சிறப்பு விமானத்தில் கேரளா திரும்பிய பிரபல நடிகர் பிருத்விராஜ்.. 14 நாள் தனிமைப்படுத்தப்பட்டார்!
சென்னை: வெளிநாட்டில் சிக்கித் தவித்த பிரபல ஹீரோ, கேரளா திரும்பினார்.
Recommended Video
பிரபல மலையாள ஹீரோ பிருதிவிராஜ். இவர் ஆடுஜீவிதம் என்ற படத்தில் நடித்து வருகிறார். பிளஸ்சி இயக்குகிறார்.
இதில் நடிகைகள் அமலா பால், அபர்ணா பாலமுரளி, வினீத் ஶ்ரீனிவாசன், லக்ஷ்மி சர்மா உட்பட பலர் நடிக்கின்றனர்.

பாலைவனம்
ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்க்கும் இந்தப் படத்தின் கதை வெளிநாட்டில் பாலைவனத்தில் நடப்பது போல அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இதன் படப்பிடிப்பை ஜோர்டானில் நடத்த முடிவு செய்தனர். அதன்படி இயக்குனர் பிளஸ்சி, ஹீரோ பிருத்விராஜ் உட்பட சுமார் 58 பேரைக் கொண்ட இந்தப் படக்குழு கடந்த மார்ச் மாதம் ஜோர்டான் சென்றது.

படப்பிடிப்பு
அங்குள்ள வாடி ரம் என்ற பாலைவனப் பகுதியில் படப்பிடிப்பு நடந்தது கொண்டிருந்த போதுதான், கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்தது. ஏப்ரல் 10-ம் தேதி வரை படப்பிடிப்பை நடத்தக் கொள்ள, அந்நாட்டு அனுமதி அளித்திருந்தது. பின்னர் அங்கு கொரோனாவுக்கான கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டதால், படப்பிடிப்பு திடீரென்று நிறுத்தப்பட்டது.

மீண்டும் ஷூட்டிங்
இதனால் படக்குழு இந்தியா திரும்ப முடிவு செய்தது. ஆனால், சர்வதேச விமான போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டு விட்டதால் அங்கேயே தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதுபற்றி நடிகர் பிருத்விராஜ் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்தார். பின்னர், இந்தப் படக்குழு ஷூட்டிங்கை அங்கு மீண்டும் ஆரம்பித்து படப்பிடிப்பை முடித்தது.

சிறப்பு விமானம்
இதை பிருத்விராஜ் கடந்த சில நாட்களுக்கு முன் தெரிவித்திருந்தார். மொத்தப் படக்குழுவும் எடுத்த செல்பி போட்டோவையும் அவர் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் ஜோர்டானில் இருந்து சிறப்பு விமானம் மூலம் அவர்கள் நேற்று டெல்லிக்கு புறப்பட்டனர். நடிகர் பிருத்விராஜ், பிளஸ்சி உள்ளிட்ட படக்குழுவினர் அதில் திரும்பினர்.

தனிமைப்படுத்த..
டெல்லி வந்த அவர்கள், பின்னர் இன்று காலை கொச்சிக்கு வந்தனர். இதை நடிகர் பிருத்விராஜ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். கொச்சி விமான நிலையத்தில் இருந்து தனது சொகுசு காரில் அவர் சென்றார். வெளிநாட்டில் இருந்து திரும்பிய பிருத்விராஜ், இயக்குனர் பிளஸ்சி உட்பட படக்குழுவினர் அனைவரும் 14 நாள் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.


Click it and Unblock the Notifications











