'யான்' படத்தை அடுத்து.. ரவி.கே.சந்திரன் இயக்கும் ரீமேக்.. பிருத்விராஜ் ஜோடியான பிரபல ஹீரோயின்!
சென்னை: பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் இயக்கும் ரீமேக் படத்தில் பிருத்விராஜ் ஹீரோவாக நடிக்கிறார்.
தமிழில், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சிட்டிசன், கன்னத்தில் முத்தமிட்டால், பாய்ஸ் உட்பட ஏராளமான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் ரவி.கே.சந்திரன்.
மலையாளம், இந்தி, தெலுங்கு உட்பட பல்வேறு மொழி படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கூலி நம்பர் 1
கடைசியாக, இந்தியில் வருண் தாவன் நடிப்பில் வெளியான 'கூலி நம்பர் 1' படத்துக்கு ஒளிப்பதிவு செய்திருந்தார். இவர் தமிழில் யான் என்ற படத்தை இயக்கி இருந்தார். 2014 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் ஜீவா, துளசி நாயர் ஜோடியாக நடித்திருந்தனர். இதற்குப் பிறகு ஒளிப்பதிவில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார்.

அயுஷ்மன் குர்ரானா
இவர் இப்போது மீண்டும் படம் இயக்குகிறார். இந்தி ஹீரோ அயுஷ்மன் குர்ரானா, தபு, ராதிகா ஆப்தே, சைஃப் அலி கான் உட்பட பலர் நடித்து இந்தியில் சூப்பர் ஹிட்டான படம், அந்தாதுன். பிளாக் காமெடி கிரைம் த்ரில்லர் படமான இதை, பிரபல இந்திப் பட இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கியிருந்தார்.

நெகட்டிவ் சிம்ரன்
சிறந்த இந்தி படம், சிறந்த நடிகர், சிறந்த திரைக்கதை என 3 தேசிய விருதுகளைப் பெற்ற இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை தியாகராஜன் பெற்றார். இதில் பிரசாந்த் ஹீரோவாக நடிக்கிறார். பொன்மகள் வந்தாள் படத்தை இயக்கிய ஜெ.ஜெ.பிரட்ரிக் இயக்குகிறார். கார்த்திக் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சிம்ரன் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கிறார்.

ரவி.கே.சந்திரன்
இந்தப் படத்தில் தெலுங்கு ரீமேக்கில் நிதின் நடிக்கிறார். இந்நிலையில் இந்தப் படம் மலையாளத்திலும் ரீமேக் ஆகிறது. இதை ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்து இயக்குகிறார். ஆயுஷ்மன் குரானா நடித்த கேரக்டரில், பியானோ மாஸ்டராக நடிகர் பிருத்விராஜ் நடிக்க இருக்கிறார்.

ராஷி கண்ணா
மற்றும் மம்தா மோகன்தாஸ், ராஷி கண்ணா, அஹானா கிருஷ்ணா, உன்னி முகுந்தன் உட்பட பலர் நடிக்கின்றனர். படத்துக்கு பிரம்மம் என்று டைட்டில் வைத்துள்ளனர். இதன் ஷூட்டிங் வரும் 27 ஆம் தேதி தொடங்க இருப்பதாகக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











