அந்த வரலாற்றுப் படத்தில் நடிப்பதா? பிரபல ஹீரோவுக்கு கடும் எதிர்ப்பு.. நெட்டிசன்ஸ் சைபர் அட்டாக்!
கொச்சி: வரலாற்று படத்தில் நடிக்கும் பிரபல ஹீரோவுக்கு எதிராக நெட்டிசன்கள் சிலர் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்துள்ளனர்.
பிரபல மலையாள ஹீரோ பிருத்விராஜ். இவர் தமிழில், கனா கண்டேன், பாரிஜாதம், மொழி, சத்தம் போடாதே, நினைத்தாலே இனிக்கும், காவியத் தலைவன் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.
இப்போது, மலையாளத்தில் பிளஸ்சி இயக்கும் ஆடுஜீவிதம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

வாரியம் குன்னன்
இதையடுத்து அவர் ஆஷிக் அபு இயக்கும் வாரியம்குன்னன் என்ற வரலாற்றுப் படத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கான அறிவிப்பை இயக்குனர் ஆஷிக் அபு வெளியிட்டிருந்தார். மெகா பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படம் பற்றி நடிகர் பிருத்விராஜூம் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். 1921 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் நடந்த மலபார் புரட்சியின் பின்னணியில் படம் உருவாகிறது.

குஞ்சாமுகமது ஹாஜி
ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்ட வாரியம்குன்னத் குஞ்சாமுகமது ஹாஜி என்கிற வீரரின் கேரக்டரில், பிருத்விராஜ் நடிக்கிறார். இதன் ஷூட்டிங்கை அந்த வீரரின் நூற்றாண்டை கொண்டாடும் விதமாக, அடுத்த ஆண்டில் தொடங்க இருக்கின்றனர். அடுத்த ஆண்டு இறுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். அதற்கான ஏற்பாடுகளில் படக்குழு உள்ளது. இதுபற்றி சமூக வலைதளத்தில் குறிப்பிட்டிருந்தார், நடிகர் பிருத்விராஜ்.

மலபார் புரட்சியின்
'உலகின் கால்பகுதியை ஆட்சிபுரிந்த ஒரு ராஜ்ஜியத்துக்கு எதிராக போராடிய மாவீரனின் கதை. அவர் வரலாறு எரிக்கப்பட்டிருந்தாலும் புதைக்கப்பட்டாலும் அந்த மாவீரர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். அவர் ஒரு தலைவர், போர்வீரர், தேசபக்தர். இந்தப் படம் 1921 ஆம் வருடம் நடந்த மலபார் புரட்சியின் முகமாக மாறிய ஒரு மனிதனைப் பற்றியது' என்று குறிப்பிட்டிருந்தார்.

புரட்சி என்பீர்களா?
இதற்கு பலர் வாழ்த்துச் சொன்னாலும் சிலர் கடுமையாக எதிர்த்துள்ளனர். வாரியம்குன்னத் ஹாஜி இப்போது தேசபக்தர் ஆகிவிட்டாரா? உங்களை போன்றவர்கள், தீவிரவாதத்துக்கு அதரவு தெரிவித்துவிட்டு அதை புரட்சி என்பீர்களா? அவர் இந்துக்களுக்கு எதிராக செயல்பட்டவர். படம் தொடங்க இன்னும் நாட்கள் இருக்கிறது. அதற்குள் பல விஷயங்கள் நடக்கும். இந்த படத்துக்கு 'வாழ்த்துகள்' என்று ஒருவர் எச்சரித்துள்ளார்.

வெளியேற வேண்டும்
இதே போல, இன்னும் சிலர் கடுமையான கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். பிருத்விராஜின் தாய், தந்தையை அவமானப்படுத்தும் விதமாகவும் சிலர் கடும் வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளனர். சிலர் இந்த படத்தில் பிருதிவிராஜ் நடிக்காமல் வெளியேற வேண்டும் என்று மிரட்டலாகக் கூறியுள்ளனர். இந்த திடீர் சைபர் தாக்குதலை எதிர்பார்க்காத பிருத்விராஜ் அதிர்ச்சி அடைந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











