட படங்களை இயக்கிய சிறந்த இயக்குநர் பிரதாப் போத்தன் மறைவு செய்தி வருத்தமளிக்கிறது என பிரபலங்களும், ரசிகர்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மூடுபனி படத்தில் இவரது நடிப்பை எப்போதுமே மறக்க முடியாது என பலரும் இவர் நடித்த படக் காட்சிகளை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











